Load Image
Advertisement

 உலகப்பொருளாதாரத்திற்கு நம்பிக்கையூட்டும் இந்தியா

ஆடிட்டர் , ஜி.கார்த்திகேயன்,karthi@gkmtax.com
ஆளும் தலைமையை தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம், போர் பீதி, அணுஆயுத அச்சம், பொருளாதார புயல், பணவீக்க அச்சுறுத்தல், விலைவாசி உயர்வு சிக்கல், வினியோக சங்கிலியில் இடைவெளி என்று உலக நாடுகள் அனைத்திலும், ஏதாவது சில பல பிரச்னைகளால், கவலை மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன.

இந்தியாவும் இதில் விதிவிலக்கல்ல. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை போன்ற சிக்கல்களை நமது நாடு சந்தித்தாலும், நமது நம்பிக்கை தளரவில்லை. சிக்கலான நேரங்களில், கடினமான, தீர்க்கமான முடிவுகள் தான் நம்மை முன்னெடுத்துச் செல்கிறது.

நிமிர்ந்த நன்னடை--இந்தியா இந்த கால கட்டத்தில், மகாகவி பாரதியின் புனிதத்துவமான வரிகளைப்போல், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் பயணிப்பதாக உலக நாடுகளின் பார்வையில் உள்ளது.
உலக நாடுகள் சந்தித்து வரும் இடியாப்பச்சிக்கல்களில், இந்தியாவும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று கவனமுடன், பொருளாதார கொள்கைகளை மோடி அரசு கவனமுடன் கையாண்டு வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளே அடிவாங்கும்போது, இந்திய பொருளாதாரம் மட்டும் என்ன ஆகுமோ என்று பதைபதைப்பு, நடுத்தரக்குடும்பங்கள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ளன.
அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கும் செய்தி இதுதான்: பயப்படும் அளவிற்கு இந்திய பொருளாதாரம் மோசமாக இல்லை என்பதுதான். சரி, அதற்கான அடிப்படை காரணங்களை அலசுவோம்.

அபார வரி வசூல்--சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,), மற்றும் நேரடி வரிகள் வாயிலாக கிடைக்கக்கூடிய வரி வருவாய் நமது நாட்டில் அதிகரித்து வருகிறது.
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தியதில் இருந்து, இரண்டாவது அதிகப்பட்ச உயர்வாக, கடந்த அக்டோபர் மாதம் 1.52 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
அதேபோல, வருமான வரி, கார்ப்பரேட் வரி வருவாயும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. 40 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து 14 லட்சம் கோடி வசூலித்து அரசு கஜானாவில் சேர்த்துள்ளது.
இது நமது நாட்டில், உள்நாட்டு வர்த்தகம், வருமானம், பணப்புழக்கம் சுணக்கமில்லாமல் இருப்பதையே உணர்த்துகிறது.
இருந்தபோதும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி இந்தியா வேகமாக வளர்ந்து வருவதால், நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டச்செலவுகளால், 'பிஸ்கல் டெபிசிட்' என்று சொல்லப்படும் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஏற்றுமதி சரிந்து வருவதால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகிறது. இது மத்திய அரசு சந்திக்க வேண்டிய சவாலான விஷயங்களாகும்.

நேரம் சரியில்லை--அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே செல்கிறது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் 83 ரூபாய் வரை சரிந்தது.
இதனால், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, கடந்த வார நிலவரப்படி, 110 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தி சமாளித்து வருகிறது. கடந்த ஜனவரியில் 0.25 சதவீதமாக இருந்த வட்டிவிகிதம் இப்போது 5.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது இன்னும் உயர வாய்ப்பிருக்கிறது.
ஏற்றுமதி அதிகரிப்பு, இறக்குமதி குறைப்பு ஒன்றே நமது அன்னிய செலாவணி தேவையை கட்டுக்குள் வைக்கும்.
அதையும் தாண்டி, சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை ஏற்றுக்கொள்ளும் இந்தியாவின் முயற்சி, சர்வதேச வர்த்தகங்களில், நாம் டாலர் சார்ந்திருப்பதை குறைக்கும்.
நாட்டில் இறக்குமதியை குறைப்பது, அதையும் ரூபாயில் செய்வது, ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதே ரூபாய் மதிப்பை வலுப்பெற செய்யும்.
இந்தியாவின் முயற்சியால், இப்போது, ரூபாயை ரஷ்யாவில் உள்ள சில வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அப்படி மாறும்பட்சத்தில், நம்முடைய வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்ய உதவிகரமாக இருக்கும். உலக அளவில், 40 சதவீத பரிவர்த்தனைகள் மட்டுமே டாலர்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
ரூபாய் மதிப்பு சரிந்தபோது, ''ரூபாய் வலுவிழக்கவில்லை, டாலர் வலுவடைகிறது,'' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தது ஒன்றும் ஜோக் அல்ல.
பவுண்டுக்கு எதிரான ரூபாய் மதிப்பு 11.5 சதவீதம் வலுவடைந்திருக்கிறது. யூரோ, யென்னுக்கு எதிரான ரூபாய் மதிப்பும் வலுவடைந்திருப்பது, இந்திய பொருளாதாரம் வலுவாக மாறி வருவதன் அறிகுறி.

தேடி வரும் முதலீடு--இன்னொரு நம்பிக்கையூட்டும் செய்தி, கிரைசில் அறிக்கையின்படி, தனியார் முதலீடுகள், அடுத்த ஆண்டில் 15 சதவீத்துக்குமேல் இருக்கும் என்று சொல்கிறது.
இதனால், ஏற்றுமதி வாய்ப்பும், வேலைவாய்ப்புகளும் அதிகமாகும். அதற்கடுத்தபடியாக, 5ஜி நெட்வொர்க் காரணமாக, ஜி.டி.பி., கூடுதலாக 2 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் இந்திய பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றும் சக்தி படைத்தவை.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது நாட்டின் வளர்ச்சி ஸ்திரமாக உயர்ந்து வருகிறது.
இது நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் நகர்வாக கருதப்படுகிறது. நாட்டில், நெருக்கடியான நேரத்தில், சரியான முடிவெடுக்கும் தலைமை இருப்பதுதான் இதற்கு காரணம் என்று உலக நாடுகள் நம்மை பிரமிப்புடன் பார்க்கின்றன.

ஏழைகள் மீது கவலை--சமீபத்தில், இந்தோனேஷியாவில் நடந்த 'ஜி20' மாநாட்டில், பேசிய பிரதமர் மோடி, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் ஏழை மக்கள் எல்லாரின் கவலைகளையும் உலகத்தலைவர்கள் முன் பிரதிபலித்தார்.
''கொரோனா, உக்ரைன் மீதான போரால், எரிபொருள், உணவு தானியம் உட்பட உலக வினியோக சங்கிலி சிதைந்து கிடக்கிறது.
''அனைத்து நாடுகளின் ஏழைகளின் வாழ்க்கையை இது சவாலாக்கியுள்ளது. இப்போதே, அன்றாட வாழ்க்கை போராட்டமாக உள்ள நிலையில், இரட்டை சுமையை தாங்கும் பணவசதி ஏழைகளிடம் இல்லை.
''கொரோனாவுக்கு பிந்தைய புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களில் உள்ளது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் தலைமை--ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி-20'க்கு இந்தியா தலைமையேற்ற அதே நாளில், பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டில் பதிவு செய்யப்பட்ட வீடியோ உரையாற்றிய பிரதமர், ''உலக புதுமைப் படைப்பு குறியீடு பட்டியலில், இந்த ஆண்டு, 40வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 2015ம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்தோம்.
''உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என்று பேசி இருக்கிறார்.

புன்னகை போதும்---'உலகின் விஸ்வகுருவாக' இந்தியா பொறுப்பேற்கும் நாள் நெருங்கி வருகிறது என்று சொன்னது உண்மையாகி, இன்று 'ஜி 20'க்கு இந்தியா தலைமை தாங்கி உள்ளது. ''போர்கள் வேண்டாம், புன்னகை போதும்,'' என்று இந்தியா வலியுறுத்தியதையே, 'ஜி20' தீர்மானமாக தந்திருக்கிறது.
நாட்டின் கொழுந்துவிட்டெரியும் பல பிரச்னைகளை தீர்ப்பதற்கு காந்திய சிந்தனையே உதவும் என்று பிரதமர் அறிவித்து, அற வழியே, அறம் சார்ந்தது என்று உலகுக்கு செய்தி சொல்லி இருக்கிறார்.
இவையெல்லாம், அன்னிய முதலீடுகளும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும், சீனா போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வருவதற்கு பெரும் காரணமாக அமையப்போகிறது.

சிக்கனம்மத்தியில் ஆள்பவர்கள், உலகத்திற்கு வழிகாட்டும் அதே வேளையில், தினமும் பொருளாதார கஷ்டங்களில் மிதிபடும் உள்ளூர் நடுத்தர, சிறு, குறு தொழில்கள் வேகமாக முன்னேறுவதற்கும் இப்போதைய சூழலுக்கு தகுந்த வழிகாட்ட வேண்டும். உதவிகளையும், நுட்பங்களையும் அதிகப்படுத்த வேண்டும்.
நடுத்தர மக்களின் அன்றாட செலவினங்கள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகளில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
'உலக நாடுகளை ஒப்பிடும்போது, நாம நல்லாதானே இருக்கோம்' என்று காலரை துாக்கிவிட்டுக்கொள்ளும் நேரமல்ல இது. கவனமாக இருக்க வேண்டிய காலம்.
நடுத்தர குடும்பங்களும், நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களும், அவசிய செலவுகள் எது என்று அலச வேண்டியது அவசியம்.
சிக்கனத்தை கடைப்பிடித்து, உற்பத்தி செலவுகளை கட்டுப்படுத்தி, எங்கே சந்தை இருக்கிறது. எந்த பொருட்களுக்கு தேவை இருக்கிறது என்பது குறித்து துல்லியமாக கவனிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அரசு திட்டங்கள் எவை, மானியங்கள் விபரங்கள் தெரிந்து கொள்வது, பணியாட்கள் நியமனம், பயிற்சி என்று கொரோனாவிற்கு பிறகான புதிய உலகத்தை புரிந்து கொண்டு நாம் தொழில் செய்தால், தோல்வியின்றி வெற்றிமாலை சூடலாம். வாழ்த்துக்கள்.வாசகர் கருத்து (22)

 • G. BALASUBRAMANIAN - New Delhi,இந்தியா

  இந்த குறிப்பிட்ட செய்தியை இந்தியாவின் ஒவ்வொரு மாகாண கவர்னர்னர்களும் அவரவரது மொழிகளில் மாற்றி படித்து புரிந்து கொண்டு அவர்கள் தங்களது ராஜ்யத்தின் முதல் மந்திரிகள் எங்கு தவறு செய்தாலும் முழு முயற்சியுடன் வெகு துணிவுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவதுடன் அதற்குண்டான செய்தி பரிவர்த்தனைகளை அவ்வப்போது இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தவறு செய்யும் தலைவர்களை மேல்கொண்டு பரிசீலனை செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்த்து அம்மாதிரி தலைமை வகிக்கும் நபார்களை வேரோடு களைந்து எறிவது முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு அனைத்து துறைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அப்போதுதான் இந்திய குரு பீடத்தை பிடிக்க முடியும். இது நிச்சயம்.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இந்திய வெற்றிக்கு முக்கிய காரணம் வாயில்லா பூச்சிகளான மக்கள், அதுவும் என்ன வரி போட்டாலும் வாயே திறக்காமல் வரிகட்டிக்கொண்டு அமைதிப்பூங்காவாக வைத்திருக்கும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட மக்களின் தியாகமே. ஆனால் மக்களுக்காக என்று கூறிக்கொண்டு மக்கள் வரிப்பணத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தினம் தினம் நாட்டையே நிலைகுலைய வைக்கும் அளவுக்கு தீவிரவாதப் போக்கினையே முழுநேர தொழிலாகக்கொண்டு செயல்படுவது தான் வருத்தமாக இருக்கிறது. இவர்கள் நாட்டின் இறையாண்மைக்காக வரிக்கட்டும் மக்களைப்போல் செயல்பட்டால் இந்தியா உலகலியே முதல் நாடக விளங்கும், வந்தே மாதரம்

 • அப்புசாமி -

  இந்தியாவுல விக்கிறமாதிரி பொதுச் சொத்துக்களை அமெரிக்கா, பிரிட்டனில் விக்க முடியாது.

 • sampath, k - HOSUR,இந்தியா

  It is not development. Only because of huge population of India coming in the second place in the world nearly 20%.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்த ஆள் பிஜேபிக்கு ஒத்து உதவுபவர்..அமெரிக்காவின் காலிஃபோர்னியாவின் GDP -3.3 T .டாலர்..மக்கள் தொகை 3.9 கோடி ...இந்தியாவின் GDP - 3.35 TR டாலர்...மக்கள் தொகை .130 கோடி..அதாவது மக்கள் தொகை 32 மடங்கு அதிகம்..ஆனால் GDP இரண்டும் சமம்..நினைத்து பாருங்கள் இந்தியர்கள் எவ்வளவு ஏழ்மையாக உள்ளார்கள் என்று..இதை வேறு பெருமை.பேசுகிறார்கள்..மக்களை ஏழைகளாக வைத்து பெருமை ஒரு கட்சி பிஜேபி.. Karlmarks says..religion is the opium of the poor. the Political party can talk religion , come to power and keep the people poor..this is what BJP is doing now..Time that India should wakeup and focus on econimoics..Good save India..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement