ஏழைகளுக்கு(பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு) அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக,2019ம் ஆண்டில், 103வது அரசியல் சட்ட திருத்த மசோதா பார்லிமென்டின் இரு சபைகளிலும், எம்.பி.,க்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
'இந்த அரசியல் சட்டத் திருத்தம் செல்லாது' என அறிவிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், 30க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க., சார்பில், அதன் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரும், இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வில், '10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என, மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இரண்டு நீதிபதிகள் அதற்கு மாறாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனவே, பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில், 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என, உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு உறுதி செய்துள்ளது.
இதன் வாயிலாக, ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை, உரிமையை மீறிய செயல் என்ற வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு அளித்த இரண்டு நீதிபதிகளில் ஒருவரான ரவீந்திர பட், 'பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது, மானியங்கள் உள்ளிட்ட அரசின் பொதுவான மற்ற சலுகைகளை பெற வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பெற, அந்த சலுகையை நீட்டிப்பது சரியல்ல. ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு மட்டுமே, இதுவரை நம்நாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியானவற்றுக்கு அல்ல.'பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க, கல்வி உதவித் தொகை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதை விடுத்து, ஜாதி பாகுபாடுகளை ஒழிப்பதற்கு வழங்கப்பட்டது போன்ற, இட ஒதுக்கீட்டை வழங்குவது சரியல்ல' என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பெரும்பான்மை தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான பேலா எம்.திரிவேதி, 'ஏழைகளுக்கான, 10 சதவீத இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்று கூற முடியாது. பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு, தனி ஒதுக்கீடு அளிக்க, பார்லிமென்ட் எடுத்த உறுதியான நடவடிக்கையாக அதை பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார். மேலும், '10 சதவீத இட ஒதுக்கீடு முடிவில்லா காலத்திற்கு தொடரக்கூடாது' என, மற்றொரு நீதிபதியான ஜே.பி.பார்திவாலா கூறியுள்ள கருத்தும் ஏற்கத்தக்கதே.
நம் நாட்டில் பாகுபாட்டில் ஜாதி பாகுபாடே முதன்மையானதாக உள்ளது. இருந்தாலும், காலத்திற்கு ஏற்ற வகையில், பாலினம், பொருளாதார நிலைமை, பிராந்தியம் உள்ளிட்ட பல அம்சங்களையும், பின்தங்கியவற்றின் பிரிவில் சேர்ப்பதில் தவறில்லை. அந்த அடிப்படையில், ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரை, இட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் கொண்டு வருவதும் வரவேற்கத்தக்கதே.அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், பொருளாதார அளவுகோல்களை சேர்க்கவில்லை. ஏனெனில், வேலையில் இருப்பவர்கள் யாரும் ஏழைகள் இல்லை என்பது, அவர்களின் கருத்து.
நாடு சுதந்திரம் அடைந்த போது, 65 முதல், 80 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்ததாக மதிப்பீடுகள் கூறுகின்றன. அந்த விகிதம் தற்போது உயர்ந்திருக்க வாய்ப்பு இல்லை. மாறாக, 20 முதல், 30 சதவீதமாக குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இது தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டை, அரசு அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். இட ஒதுக்கீடு என்றென்றும் நீடிக்கக் கூடாது. அது வெற்றிகரமான முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் எனில், அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, அந்த அம்சங்கள் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற நீதிபதிகளின் கருத்தும் ஏற்கத்தக்கதே.
அரசியல் சட்டம், சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதியளித்துள்ளது; அந்த லட்சியத்தை அடைவதை நோக்கி பயணிப்பதே அரசுகளின் பணி. அதற்கேற்ற வகையில், அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு. அதையே மத்திய அரசு செய்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!