Load Image
Advertisement

ரிஷி சுனக் சாதிக்க நாம் வாழ்த்துவோம்!

பிரிட்டன் நாட்டின் பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 42 வயதான, ரிஷி சுனக் சமீபத்தில் பதவியேற்றார்.

பிரிட்டனில் ஆளும் கட்சிக்கு தலைமை பதவி வகிப்பவர் தான் பிரதமராக வருவார். அதனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில், ரிஷி சுனக் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராகி உள்ளார்.

பிரிட்டன் வரலாற்றில், பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளையர் அல்லாத, ஐரோப்பியர் அல்லாத, ஹிந்து மதத்தை பின்பற்றும் முதல் நபர் இவர் தான். இவர், இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை தான் மணந்துள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னராக பொறுப்பேற்ற பின், சார்லஸ் நியமித்துள்ள முதல் பிரதமர் இவரே.

இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த நாட்டின் உயர் பதவியை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அலங்கரித்திருப்பது, வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுவதோடு, இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

ரிஷி சுனக்கிற்கு முன் பிரதமராக பதவி வகித்த லிஸ் டிரஸ், 45 நாட்களே பதவியில் இருந்த நிலையில், ஆளும் கட்சியில் எழுந்த கடும் எதிர்ப்பு அலையால், இம்மாதம், 20ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பணவீக்கம், 10 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. அதனால், பிரதமர் பதவியானது, ரிஷி சுனக்கிற்கு முள்கிரீடமாகவே இருக்கும்.

தற்போதைய நிலையில், சுனக்கின் முன்னுரிமையானது, பிரிட்டனின் நலன்களை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டியதாகவே இருக்கும். முந்தைய காலனி ஆதிக்க எஜமானர்களை, அவர்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் மீட்டுக் கொண்டு வரவே, அவர் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என நம்பலாம். அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அரசின் செலவுகள் மற்றும் வரி விதிப்புகள் விஷயத்தில், சில கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும்.

அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில சமூகத்தினரின் நலன்களில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டவரின் நலன்களையும் பேணிக்காக்க வேண்டிய கடமையும் அவருக்கு உள்ளது.மேலும், பிரிட்டனில் உள்ள ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியானது, வெள்ளையர்கள் அல்லாத வாக்காளர்களின் விருப்பமான கட்சியும் அல்ல. இதனாலும், அவர் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம்.

சுனக்கின் இந்த வளர்ச்சி வாயிலாக, பிரிட்டனின் உயரிய பதவிக்கு, அந்த நாட்டை சேர்ந்த யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற பன்முகத்தன்மையை நோக்கி அந்நாடு செல்கிறது என, எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. ஏனெனில், ரிஷி சுனக் பதவியேற்ற போது, பிரிட்டன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில், 'சுனக் ஒரு நல்ல பிரதமராக இருப்பார்' என்று, ௩௬ சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், எதிர்க்கட்சி தலைவரான சர் கீர் ஸ்டார்மருக்கு, ௪௬ சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்த போது, அவரது தலைமையிலான அமைச்சரவையில், நிதி அமைச்சராக இருந்தவர் சுனக். அதனால், பிரிட்டன் நாட்டின் நிலைமையும், அந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் என்னவென்பதை, நன்கு அறிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அதனால், நம்மை ஆண்ட நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அவர், நிச்சயம் சாதிக்க வேண்டும்; இந்தியாவுக்கு பெருமை தேடித் தர வேண்டும்; விமர்சகர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என, வாழ்த்துவோமாக!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement