'தமிழ் எங்கள் தாய் மொழி; எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்த மொழி. தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழ் மொழியை அரியணையில் அமர வைத்து அழகு பார்ப்பதுதான், அண்ணாதுரை, கருணாநிதி வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலினின் தலையாயப் பணி' என்று, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.
புள்ளிவிபரங்கள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளிவிபரங்களை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 10 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் ஆறு அரசு பள்ளிகளில் மட்டுமே, 1,000-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
மொத்தம் 78 சதவீத அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 100க்கும் குறைவாகவே மாணவர்கள் படிக்கின்றனர்.
அமைச்சர் பொன்முடி கூறியதுபோல, தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழ் மொழியை அரியணையில் ஏற்ற முயற்சி செய்திருந்தால், ஏன் இந்த நிலை ஏற்படப் போகிறது?
தமிழகத்தில் பள்ளிக் கல்வி என்ற அஸ்திவாரம் சரியாக அமைக்கப்படவில்லை என்பதைத் தான், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனர் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
'தமிழ் எங்கள் உயிரோடும், உணர்வோடும் கலந்த மொழி' என்று சொன்னால் மட்டும் போதாது. தமிழ் உயிர் என்றால், உயிருக்கு உயிரான பிள்ளைகளை, தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும். தாங்கள் நடத்தும் பள்ளிகளை தமிழ்வழி பள்ளிகளாக நடத்த வேண்டும்.
ஆனால், தி.மு.க.,வினர் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. தமிழ் வழி பள்ளிகளை நடத்தாமல், ஆங்கில வழி சி.பி.எஸ்.இ., பள்ளிகளையே நடத்துகின்றனர். ஆனால், பேச்சு, எழுத்தில் மட்டும் தமிழ் முழக்கம். தாய் மொழி வழியை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையையும் தி.மு.க., எதிர்க்கிறது. தி.மு.க.,வின் இந்த இரட்டை நிலையை தமிழக மக்கள் நன்கறிவர்.
'கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் வழியில் பொறியியல் கல்வி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தமிழ் வழியில் எம்.பி.பி.எஸ்., படிக்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது' என, அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார்.
தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது இப்போது சிறப்பாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆனாலும், இந்த முயற்சியை பா.ஜ., வரவேற்கிறது.
இப்போது, தமிழ் வழியில் எம்.பி.பி.எஸ்., பாடத்திட்டங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் வரவேற்கிறோம். இதை தான், 'இந்தியா சிமென்ட்ஸ்' விழாவில் பேசும்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
கூடுதல் நிதி ஏன்?
உலகின் மூத்த மொழியான, தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை, தமிழக அரசு உடனடியாக துவங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை, தி.மு.க., அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். அப்போது தான் தமிழ் அரியணையில் ஏறும்.
சமஸ்கிருதத்துக்கு இணையாக, தமிழ் மொழிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை என்று தி.மு.க.,வினர் திரும்பத் திரும்ப பிரிவினை நோக்கத்துடன் பேசி வருகின்றனர்.
தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் உலகெங்கும் 12 கோடிக்கும் அதிகமாக இருக்கின்றனர். தமிழ் பேசும் மக்களுக்கென தனி மாநிலமும் உள்ளது.
ஆனால், சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் ஒருவர் கூட கிடையாது; அதற்கென தனி மாநிலமும் இல்லை. அதனால் தான் அந்த மொழிக்கு, மற்ற இந்திய மொழிகளை விட கூடுதலாக, மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
இது, பா.ஜ., ஆட்சியில் மட்டுமல்ல... இதற்கு முன்பு தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசிலும் கூட சமஸ்கிருதத்திற்கு சற்று கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டு வந்தது.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என்பது, இடம் மாறுதலுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களுக்காக துவங்கப்பட்டன. தமிழகத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர் பிற மாநிலங்களுக்கு பணியிடமாறுதல் பெற்றால், குழந்தைகள் தடையின்றி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டன.
எனவே, இந்த பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், ஹிந்தி இரண்டாவது மொழியாகவும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், அந்தந்த மாநில மொழிகளில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக, மூன்றாவது மொழியாக, அந்தந்த மாநில மொழிகளை படிப்பதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை மூன்றாவது மொழியாக படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக, தமிழ் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகித்த போதெல்லாம் தமிழை மூன்றாவது மொழியாக கற்பிப்பதற்கு, எந்த முயற்சியும் செய்யவில்லை. இப்போது பா.ஜ., அரசு செய்திருக்கிறது.
மாநிலப் பட்டியல்
பிரதமர் மோடி பங்கேற்ற, திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா, நெருக்கடி நிலையை அமல்படுத்தி, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் வரை கல்வி, மாநிலப் பட்டியலில் தான் இருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து விட்டு, கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றுவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது காங்கிரஸ் அரசு.
கடந்த 1989 - -90ல் வி.பி.சிங் அரசு, 1996- - 97ல் தேவகவுடா அரசு, 1997- - 1998ல் குஜ்ரால் அரசு, 1999- - 2003ல் வாஜ்பாய் அரசு, 2004- - 2013ல் மன்மோகன் சிங் அரசு என, 15 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க., அதிகாரத்தில் இருந்தது.
தி.மு.க., ஆதரவை விலக்கிக் கொண்டால், மத்திய அரசு கவிழும் என்ற நிலை இருந்த காலமும் இருந்தது. அப்போதெல்லாம் கல்வியை, மாநில பட்டியலுக்கு மாற்ற, எந்த முயற்சியையும் தி.மு.க., எடுக்கவில்லை.
மன்னிப்பு கேட்பாரா?
மத்தியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருந்தபோது, ஏன் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சி எடுக்கவில்லை என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்; அதற்காக, அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
அரசியல் ஆதாயம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, யார் மீது பழி போடலாம் என்று காரணத்தை தேடிக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.
மொழியை வைத்து அரசியல் நடத்துவது, இனி பலன் தராது என்பதை தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும்.
ஆம், தேவையில்லாத இந்தித் திணிப்பை மூட்டை கட்டிட்டு ஆக்க பூர்வமா செயல்படுங்க.