Load Image
Advertisement

கவுன்சிலுக்கு இருந்த அதிகாரம் போச்சு...: கவுன்சிலர்களுக்கு இப்போ இதுதான் பேச்சு!

தோழியின் திருமணத்துக்காக கையில் அன்பளிப்புடன் சித்ராவின் வீட்டில் ஆஜரானாள் மித்ரா. பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்த சித்ரா, 'இப்பப் போனா ஒரே டிராபிக்கா இருக்கும். கொஞ்ச நேரம் கழிச்சு, கிளம்புவோம்' என்று கூறிவிட்டு, பேப்பரை அவளிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட மித்ரா, அலுப்போடு பேசத் துவங்கினாள்.

''ஆமாக்கா! வர்றப்பவே பயங்கர டிராபிக். முக்கியமான ரெண்டு இடத்தைத் தவிர, வேற இடத்துல எங்கேயுமே, டிராபிக் போலீசையே பார்க்க முடியலை. சிட்டியில இதான் பெரிய பிரச்னையா இருக்கு. ஆனா அதுக்கு ஒரு தீர்வு காண்றதுக்கு போலீஸ் எந்த முயற்சியும் எடுக்க மாட்டேங்கிறாங்க. மினிஸ்டர் உட்பட யாருமே இதைப் பத்திக் கவலைப்படுறதாவே தெரியலை!''

அதை ஆமோதித்த சித்ரா, ''நம்ம சிட்டி போலீஸ் ஆபீசர்களுக்கு இப்போ எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை பாக்குறதுங்கிறதுல பெரிய குழப்பம். தீவிரவாதிகளைக் கண்டு பிடிக்கிறதா, போதைப் பொருள் விக்கிறவுங்களைப் பிடிக்கிறதா, டிராபிக்கை 'கன்ட்ரோல்' பண்றதான்னு தெரியாம குழம்பியிருக்காங்க!'' என்றாள்.

மித்ரா மீண்டும் தொடர்ந்தாள்...

''அதான் ஐ.எஸ்., அசிஸ்டெண்ட் கமிஷனரை மாத்தி, சுகுமார்னு ஒருத்தரைப் போட்ருக்காங்களே!''

''யெஸ் மித்து! ஈரோடு சிறப்பு அதிரடிப்படையில இருந்த இவரு, தி.மு.க., கவர்மென்ட் வந்தபிறகுதான், கோவைக்கே வந்தாரு. சாய்பாபா காலனியில ஏ.சி.,யா இருந்தாரு. அப்போ அங்க நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில மோதலானதும், சிறப்பு அதிரடிப்படைக்கு மாத்துனாங்க. இப்போ கார் குண்டு வெடிப்பு விவகாரம் பெருசா வெடிச்சதும், இவரை உளவுத்துறையில போட்ருக்காங்க!''

''அக்கா! அவர் எஸ்.ஐ.,யா இருந்த காலத்துல இருந்து, கோவையில உளவுத்துறையிலதான் அதிகமா வேலை பாத்திருக்காரு. அந்த அனுபவம், இந்த இக்கட்டான நேரத்துல போலீசுக்கு உதவியா இருக்கும்கிற எண்ணத்துல இங்க உளவுத்துறைக்கே ஏ.சி.,யா போட்டுட்டாங்க. பாக்கலாம் என்ன பண்றார்னு!''

''மித்து! நம்ம ஏதோ சிட்டிக்குள்ள மட்டும்தான் இவ்ளோ பிரச்னை இருக்குற மாதிரி பேசுறோம். சொல்லப் போனா, ரூரல் ஏரியாவுலதான் போலீசுக்கு பல விதமான பிரச்னை இருக்கு!''

சித்ரா முடிக்கும் முன்னே, குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா...

''அதே மாதிரி கஞ்சா, சரக்கு, சேவல் சண்டை, போதை மாத்திரை, மண்ணு, கல்லு கடத்தல்னு வருமானமும் பல விதமா இருக்குங்கிறதையும் மறந்துராதீங்க. சிறுமுகை சின்ன டவுன். அங்க பழத்தோட்டம் ஆத்துப்படுகைங்கிற ஏரியாவுல பகிரங்கமா கஞ்சாவிக்கிறாங்க. அறிமுகமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொட்டலமாகவும், பீடி, சிகரெட்டுலயே கஞ்சாவைப் போட்டு வித்துட்டு இருக்காங்க. போலீஸ்காரங்களுக்குத் தெரிஞ்சேதான் இது நடக்குது!''

''அங்க கஞ்சான்னா. ஆனைகட்டியில இல்லீகல் சரக்கு சேல்ஸ் அமோகமா நடக்குது. அங்க இருந்த டாஸ்மாக் கடையை கேரளா மக்கள் போராடுனாங்கன்னு எடுத்துட்டாங்க. கொஞ்சம் தள்ளி கொண்டனுார்ல இருந்த கடையையும் வேற இடத்துக்கு மாத்திட்டாங்க. ஆனா ஆனைகட்டி ரோட்டுல, சின்ன தடாகம் பக்கத்துல இருக்குற சலங்கைப் பள்ளம்ங்கிற இடத்துல கடையில விக்கிறது மாதிரி சரக்கு கூவிக்கூவி விக்கிறாங்க!''

''பக்கத்துல மாங்கரையில போலீஸ், பாரஸ்ட் ரெண்டு டிபார்ட்மென்ட் செக்போஸ்ட்டும் இருக்கே... அதைத் தாண்டி கேரளாவுக்கு சரக்கு போகுதா?''

''சரக்கு போகுதா, போன் பண்ணுனா ஸ்விக்கி, ஸொமோட்டோ மாதிரி, வீட்டுக்கே சரக்கு டெலிவரி பண்றாங்களாம். கிராமத்துப் பக்கம் இருக்குற போலீஸ்காரங்க, சிட்டியில இருக்கிறவுங்களை விட, கொஞ்சம் நியாயமா இருப்பாங்க. ஆனா அந்த ஏரியாவுல இருக்குற போலீஸ்காரங்க, அதிகமா காசை வாங்கிட்டு இந்த அக்கிரமத்தை எல்லாம் 'அலவ்' பண்றாங்க!''

''அக்கா, இப்பல்லாம் ரூரல் ஏரியாவுல இருக்குற போலீஸ்காரங்கதான் மரியாதையே இல்லாம நடந்துக்கிறாங்கன்னு புகார் வருது. கருமத்தம்பட்டி பக்கத்துல இருக்கிற சுப்பராயம்புதூருக்கு பஸ் வரலைன்னு சொல்லி, அந்த ஏரியா மக்கள் கவுன்சிலர் ஒருத்தரு தலைமையில ரோடு மறியல் பண்ணாங்க. அங்க சமாதானப்படுத்த வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை பேசுனதே பிரச்னையாயிருச்சு!''

''அப்பிடி என்னதான் அவர் பேசுனாராம்?''

''பேசிட்டே இருக்குறப்போ, 'என்ன ரவுடித்தனம் பண்றீங்களா' ன்னு கேட்ருக்காரு. உடனே மக்கள் ஆவேசமாகி, 'எங்களுக்காகப் போராட வந்த அவரை எப்பிடி நீங்க அப்பிடிப் பேசலாம்'னு வகையா பிடிச்சிக்கிட்டாங்க. பஸ்சுக்காக மறியல் பண்ணுனா, ரவுடி லிஸ்ட்ல சேத்துருவீங்க போலன்னு லேடீஸ் சராமாரியா கேட்ருக்காங்க. உடனே எஸ்.ஐ.யை பாக்கச் சொல்லிட்டு, இன்ஸ்பெக்டர் எஸ்கேப் ஆயிட்டாரு!''

''அதை விடு மித்து! நாளைக்கழிச்சு சி.எம்., மறுபடியும் நம்ம ஊருக்கு வர்றாரு... இப்பவாவது நம்ம மாவட்டத்துக்கு உருப்படியா ஏதாவது அறிவிப்பாரா... அல்லது வழக்கம்போல சும்மா பேசிட்டு போயிருவாரா?''

சித்ராவின் கேள்விக்கு சிரிப்போடு பதில் சொன்னாள் மித்ரா...

''இந்த கவர்மென்ட் வந்ததுல இருந்து எல்லாமே அறிவிப்பாதான் இருக்குக்கா... ஒன்றரை வருஷமாச்சு. செம்மொழிப் பூங்கா, மெட்ரோ ரயிலு, வெஸ்டர்ன் பை பாஸ்ன்னு ஒரு திட்டமும் தொடங்குறது மாதிரியே தெரியலையே. அப்புறம் இனிமே புதுசா அறிவிச்சு என்ன ஆகப்போகுது?''

''பெரிய திட்டத்தெல்லாம் விடு. புதுசா ஒரு சின்ன திட்டம் அறிவிச்சாலும், அதைச் செய்ய முடியுமான்னு பார்க்காம, மேம்போக்காத்தான் அறிவிக்கிறாங்க!''

''அப்பிடி என்னக்கா அறிவிச்சாங்க?''

''போன தடவை ஈச்ச
னாரிக்கு வந்தப்போ, ஒத்தக்கால் மண்டபத்துல மின் மயானம் அமைக்கப்படும்னு சொன்னார்ல. அந்த வேலையை ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் ஆரம்பிச்சிருக்காங்க. அறிவிச்சப்போ தெரியாத மக்கள், வேலை ஆரம்பிக்கிறப்போ, போராட்டத்துல குதிச்சிட்டாங்க.''

''ஏன்க்கா...அந்த ஏரியாவுலதான் மின் மயானமே இல்லையே?''

''பக்கத்துல பிரசித்தியான சிவன் கோவிலும், அதை ஒட்டியே ரெண்டு கல்யாண மண்டபமும் இருக்குறதால, அங்க மின் மயானம் அமைக்கக்கூடாதுன்னு போராட்டத்துல குதிச்சிட்டாங்க.

இதையெல்லாம் முதல்லயே கவனிக்காம, எதுக்காக முதல்வரை வச்சு திட்டத்தை அறிவிக்கிறாங்க. அதனால்தான் இந்த கவர்மென்ட்டுக்கு 'அனவுன்ஸ்மென்ட் கவர்மென்ட்'டுன்னு பேராயிட்டு இருக்கு!''

சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, எதையோ யோசித்து விட்டு, அடுத்த பேச்சை ஆரம்பித்தாள்.

''அக்கா! ஸ்மார்ட் சிட்டி திட்டத்துல குறிச்சி குளத்துல ரொம்ப 'ஸ்லோ'வா வேலை நடக்குதுல்ல. அதை கார்ப்பரேஷன் கமிஷனர் ரெண்டு நாளைக்கு முன்னாடி ஆய்வு பண்ணிருக்காரு. அப்போ அதிகாரிகளைக் கூப்பிட்டு, செமையா 'டோஸ்' விட்ருக்காரு. கமிஷனர்களோட அதிகாரத்தை இப்போ சமீபத்துல அதிகப்படுத்திக் கொடுத்ததுல, கமிஷனர் ரொம்பவே உற்சாகமாயிட்டாரு போலிருக்கு!''

''அவர் உற்சாகமாயிட்டாரு... ஆனா கவுன்சில் அதிகாரம் குறைஞ்சிருச்சுன்னு மேயர், நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் எல்லாரும் பேரதிர்ச்சியில இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அதுலயும் வார்டு வேலைகளுக்கு, கார்ப்பரேஷன் பொது நிதியில இருந்து மட்டுமே செலவு பண்ணலாம்னு சொன்னதுல, அவுங்க நிலைமை ரொம்ப கஷ்டமாயிருச்சாம்!''

''அதுல அவுங்களுக்கு என்ன பிரச்சினையாம்?''

''என்ன மித்து இப்பிடிக் கேக்குற... கார்ப்பரேஷன் பொதுநிதியில வாங்குற பங்கு, ஆபீசர்கள், மத்த அலுவலர்கள் சம்பளத்துக்கே சரியாப் போகும். இதுல எப்பிடி வார்டு வேலைகளைப் பாக்குறதுங்கிறதுதான் அவுங்க கவலை!''

''நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்க்கா... இது சம்பந்தமா சிட்டி மம்மி தலைமையில நிலைக்குழுத் தலைவர்கள், கவுன்சிலர்கள் மீட்டிங் நடந்துச்சாம். ஏற்கெனவே ஆபீசர்கள் யாரும் நம்மளை மதிக்கிறதே இல்லை; இதுல கமிஷனருக்கு பவரைக் கூட்டிக் கொடுத்துட்டா, நமக்கெல்லாம் என்னதான் மரியாதை இருக்கும்னு புலம்பியிருக்காங்க!''

''அதே தான் மேட்டர்... முக்கிய ஆபீசருக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலவிரிசல் பெருசாயிட்டே இருக்காம். இதுல கடுப்பான 'இன்னோவா' மக்கள் பிரதிநிதி, மண்டல தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்களை எல்லாம் ஒரு குரூப்பா தனக்கு சாதகமா சேர்த்து மாவட்ட அமைச்சரைப் பார்த்து ஆலோசனை கேக்கப் போறாங்களாம். அதுக்கு அப்புறம், துறை அமைச்சர் நேருவையும் பார்க்க 'பிளான்' பண்ணிருக்காங்களாம்!''

''யாரைப் போய்ப் பார்த்தாலும், கார்ப்பரேஷன்ல கோலோச்சுற ரெண்டு புரோக்கர்களையும், யாராலயும்அசைக்க முடியாது. அப்புறம் எதுக்கு இப்பிடிப் புலம்பிட்டு இருக்காங்கன்னு தெரியலை!''

''எதுலயுமே சம்பாதிக்க முடியலைங்கிற விரக்தியில, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் என்னென்னமோ வேலையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எனக்குத் தெரிய சில கவுன்சிலர்கள், வாரச்சந்தையை நடத்தி, அ.தி.மு.க.,காரங்க வசூல் பண்றது மாதிரி கடைக்குக் கடை வசூல் பண்றாங்க. சில பேரு, குப்பை அள்ளுற கான்ட்ராக்ட்டை எடுக்க முயற்சி பண்றாங்களாம். சிலர் வீடு புரோக்கர் வேலையும் பண்றாங்க!''

இதைச் சொல்லிமுடித்த சித்ராவே, அடுத்த மேட்டரையும் தொடர்ந்தாள்...

''செல்வபுரம் ஐ.யு.டி.பி., காலனியில, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்புல புதுசா அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்றாங்க... அந்த ஏரியா ஆளும்கட்சி லேடி கவுன்சிலரும், அவுங்க அண்ணனும் சேர்ந்து புரோக்கர்கள் மூலமா பார்ட்டிகளை கூப்பிட்டு வந்து, வீடுகளைக் காமிச்சு, ஆறு, ஏழு லட்சம்னு பேரம் பேசுறாங்க. வாரிய அதிகாரிகளுக்கு கட்சி பேரைச் சொல்லி, வீடு ஒதுக்கவும் பிரஷர் கொடுக்குறாங்க!''

''அக்கா! நம்ம ஊரு யுனிவர்சிட்டியில இருந்து ரிட்டயர்டு ஆன வி.சி.,பத்தி தினமும் விதவிதமா புகார் வருது. அவர் இருக்குறப்போ, அவருக்கு சம்பந்தமில்லாத டிபார்ட்மென்ட்டைப் பத்தி, அவர் எழுதுன புத்தகத்தை விக்கிறதுக்கு பல்கலை பாடத்திட்டத்தையே மாத்திருக்கிறதா ஒரு புகார்!''

''ஆமா... அது நானும் கேள்விப்பட்டேன். அதுக்கு காலேஜ், யுனிவர்சிட்டி சிண்டிகேட், புரபசர் எல்லாரும் எதிர்ப்புன்னு சொன்னாங்களே!''

''உண்மைதான். எதிர்ப்பு வந்ததால, அதை நிறுத்தி வச்சுட்டாங்க... ஆனா மறுபடியும் வராதுங்கிறதுக்கு உத்தரவாதம் இல்லை. தான் ரிட்டயர்டு ஆன பிறகும் தனக்கு உதவியா இருக்கணும்னே, முக்கியமான போஸ்ட்டிங்ல சில பேரை அப்போ நியமிச்சிருக்காரு. அவுங்கதான் இப்போ அவரோட புத்தகத்தை விக்கிறதுக்கான வேலையைப் பாக்குறாங்களாம்!''மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே, 'மித்து! நேரமாச்சு... பத்தே நிமிஷத்துல நான் கிளம்பி வர்றேன்!'' என்று தன்னுடைய அறைக்குள் புகுந்தாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement