Load Image
Advertisement

ஆட்டோகாரர்கிட்ட ஐடியா கேக்கறாரு மம்மி உதவி கேட்க வந்தா தாலி கட்டுறாரு 'மாஜி!'

சித்ராவும், மித்ராவும் டூ வீலரில், சிங்காநல்லுார் போய்க் கொண்டிருந்தனர். லங்கா கார்னர் கீழ் பாலத்தைக் கடக்கும்போது, வண்டியை ஓட்டிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா...

''அக்கா! பார்த்தீங்களா...முன்னெல்லாம் ஒரு மணி நேரம் மழை அடிச்சாலே, ஒரு நாளுக்கு இந்த பாலத்துல போக முடியாது. இப்போ அப்பப்போ தண்ணியை வெளியேத்திர்றாங்க. அவிநாசி ரோடு கீழ் பாலம், கிக்கானி பாலம் எங்கேயுமே மழைத்தண்ணி நிக்கிறதில்லை. கார்ப்பரேஷன் கமிஷனர் வேஷ்டியை....இல்லையில்லை பேன்ட்சை மடக்கிவிட்டு, களத்துல இறங்கி வேலை பாக்குறாரு!''

மித்ரா முடிக்கும் முன், சித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...

''ஆமா மித்து...நிஜமாவே அவரோட களப்பணியை பாராட்டணும். அவர் மட்டுமில்லை...நம்ம கலெக்டரும் களத்துல இறங்கிக் கலக்குறாரு...உண்மையிலேயே நல்ல டீம்தான்...ஆனா, அப்பிடியே ரெண்டு பேரும், சிட்டிக்குள்ள எந்தெந்த ரோடு மோசமா இருக்குன்னு, காரை எடுத்துட்டு நகர்வலம் வந்து கள ஆய்வு பண்ணி, போட்டோ, வீடியோ எடுத்து முதல்வருக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பி, நிதி வாங்குனா நல்லாருக்கும்!''

சித்ராவின் கருத்தை ஆமோதித்துத் தலையாட்டிய மித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''எனக்கென்னவோ நம்ம மக்களை இந்த கவர்மென்ட்ல, 'வச்சு செய்யுறாங்க'ன்னு தோணுது... இன்னும் ஒரு வருஷத்துக்கு இப்பிடியேதான் ரோடுகளை வச்சிருப்பாங்க...2024ல எலக்சன் வர்றதால அடுத்த வருஷக் கடைசியில, ரோடுகளை சரி பண்ணிட்டு, அதெல்லாம் படம் எடுத்துப் போட்டு, எலக்சனுக்கு விளம்பரம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...!''

மித்ராவின் தோளில் தட்டிய சித்ரா, தன் பங்கிற்கு கவர்மென்ட்டை வறுத்தெடுத்தாள்...

''மித்து! நிச்சயம் அடுத்த தடவை ஜெயிக்க முடியாதுன்னுதான் ஆளும்கட்சியில் பல கவுன்சிலர்கள், நிர்வாகிகள் வசூல்ல இறங்கீட்டாங்க...!''

''கரெக்டா சொன்னீங்க அக்கா...செல்வபுரம் ஐ.யு.டி.பி., காலனியில ஹவுசிங் போர்டுல வீடு வாங்கித் தர்றதா சொல்லி, 78வது வார்டு ஆளும்கட்சி முக்கியப் புள்ளிகளான அண்ணனும், தங்கச்சியும், லட்சக்கணக்குல வசூல் பண்ணுனதா பேசுனோமே...!''

''ஆமா...அதுக்கென்ன இப்போ!''

''அந்தத் தகவல் 'லீக்' ஆனதும், அதை நீங்கதான் சொல்லியிருப்பீங்கன்னு, அங்க குடியிருக்கிறவுங்களை ரெண்டு பேரும் மெரட்டிருக்காங்க...மீடியாக்களைக் கூப்பிட்டு, 'எதிர்க்கட்சிக்காரங்கதான் பணம் வசூல் பண்றாங்க'ன்னு, பேட்டி கொடுக்கச் சொல்லிருக்காங்க!''

''வீடு, வசூல்னதும் ஞாபகம் வந்துச்சு...மேட்டுப்பாளையத்துல புதுசா சொத்து வரி போடுறதுக்கு, வீடு, கடைகளை அளக்குற வேலையில முனிசிபாலிட்டிகாரங்க இறங்கிருக்காங்க. வாங்குன அனுமதியை விட, கொஞ்சம் அதிகமா கட்டியிருந்தா அதுக்கு 'பைன்'தான் போடணும். ஆனா அதைச் செய்யாம, ஒவ்வொரு கட்டடத்துலயும் ஆயிரக்கணக்குல லஞ்சம் வாங்கீட்டு இருக்காங்க!''

''இவங்களை எல்லாம் மிஞ்சுற மாதிரி, அரசு வேலை வாங்கித்தர்றேன்னு சொல்லி, ஒருத்தர் 'செம்ம பிராடு' பண்ணிருக்காரே...!''

குறுக்கிட்டுப் பேசிய சித்ரா... ''ஓ...அந்த ஆத்மா சிவகுமாரைப் பத்திச் சொல்றியா...கவர்மென்ட் வேலை வாங்கித்தர்றதாச் சொல்லி, மோசடி பண்ணிட்டார்னு மூணு நாளைக்கு முன்னாடி, டிஸ்ட்ரிக்ட் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் அரெஸ்ட் பண்ணுனாங்களே....!''

''அவரேதான்...அவர் ஒரு வருஷமா தலைமறைவா இருந்ததா போலீஸ்ல சொல்றாங்க...ஆனா அவரு, வருஷா வருஷம் நம்ம சென்ட்ரல் ஜெயில்ல இருக்குற, வ.உ.சி., இழுத்த செக்குக்கு மாலை போட்டு போஸ் கொடுப்பாரே... அந்த படம், வீடியோ எல்லாம் பேப்பர், 'டிவி' நியூஸ்ல எல்லாம் வருமே...அப்பல்லாம் இவுங்க என்ன பண்ணுனாங்களாம்?''

''அதான் எல்லாருக்கும் 'டவுட்'டா இருக்கு...அ.தி.மு.க., 'மாஜி' மினிஸ்டர்ஸ் சில பேரைச் சொல்லி, கவர்மென்ட் வேலை வாங்கித்தர்றதா பல பேரை ஏமாத்திருக்காரு. வி.ஏ.ஓ.,வேலைக்குப் பணம் கொடுத்து ஏமாந்த ஒருத்தரோட புகார்லதான் அரெஸ்ட் பண்ணிருக்காங்க!''

''ஆமாக்கா...அதுக்கு அப்புறம் மொத்தம் 68 பேரு புகார் கொடுத்துட்டாங்க. அமவுன்ட் ரெண்டு கோடியே 17 லட்ச ரூபாயைத் தாண்டிருச்சு. இப்பிடி ஊரையெல்லாம் ஏமாத்தி வாங்குன பணத்துல, ஒரு அபார்ட்மென்ட் கட்டி, அதுல ஏழு பிளாட்களை வாடகைக்கு விட்ருக்காரு. அந்த சொத்தை முடக்கப் போறதா சொல்றாங்க... ஆனா எல்லாருக்கும் பணம் திரும்பக் கிடைக்குமான்னுதான் தெரியலை!''

மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் வண்டியைக் கடந்து சென்ற மாநகராட்சி வாகனத்தைப் பார்த்ததும், மித்ராவே அடுத்த 'டாபிக்'கை ஆரம்பித்தாள்...

''அக்கா! கார்ப்பரேஷன்ல 'சிட்டி மம்மி'க்கும், ஜோனல் சேர்மன்களுக்கும் ஏழாம் பொருத்தமா இருக்காம். ஆட்டோ டிரைவரா 'பில்டப்' கொடுத்த, வடக்கு பகுதியை சேர்ந்தவரு தான், மம்மிக்கு ஆலோசனை சொல்லிட்டு இருக்காராம். அடிக்கடி, ஆபீசுக்குள்ள வட்டம் போட்டுட்டு, கட்சிக்காரங்களுக்கு காரியம் சாதிச்சு கொடுக்குறார்னு தகவல்!''

''கோடிக்கணக்குல செலவு பண்ணுன ரெண்டு பேரை, மாவட்டப் பொறுப்புல இருந்து கழற்றி விட்டுட்டாங்கள்ல...அவுங்க ரெண்டு பேரும் கடும் மன வருத்தத்துல இருக்காங்களாம்...சி.எம்., கோவை வந்தப்போ, மருதமலைக்காரரு மட்டும்தான் எட்டிப் பாத்திருக்காரு. இன்னொருத்தரு, ரொம்ப கோபத்துல இருக்காராம்!''

''தாத்தா வயசுல இருக்கிற அவரு, காலேஜ் பையன் போல, பல வேலைகளை செய்யுறார்னு கம்பிளைன்ட். ஒரு உதவி கேட்டு வந்த கட்சிக்காரரோட மனைவிக்கு ரெண்டாவது தாலி கட்டி, துணைவியா ஆக்கிட்டாராம். அந்த கம்பிளைன்ட் பெருசா வெடிக்கப்போறது தலைமைக்குத் தெரிஞ்சுதான், பதவியில இருந்து துாக்குனதா தகவல்...அவர் ஏதாவது வாய் திறந்தா, அவருக்கு எதிரா, இந்த கம்பிளைன்ட் பேசுமாம்!''

''அது சரி... எம்.பி., எலக்சன்லயாவது இவுங்களுக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா?''

சித்ரா கேள்வியை முடிக்கும் முன் மித்ரா பதில் கூறினாள்...

''இல்லைக்கா...ஆளுங்கட்சிக்கு எம்.எல்.ஏ.,க்கள் இல்லாததாலும், மேயருக்கு ஆளுமைத்தன்மை பத்தாதுன்ங்கிறதுனாலயும், வரப்போற எம்.பி., எலக்சன்ல, இந்த முறை தி.மு.க.,வே களமிறங்க போகுதாம். பொறுப்பானவருக்கு அடங்குனவராவும் இருக்கணும்; பார்லிமென்ட்ல நல்லா பேசுறவராவும் இருக்கணும்னு நெனைக்கிறாங்களாம்!''

''அது கரெக்ட்தான்... என்று அரசியல் பேசிக் கொண்டிருந்த சித்ரா, எதிரில் வந்த போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும், அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''மித்து! கார் குண்டு வெடிப்புல கோட்டை விட்ட உளவுத்துறைன்னு மீடியாக்கள்ல கிழிச்சு எடுத்ததும், போன வாரம் எஸ்.ஐ.சி., உதவி கமிஷனரை மாத்துனாங்களே...இந்த வாரம் ஐ.எஸ்., உதவி கமிஷனரையும் மாத்தீட்டாங்க!''

''அது பழைய தகவல்க்கா...ஐ.எஸ்.,க்கு ஏ.சி.,யா போட்ட பிரபாகரன், பொறுப்பு எடுத்துட்டாரு. ஆனா எஸ்.ஐ.சி.,,க்கு ஏ.சி.,யா போட்ட சுகுமார், தனக்கு உடம்பு சரியில்லைன்னு வேணாம்னு சொல்லீட்டாராம். அதனால சிறப்பு நுண்ணறிவு பிரிவுக்கு, சிறப்பான ஒரு ஏ.சி.,யைத் தேடுறாங்க!''

''இன்னொரு போலீஸ் மேட்டர்...பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, ரெண்டு மாசத்துல கடைகள்ல செம்ம ரெய்டு பண்ணி, அஞ்சு டன் புகையிலை எடுத்திருக்காங்க. அந்த மூட்டையெல்லாம் ஸ்டேஷன்லதான் அடைச்சு வச்சிருக்காங்க... அதே ரூம்லதான் கேஸ், விசாரணை எல்லாம் நடக்குது. அந்த ரூம்ல அடிக்கிற புகையிலை நெடியில, பொது மக்கள், போலீஸ் எல்லாம் மூச்சுத் திணர்றாங்க!''

''அடக்கொடுமையே...!''

''அதுல வேற ஒரு கூத்தும் நடக்குது...சில போலீஸ்காரங்க, அந்த மூட்டைகள்ல இருந்து புகையிலையை லவட்டிக்கிறாங்களாம்!''

''போதை...போதை...எங்க பார்த்தாலும் போதை...அனிருத் கச்சேரியில, சில பசங்க ஆடுன ஆட்டமும், குப் குப்ன்னு புகை விட்டுட்டு, சத்தம் போட்டுப் பாடிட்டு, கார் ஓட்டுனதையும் இப்ப நினைச்சாலும், உடம்பே நடுங்குது...!''

''போதை தர்ற மருந்து மாத்திரை, ஊசியைப் போட்டுட்டுதான் பசங்க ஆடுறாங்கன்னு சொல்றாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, இதுக்காகத்தான் ரெண்டு மெடிக்கல் ஷாப்களுக்கு 'சீல்' வச்சாங்க. ஆனா சிட்டி முழுக்க இந்த வியாபாரம் ஜோரா நடக்குது!''

''மெடிக்கல் ஷாப் நடத்துறவுங்க பல பேரு, மனசாட்சியையே வித்துர்றாங்க...கருமத்தம்பட்டியில, மெடிக்கல் ஷாப் நடத்திக்கிட்டே, பேஷன்ட்களுக்கு ஊசி போட்டார்னு சத்யான்னு ஒரு லேடியை, அரெஸ்ட் பண்ணுனாங்க. ஆனா ரூரல் ஏரியாவுல இது இன்னமும் பரவலா நடந்துட்டுதான் இருக்கு!''

சித்ரா சொல்லி முடிக்கும் முன், 'அக்கா! ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்' என்ற மித்ரா, வண்டியை காபிக்கடையின் முன், ஓரம் கட்டினாள் மித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement