மூன்று வயது சிறுவனாக இருக்கும் போது தந்தை இறந்து விடுகிறார்,தந்தையைத் தொடர்ந்து தங்கையும் இறந்துவிடுகிறார்
அப்பனையும் கூடப்பிறந்தவளையும் முழுங்கிறதுக்குனு வந்து பிறந்திருக்கு என்று அந்த சின்னஞ்சிறு பாலகனை உறவுகள் திட்டித்தீர்க்கின்றன, தலையில் கொட்டி அழவைக்கின்றன
இழந்த உறவுகளை எண்ணி கவலைப்படுவதா? இருக்கும் ஒரே மகனையும் கொடிய வார்த்தைகளால் விமர்சிப்பவர்களை நினைத்து வேதனைப்படுவதா? கண்ணுக்கு எட்டிய துாரத்திற்கு தெரியும் வறுமையை எண்ணி வருத்தப்படுவதா? என்று எண்ணிய அந்த இளம் தாய் தன் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்வது என்று முடிவெடுக்கிறார்.
இதற்காக ஒரு பின்னிரவு வேளையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள கிணற்றுக்கும் சென்றுவிடுகிறார் ஏதுமறியாத அந்த சின்னஞ்சிறு மழலை அம்மாவைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறதுதனது மனதை கல்லாக்கிக் கொண்டு தன்னை பிடித்திருந்த மகனை தன்னிடம் இருந்த மெள்ள விடுவித்து மீண்டும் ஒரு முறை இறுக்கி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து கிணற்றில் வீசுகிறார்
குழந்தை தொபீர் என்று கிணற்றில் விழுகிறது அடுத்து குதிக்க போகும் போது,‛ மகளே என்ன காரியம் பண்ணுற' என்று அலறியபடியே அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய ஒரு பெரியவர் சிறிதும் தாமதிக்காமல் கிணற்றில் குதித்து அந்த சின்னஞ்சிறு சிசுவையும் காப்பாற்றி கரை சேர்க்கிறார்.
அவர்தான் அந்த குழந்தையின் தாத்தா, அந்த குழந்தைதான் ஐம்பதாண்டுகளாக தமிழ் திரைப்பட இசையை தாலாட்டிய ,இப்போதும் நம் நெஞ்சங்களை தனது பாடல்களால் தாலாட்டிக் கொண்டு இருப்பவருமான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எந்தப் பாடல் கேட்டாலும் பழைய பாடல் போல இல்லையே என்று நாம் நினைத்து நினைத்து உருகும் பல பழைய பாடல்களுக்கு சொந்தக்காரரான அவர் எழுதிய சுயசரிதமான ‛நான் ஒரு ரசிகன்' என்ற புத்தகத்தில்தான் தனது சோகமான இளம் பிரயாத்து கதையை மேலே விவரித்தபடி பதிவு செய்திருக்கிறார்.
நல்லவேளை அந்த குழந்தை தப்பித்தது என்று இப்போது நம் நெஞ்சம் அந்த குழந்தையைக் காப்பாற்றிய தாத்தாவை நன்றியோடு நினைதத்துப் பார்க்கிறது காலத்தால் அழியாத எத்தனை எத்தனையோ பாடல்களை தந்தவரை அல்லவா அந்தப் பெரியவர் காப்பாற்றியிருக்கிறார்.
யாருமே திடீரென மேதைகளாகிவிடுவதில்லை எம்எஸ்வி.,யும் அப்படித்தான்
சிறுவயதிலேயே இசை மீது கொண்ட ஆர்வத்தால் வீட்டு வேலை செய்வது முதல் காபி வாங்கிக் கொடுக்கும் ஆபிஸ் பையன் வேலை வரை எல்லா வேலையையும் பார்த்திருக்கிறார்.
சிலர் சுயசரிதை எழுதும் போது நாள்,கிழமை,நேரம்,சம்பவம் நடந்த இடம் என்றெல்லாம் குறிப்பிட்டு சரியாக எழுதுவர் ஆனால் எம்எஸ்வி.,அப்படி எழுதியதாக தெரியவில்லை
நான் இன்றைக்கும் ஒரு ரசிகன்தான்யா என்னைப்பற்றி சொல்லுமளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று முதலில் மறுத்துவிட்டு பிறகு வற்புறுத்தல் காரணமாக சரி என் நினைவு அடுக்கில் இருந்து எழுதுகிறேன் என்றே எழுதியிருப்பது போல எழுதியிருக்கிறாார்
இதனாலேயே இந்த புத்தகம் உயிரோட்டமாக இருக்கிறது.
அன்னையின் மீதும் தொழில் மீதும் அவர் கொண்ட பக்தி பெரிது ,எப்படியும் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட உழைப்பு அபாரமானது
அவர் இசை அமைத்த பல பாடல்களின் பின்னனி பற்றி அறிந்து கொள்ளவே இந்தப் புத்தகத்தை வாசகர்கள் விரும்பி வாங்குவர் அதற்கேற்ற தீனியும் இருக்கிறது.
கண்ணதாசனுடன் அவருக்கு இருந்த நட்பும் ஊரறிந்ததே ஆனால் அவருக்கு சிலை எழுப்பவேண்டும் என்று முனையும் அளவிற்கு அவர் மீது பாசம் இருந்ததுதான் பெரிய விஷயம் அதற்கான காரணத்தை பல பக்கங்களில் சுவைபட எழுதியிருக்கிறார்.
இருவருக்குள்ளும் இருந்த ஊடல் பல பாடல்களை கொண்டு வந்தது என்பதே நிஜம்.‛போனால் போகட்டும் போடா' என்ற பாடலை கண்ணதாசன் எழுதிக் கொடுத்ததும் என்னது போடா வாடா என்று மரியாதை இல்லாமல் வரிகள் வருகிறது மாற்றி கொடுங்கள் என்று எம்எஸ்வி.,கேட்டிருக்கிறார் இந்த சூழ்நிலைக்கு இப்படித்தான் எழுத வேண்டும் தம்பி நீ ரொம்ப மரியாதைக்காரன் ‛விஜயவாடா' ங்கிற ஊர் பெயரைச் சொல்லச் சொன்னால்கூட ‛விஜயவாங்க' என்றுதான் சொல்வாய் அதுனால அப்படியே இருக்கட்டும் மாற்றக்கூடாது என்று கறராக சொல்லிவிட்டார் பாடலும் ‛ஹிட்' ஆனது அதன்பிறகும் கண்ணதாசன் எம்எஸ்வி.,யை சீண்டும் விதத்தில் ‛சட்டி சுட்டதடா' என்ற பாடலையும் ‛யாராடா மனிதன் இங்கே' என்பது போன்ற பாடலையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்த தருணங்களை விட கவலையுடனும் கடனுடனும் கண்ணதாசன் இருந்த நாட்களே அதிகம் அந்த மன உளைச்சலில் தந்த அனுபவங்களே அவரது பல தத்துவ பாடல்கள் என்று பல பாடல்களை குறிப்பிடுகிறார்.
ஆயிரத்து ஐநுாறு ரூபாயை புரட்ட முடியாமல் கடைசியில் சொந்த அண்ணனிடம் போய் நின்று அவரும் திட்டி அனுப்பிய சூழநிலையில் பிறந்ததுதான் ‛அண்ணன் என்னடா தம்பி என்னடா பாடல்' என்று அந்த பாடல் பிறந்த சூழ்நிலை விளக்குகிறார்.
ஒரே நேரத்தில் எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் பிடித்த மாதிரி எப்படி வேலை பார்தேன் என்பதை அழகாக விவரிக்கிறார்
தனது இசைத் தொழிலை தெய்வத்திற்கும் மேல் நேசித்திருக்கிறார் அதற்கு ஒரு இழுக்கு வருமென்றால் யாராக இருந்தாலும் மோதிப்பார்த்துவிடுகிறாா் இதில் எம்ஜிஆரும் விதிவிலக்கல்ல.எம்ஜிஆருடன் ஏற்பட்ட பிணக்குகளை எவ்வித ஒளிவு மறைவுமின்றி எழுதியிருக்கிறார் அதே நேரம் அவரது பாசத்தையும் விவரித்திருக்கிறார்.
டேப்ரிக்கார்டர் இல்லாத காலத்தில் கவிஞருக்காக பல முறை ட்யூனை வாசித்துக் காட்டிய அந்தக் கால நடைமுறையை அவர் சொல்லும் போது ஆச்சரியமாக இருக்கிறது.அதே போல அப்போது ஒரு பாட்டை கம்போஸ் செய்யும் போது ஒரு கூட்டமே தன்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு குறை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கும் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்கிறார்.
இந்தியா-பாக்கிஸ்தான் போரின் போது காயம்பட்ட வீரர்ளுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காக போர்முனையில் காயம்பட்டு இருந்த வீரர்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தியதை தனது வாழ்க்கையின் பெரும் பேறாக கருதுகிறார்.
இயக்குனர் ஸ்ரீதர் முதல் பாலசந்தர் வரை தான் வேலை பார்த்த இயக்குனர்களின் குணாதிசயங்களையும் அவர்கள் மூலம் பிறந்த பாடல்கள் பிறந்த விதத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.
சினிமா தயாரிப்பில் தான் நஷ்டப்பட்டதையும் அதனால் கஷ்டப்பட்டதையும் கூட வெளிப்படையாக பகிர்ந்து கொள்பவர் தனக்கு பிடித்த குரல் டிஎம்எஸ் குரல் என்றும் அந்தக்குரலைக் கொண்டு பல சோதனை முயற்சி செய்து வெற்றி பெற்றதாக கூறுபவர் தனது சொந்தக்குரலால் பாடிய அனுபவத்தையும் விவரிக்கிறார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அறிமுகம் செய்தவர் எம்எஸ்வி.,தான் ஆனால் அறிமுகம் செய்வதற்கு முன் பட்டுக்கோட்டையாரை புதியவர் என்று ஒரு கணம் அலட்சியம் செய்துவிட்டார், அதை எண்ணி, உனக்கு இவ்வளவு கர்வமடா? ஒரு கலைஞனை மதிக்காத நீ ஒரு கலைஞனா? என்றெல்லாம் இவரே தனது நெஞ்சுக்கு நேராக பேசி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் துாங்காமல் தன்னை வருத்திக்கொண்டு இருந்திருக்கிறார் பின் தனது தவறுக்கு பிரயாசித்தமாக பட்டுக்கோட்டையாரை அவரே பல படக்கம்பெனிகளுக்கும் சிபாரிசு செய்கிறார்.
இசையாய் வாழ்ந்து மறைந்திட்ட எம்எஸ்வி.,யின் புகழை பரப்புவதே மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பு( MMFA TRUST).இந்த அமைப்பின் நிறுவன தலைவர் எம்.ஆர். விஜய கிருஷ்ணன்(96009 53535 /9962276580),
2016 ம் ஆண்டு துவக்கப்பட்ட மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பபானது அவரது படைப்புகளை ஆராய்ந்து இன்றைய மற்றும் வரும் தலைமுறைகளைக்கு கொண்டு செல்வதில் முனைந்துள்ளது
மெல்லிசை மன்னருடன் பணி புரிந்தவர்களுடன் கலந்துரையாடி ,அவருடைய இசையைப் பற்றிய கருத்துக்களை அனைவருக்கும் கொண்டு போய் சேர்த்து வருகிறது..அவரின் நினைவு நாளன்று குழந்தைகள் காப்பகத்தில் முதியோர் இல்லத்தில் உதவுதல் போன்ற நிகழ்வுகளை செய்துவருகிறது
முத்தாய்ப்பாக எம்எஸ்வி.,அவர்களின் சுயசரிதை புத்தகமான விகடனின் பிரசுரமான ‛நான் ஒரு ரசிகன்' என்ற புத்தகத்தை வெளியிடுவதில் இப்போது முனைப்பாக உள்ளது.நானொரு ரசிகன் புத்தகத்தின் வெளியீட்டு விழா வருகின்ற 6 ம்தேதி மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளியில் நடைபெற உள்ளது, அனுமதி இலவசம்.
விழாவில் பின்னனி பாடகி பி.சுசிலா , ஏவி.எம்.குமரன்,பாக்யராஜ்,தேவா,வாணி ஜெயராம் உள்ளீட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.மெல்லிசை மன்னரின் ரசிகர்களாகிய நீங்களும் சிறப்பு விருந்தினர்தான் ஆகவே விழாவிற்கும் மெல்லிசை மன்னருக்கும் புகழ் சேர்க்க அவசியம் வந்துவிடுங்கள்..
-எல்.முருகராஜ்
அற்புதாக அவர்களது பெற்றோர்கள் இருந்திருந்தால் திரு முருகராஜ் அய்யாவின் கட்டுரையைப் பார்த்து அழுதிருப்பார்கள் உலகம் அறியாத மனதை உலுக்கும் பல செய்திகளை மிக அழகாக அவருக்கே உரிய பாணியில் மிக அழகாக வெளிக்கொணர்ந்ததற்கு மிக்க நன்றி, அதிலும் என்ற ஒரு தகாத சொற்களைக்கூட தவிர்த்து கிணற்றுவரை சென்று ... பெரியவர் காப்பாற்றினார் என்பதை மிக நாகரீகமாக விளக்கியது பாராட்ட வைக்கிறது . உலகம் மகிழ்கிறது, இராணுவ வீரர்கள் மகிழ்கிறார்கள், இரசிகர்கள் மகிழ்கிறார்கள், ஆனால் இவர்களது குடும்பத்தினர்கள் இவரது உழைப்பை பயன்படுத்தி எல்லா நிலைகளிலும் முன்னிலைக்கு வந்தவர்கள் ..? அதே போன்று பல துறைகளில் ஒருவரின் பெயரைக் கூறினால் மற்றொருவரின் பெயரையும் சேர்த்தே பார்த்தும் பழகிப்போன நமக்கு திரு ராமமூர்த்தி அன்றய காலகட்டத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று பழக்கப்பட்ட இக்காலத்து இரசிகர்களை ஈர்த்தவர் திரு எம் எஸ் வி அவர்கள் என்பதை நன்று உணர்ந்து , மிக மிக அழகாக சொற்றொடர்களை வடிவமைத்து வழங்கிய ஐயா மற்றும் தினமலருக்கு நன்றி, மிக அருமையான பதிவு, என்றைக்கும் முடிந்த நிகழ்வுகளை மட்டுமே செய்தியாக கண்ட நமக்கு வரப்போகும் நிகழ்வையும், நேரத்தில்,இடத்தையும், தொடர்பு கொள்ளவேண்டிய கைபேசி தொடர்பையும் கொடுத்து சான்றோருக்காக புகழ் சேர்க்க வரவேற்பு மடலாகவும் அமைந்தது மிகவும் பாராட்டும்படியாக உள்ளது, வாழ்க உங்கள் சேவை. வந்தே மாதரம்