வெளுத்து வாங்கிய மழை ஓய்ந்த ஒரு மாலைப்பொழுது. சித்ரா வீட்டுக்கு சென்ற மித்ரா, ''அப்பப்பா…என்ன மழை. நம்ம ஊரும் ஊட்டி மாதிரி 'குளு,குளு'ன்னு ஆயிடுச்சே...'' என்ற படியே, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள் மித்ரா.
குளிருக்கு இதமாக ஆவி பறக்க இஞ்சி டீயும், மிக்சரும் எடுத்து வந்து டீபாய் மீது வைத்தாள் சித்ரா. டீயை உறிஞ்சிய மித்ரா, ''குளிருக்கு நல்லா இருக்குங்க அக்கா,'' என்றாள்.
''அடிக்கிற மழைக்கு, சிட்டிக்குள்ள இருக்கற எல்லா ரோடும், ரொம்ப 'டஞ்சன்' ஆயிடுச்சுக்கா. இந்த ரோடு, அந்த ரோடுன்னு சொல்ல முடியாது. எங்க பார்த்தாலும் குண்டும், குழியுமாத்தான் இருக்கு,'' என, சலித்துக் கொண்ட மித்ரா,''மோசமான ரோடால, விசாரணை கமிஷன் வைக்கிற அளவுக்கு நிலைமை போயிடுச்சாம்,'' என புதிர் போட்டாள்.
''ஒண்ணும் புரியலடி மித்து; தெளிவா சொல்லு''
''அக்கா, தாராபுரம் ரோட்ல, மாகாளியம்மன் கோவில் பக்கத்துல குழாய் உடைஞ்சதால, எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாம பஸ்கள எல்லாம் வெள்ளியங்காடு, பல்லடம் ரோடு வழியா திருப்பி விட்டிருக்காங்க. அந்த வழியாக போன ரெண்டு அரசு பஸ்களோட 'பிரேக் ஸ்பிரிங்' உடைஞ்சுடுச்சு,''
''இதுக்கு டிரைவர் தான் பொறுப்பேத்துக்கணும்னு, 'வழக்கம் போல' அதிகாரிங்க 'மெமோ' கொடுக்க, 'வழக்கமான ரூட்டுக்கு பதிலா, வேற வழித்தடத்தல பஸ்சை திருப்பி விட்டது நீங்க தான். நாங்க என்ன செய்ய முடியும்'ன்னு டிரைவர்ங்க 'மினிட் நோட்ல' எழுதி வைக்க, விவகாரம், விசாரணை பண்ற அளவுக்கு போயிடுச்சாம் விளக்கினாள் மித்ரா.
கட்சி ஒன்னு; அணி நாலு!
''ஓ... இதுக்குத்தான் பழி ஓரிடம், பாவம் ஓரிடம்னு சொல்றாங்களோ...'' என்ற சித்ரா, ''லிங்கேஸ்வரர் ஊர்ல இருக்க காமராஜ் நகர்ல, புதுசா ரேஷன் கடை கட்டடம் கட்ற வேலையை துவக்கி வைக்க, தொகுதி எம்.பி., வர்றதா இருந்துச்சு. இதுக்காக, பேரூராட்சி ஊழியருங்க ஒரு வாரமா ஏரியாவை சுத்தம் பண்ணாங்க. ஆனா, கடைசி நேரத்துல நிகழ்ச்சி ரத்தாகிடுச்சாம். கட்சிக்குள்ள இருக்க கோஷ்டி பூசல்தான் இதுக்கு காரணம்ன்னு, அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க,'' என்றாள்.
''ஆமாங்க்கா... அப்பகுதி ஆளுங்கட்சியில, இப்போ, நாலு அணி இருக்கு; அவங்க அவங்கள 'வளர்த்துக்க' தான் ஆசைப்படறாங்களே தவிர, கட்சியை வளர்க்க எதுவும் பண்ற மாதிரி தெரியலன்னு 'பப்ளிக்' பேசிக்கிறாங்க.'' என எதார்த்தம் பேசினாள் மித்ரா.
''இப்படியே கோஷ்டி அரசியல் பண்ணிட்டு இருந்தாங்கன்னா... வர்ற எலக் ஷன்ல, ஓட்டு வாங்க முடியுமா?'' என, ஆருடம் சொன்ன சித்ரா, ''இதே மாதிரி தான், காங்கயம் நகராட்சி சேர்மனா தி.மு.க.,வை சேர்ந்தவரு இருக்காரு,''
''அந்த பதவி கூட்டணியில, காங்கிரசுக்கு ஒதுக்கினாங்க. ஆனாலும், 'சூர்ய'மான ஆளுங்கட்சிக்காரர், சேர்மனாயிட்டாரு. தலைமை உத்தரவை மதிக்காததால, கட்சியில இருந்து அவரை நீக்கிட்டாங்க,''
''ரெண்டு நாளைக்கு முன்னாடி, தாராபுரத்துல, மாவட்ட செயலாளர் தலைமையில நடந்த நிர்வாகிங்க கூட்டத்துல கலந்துக்க போனப்பா, அவரை பார்த்த சேதி சொல்ற அமைச்சரு, 'உங்களத்தான் கட்சியை விட்டு நீக்கிட்டாங்களே, அப்றம் ஏன் வந்தீங்க'ன்னு கேட்டு, வெளிய போக சொல்லிட்டாராம். இதப்பார்த்த கட்சிக்காரங்க 'ஷாக்' ஆகிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அவர் சொன்னது கரெக்ட்தானே. நானும் ஒரு கட்சி மேட்டர் சொல்றேன்,'' என்ற மித்ரா, ''திருப்பூர் அ.தி.மு.க.,வுல, ஓ.பி.எஸ்., அணியிலேயும் நிர்வாகிகள நியமிச்சிருக்காங்க. 'கலெக்டர் நடத்துற தேர்தல் சம்மந்தமான கூட்டத்துல எங்களையும் கூப்பிடணும்'ன்னு அவங்க மனு கொடுக்க, என்ன செய்றதுன்னு தெரியாம, கலெக்டர் ஆபீஸ் அதிகாரிங்க இருக்காங்களாம்,''
''இதனால, அவங்களையும், நம்ம அணிக்குள்ள இழுத்திடலாம்னு, திட்டம் போட்டிருக்காங்க.. ஆனா, அவங்க சைடில் நோ ரெஸ்பான்ஸாம். இருப்பினும் முக்கியமான நபரின் மனம், 'ஊசலாட்டம்' ஆடுதாம்,'' என்றாள்.
'பலே' போலீஸ்...
''கம்ப்ளைண்ட் பார்ட்டிகள 'வளைச்சு' போடறதுல பல்லடம் ஸ்டேஷனில் ஒரு அதிகாரி, நெம்பர் ஒன்னா இருக்காராம்,'' என போலீஸ் மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''ஏதாவது பிரச்னை தொடர்பாக, புகார் கொடுக்க வர்ற ஆதரவில்லாத பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்துடறாராம். நம்ம 'பாலா' அண்ணன் தான் சொன்னாரு. பக்கத்துல மாதப்பூர்ல இருக்கிற, ரெண்டு பேரு, ரொம்ப ரவுடித்தனம் பண்றதா பப்ளிக் ஒருத்தரு 'கம்ப்ளைன்ட்' பண்ண, நேரா அங்க போன போலீஸ், சம்பந்தப்பட்ட நபரோட தோள் மேல கை போட்டு சகஜமா இருந்திருக்காரு,''
''இத பார்த்து, புகார் பண்ணவங்க அப்படியே 'ஷாக்' ஆகிட்டாங்களாம். இந்த பிரச்னை சம்மந்தமா ஸ்டேஷனுக்கு போய், எழுத்து மூலமாக புகார் கொடுத்தும் வேல நடக்காததால, புதுசா வந்திருக்க பெரிய ஆபீசர்கிட்ட புகார் கொடுத்திருக்காங்க. அதுக்கு அப்புறம் தான், நடவடிக்கை எடுத்தாங்களாம்,'' என கலவரமான நிலவரத்தை விளக்கினாள் சித்ரா.
''ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லேயும், இந்த மாதிரி கறுப்பு ஆடுங்க இருக்கறதால தான், ஒட்டு மொத்த டிபார்ட்மென்ட்டுக்கே கெட்ட பேரு''ன்னு, நேர்மையாக உள்ள சிலர் சொல்றாங்க...'' என மித்ரா சொல்லவே, அவளது மொபைல் போன் ஒலித்தது. 'ஹனுமந்த்'னு பெயர் வரவே, ''ராங் நம்பர்...'' எனக்கூறி இணைப்பை துண்டித்தாள்.
''ரூரல்ல இருக்க ஸ்டேஷன்கள்ல ஆபீசர் முதல் போலீஸ்காரர் வரை, 250க்கும் அதிகமானவங்களுக்கு, பெரிய ஆபீசர், டிரான்ஸ்பர் போட்டாரு. 'ஆர்டர்' வாங்கின அன்னைக்கே, வேலைல சேரணும்னும் சொல்லியிருக்காரு''
''ஆனா, ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு எடுபிடி வேல பார்க்குறது, வசூல் பண்ணி தர்றதுன்னு பழக்கப்பட்ட நிறைய பேரு, இனியும், 'டிரான்ஸ்பர்'ல போகாம பழைய இடத்துலயே இருக்காங்களாம். இந்த விஷயம், பெரிய ஆபீசர் காதுக்கு போகாத மாதிரியே வைச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோயேன்,'' என்றாள் சித்ரா.
''சரிங்க்கா... எத்தனை நாளைக்கு விஷயம் தெரியாம இருக்குன்னு பார்க்கலாம். அக்கா... திருமுருகநாதர் குடி கொண்டுள்ள ஸ்டேஷன்ல வேல செய்ற போலீஸ்காரங்க, மூனு வருஷத்துக்கு மேலாகியும், அங்கேயே 'டேரா' போட்டுட்டு இருக்காங்களாம். இதனால கட்டப்பஞ்சாயத்து, கடைகளில் வசூல் வேட்டைன்னு 'மாமூல்' வாழ்க்கை ஜோரா போகுதாம். இதப்பத்தி, ஆபீசர் கவனிச்சா பரவாயில்ல,'' என எதிர்பார்ப்பை சொன்னாள் மித்ரா.
''லிங்கேஸ்வரர் ஊர் பக்கத்துல, வடக்கால இருக்கிற சேவூர் ஸ்டேஷன் லிமிட்டில், ஒரு பெட்டிக்கடைல இருந்து, 468 கிலோ குட்காவை பதுக்கி வைச்சதா சொல்லி ரெண்டு பேரை, 'அரெஸ்ட்' பண்ணாங்க. கோர்ட்ல ஆஜர்படுத்தி, ஜெயிலுக்கு அனுப்பாம, ஸ்டேஷன் ஜாமின்ல விட்டுட்டாங்களாம்,''
''வெளிய வந்த ஆட்களும், மறுநாளே, கடையை திறந்து 'பிசினஸ்' பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம். இப்படியிருந்தா, குட்காவை எப்படி ஒழிக்கிறதாம்...'' என, ரகசியம் உடைத்தாள் சித்ரா.
இப்படியும் ஒரு விசுவாசி!
''அப்டினா, கண்டிப்பா பொலிடிக்கல் பேக்ரவுண்ட் இருக்கோணும்,'' என, கணித்த மித்ரா,''கார்ப்ரேஷன், மூனாவது மண்டலத்துல வேல பார்க்குற ஒரு பில் கலெக்டரு, எப்ப பார்த்தாலும் சவுத் வி.ஐ.பி.,கூட தான் இருக்காராம்,'' என பேச்சை மாற்றினாள்.
''என்ன காரணம்ன்னு விசாரிச்சாதில், சவுத் வி.ஐ.பி., இதுக்கு முன்னாடி மேயரா இருந்தப்ப, அந்த பில் கலெக்டரு தான், பி.ஏ.,வா இருந்தாராம். அந்த விசுவாசத்தை இப்பவும் காண்பிச்சிட்டு இருக்காருன்னு சொல்றாங்க. இதனால, அவரு சம்மந்தப்பட்ட கார்ப்பரேஷன் வேலைங்க 'பெண்டிங்' ஆகுதாம்,'' என்றாள் மித்ரா.
''இத கொஞ்சம் கமிஷனர் கவனிச்சா பரவால்லதான்...'' என பெருமூச்சு விட்ட சித்ரா, ''போன வாரம், அமராவதி ஆத்துல தண்ணீர் திறந்துவிட்டத பார்க்குறதுக்காக உள்ளூர் அமைச்சர்ங்க ரெண்டு பேரும் தாராபுரத்துக்கு போனாங்க...''
''அப்போ மழை துாறிட்டே இருந்துச்சாம்; சேதி சொல்ற அமைச்சரு, தனக்கு தானே குடை பிடிச்சிட்டு தண்ணி போறதை பார்க்க, அமைச்சரோட பாதுகாப்புக்காக வந்த போலீஸ்காரரு, அந்த கட்சியோட மா.செ.,க்கு குடை பிடிச்சாராம்...''
''அப்ப மினிஸ்டரை விட, மா.செ.,க்கு தான் 'பவர்' அதிகம் போலன்னு, அங்க இருந்தவங்க பேசிட்டாங்களாம்,'' என்ற மித்ரா, ''சரிங்க்கா, மறுபடியும் மழை வர்றதுக்குள்ள, நா கெளம்பறேன்...'' என்றவாறே விடைபெற்றாள் மித்ரா
- நமது நிருபர்கள் குழு -.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!