குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஓடும் மச்சு நதியின் குறுக்கே, ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், 1879ல், 230 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலத்தில் தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. மோர்பி அரச குடும்பத்தின் தர்பார்கர் மஹால், நசர்பாக் மஹால் என்ற, இரண்டு அரண்மனைகளை ஒருங்கிணைக்கும் வகையில், இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
சுற்றுலா தலமாக திகழ்ந்து வந்த இப்பாலம், புனரமைப்பு பணிக்காக ஆறு மாதங்களுக்கு முன் மூடப்பட்ட நிலையில், பணி முடிந்து, கடந்த மாதம் 26ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.தீபாவளி, குஜராத்தி புத்தாண்டு, சாத் பூஜை என, தொடர்ச்சியாக பண்டிகை விடுமுறை காலம் வந்ததால், அக்டோபர், 30ம் தேதி தொங்கு பாலத்தை பார்க்கவும், அதில் நடக்கவும், ஏராளமான சுற்றுலா பயணியர் அங்கு குவிந்தனர். பாலத்தில் ஒரே நேரத்தில், 150 பேர் மட்டுமே நிற்க, நடக்க முடியும் என்ற நிலையில், அதை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கிய, 500க்கும் மேற்பட்டோர் அதில் ஏறி நின்றுள்ளனர்.
இதனால், பாரம் தாங்க முடியாமல் தொங்கு பாலத்தின் கேபிள் அறுந்து விழுந்தது. அதில் நின்றிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என, ௪௦௦க்கும் மேற்பட்டோர் மச்சு ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரிந்த சிலர், தண்ணீரில் நீந்தி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் நீரில் மூழ்கினர். இந்த துயர சம்பவத்தில், 135 பேர் பலியாகினர்.
பராமரிப்பு பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்ட, நான்காவது நாளில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், நடந்த சம்பவம், 'கடவுளின் செயல்; அவரின் விருப்பம் காரணமாகவே, துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது' என்று கூறியுள்ளார், பாலத்தை பராமரிக்கும் பணியை ஏற்றிருந்த நிறுவனத்தின் மேலாளர். இதன் வாயிலாக, நிறுவனத்தின் மற்றும் நிறுவன ஊழியர்களின் தவறுகளை மறைக்க முற்பட்டு உள்ளார்.
ஆறு மாதமாக பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலம், சரியான முறையில் ரிப்பேர் செய்யப்பட்டிருந்தால், 135 பேர் உயிர்களை பலி கொடுக்கும் துயரம் நேர்ந்திருக்காது. இந்த விஷயத்தில், அந்த நிறுவனம் தன் பணியை சரியாக மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.
இந்த விபத்து தொடர்பாக, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 'இரும்பு கேபிள் துண்டானதால் தான் பாலம் அறுந்து விழுந்துள்ளது. பராமரிப்பு பணிக்காக, ஆறு மாதமாக பாலம் மூடப்பட்டிருந்தும், அதன் பிளாட்பார்ம்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மற்ற பணிகள் எதுவும் சரிவர நடக்கவில்லை' எனக் கூறியுள்ளனர்.
மேலும், பராமரிப்பு பணி முடிந்து பாலத்தை திறக்கும் முன், அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை. அத்துடன், ஒரே நேரத்தில் எவ்வளவு பேர், பாலத்தில் நடக்கலாம் என்பதும் நிர்ணயிக்கப் படவில்லை. பாலத்தின் மீது அளவுக்கு மீறி, 500 பேர் வரை நின்றுள்ளனர். மேலும், பாலத்தை பராமரிப்பதற்கான கான்ட்ராக்ட் பெற்ற நிறுவனம், கட்டுமான பொறியியலில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமும் அல்ல.
பாலத்தை திறக்கும் முன், அதுபற்றி பேட்டி அளித்த பராமரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர், 'பாலம் பராமரிப்புக்காக, 2 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டு உள்ளது. அடுத்த எட்டு முதல், 10ஆண்டுகளுக்கு பாலம் பாதுகாப்பாக இருக்கும்' என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பணத்தாசையில், அதிகமான நபர்களை ஒரே நேரத்தில் பாலத்தில் செல்ல அனுமதித்தது, பராமரிப்பு பணிக்கான கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் செய்த மிகப்பெரிய தவறாகும்.எனவே, இந்த விஷயத்தில் தவறு செய்த நிறுவனமும், அவற்றின் ஊழியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு, கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, குஜராத் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து, மற்ற மாநில அரசுகளும், தங்கள் பகுதியில் உள்ள பாலங்கள் சீரமைப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனிதத் தவறுகளை நிச்சயம் தடுக்க முடியும்; அதைச் செய்வது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!