லேப்-டாப்பில் மெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, அழைப்பு மணியைக் கேட்டு எழுந்து வெளியே சென்றாள். வாசலில் பார்சல்களுடன் நின்றாள் சித்ரா.
ஆச்சரியத்துடன் வரவேற்ற மித்ரா, 'வாங்கக்கா...'என்ன சர்ப்ரைஸ் விசிட்டா இருக்கு' என்றபடி பார்சல்களை வாங்கிக் கொண்டாள். உள்ளே சென்ற சித்ரா, சோபாவில் சாய்ந்து, மின் விசிறியைக் கூட்டச் சொல்லி விட்டு பதில் சொன்னாள்...
''நான் என்ன அறிக்கை விட்டு, போஸ்டர் அடிச்சிட்டு வர்றதுக்கு, அரசியல்வாதியா என்ன...கொஞ்சம் 'ஷாப்பிங்' பண்ண வேண்டியிருந்துச்சு. வாங்கிட்டு அப்பிடியே இந்தப் பக்கம் வந்தேன்!''
''நீங்க அரசியல்வாதியில்லை...ஆனா வர்றப்பவே அரசியலோடதான் வர்றீங்க...நம்ம ஊரு காரு வெடிப்புல, ஆளுக்கு ஆளு பண்ற அரசியலைத்தானே சொல்றீங்க?''
பேசிக் கொண்டே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் மித்ரா. தண்ணீரைக் குடித்தபடி பேச்சைத் தொடர்ந்தாள் சித்ரா...
''ஆமா மித்து! எந்த சாமி புண்ணியத்துலயோ நம்ம ஊரு தப்பிச்சிருச்சு... என்.ஐ.ஏ.,விசாரணையையும் ஆரம்பிச்சிட்டாங்க...!''
''அது நடக்கட்டும்...கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு, மாறிமாறி தலைவர்கள் வர்றதுல அங்க இருக்குற செயல் அலுவலருக்குதான், பெரிய தலைவலியா இருக்காம். அர்ஜுன் சம்பத், ஞாயித்துக்கிழமையன்னிக்கு அங்க வந்து வழிபாடு பண்ணுனப்போ, சில 'டிவி'காரங்க 'லைவ்' போட்டுட்டாங்க. உடனே சென்னையில இருந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூப்பிட்டு 'டோஸ்' விட்ருக்காங்க!''
''அதுக்கு அவரு என்ன பண்ணுவாரு?''
''அதான்...நேத்து அண்ணாமலை வந்தப்போ, அந்த அதிகாரி சுதாரிச்சிட்டு, கேமராமேன்களுக்கு கும்பிடு போட்டு, 'தயவு செஞ்சு வெளிய போயிருங்க'ன்னு கெஞ்சிட்டு இருந்தாரு. ஆனா அவுங்க அதைக் கேக்காம, 'லைவ்' பண்ணிட்டு இருந்தாங்க. அதை பாத்துட்டு, 'இந்த ஆபீசருக்கு இன்னும் ரெண்டு நாள்ல, ஓலை வரப்போகுது'ன்னு போலீஸ்காரங்களும், கட்சிக்காரங்களும் சிரிச்சிட்டு இருந்தாங்க!''
இதைச் சொல்லும்போதே, 'டிவி' செய்தியைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள் சித்ரா...
''கலெக்டராபீஸ் மீட்டிங்ல செந்தில் பாலாஜியும், வேலுமணியும் ஒண்ணா கலந்துக்கிட்டாங்களாமே...!''
''ஆமாக்கா... கார் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு அப்புறம், கோவைக்கு முதல்வர் வரலைன்னு வானதி குற்றம் சாட்டுனதால, அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில சட்டம் ஒழுங்கு கூட்டம் நடத்துனாங்க. அதே நாள்ல எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்துனா, அவுங்க யாரும் வரமாட்டாங்கன்னு நினைச்சாங்க. ஆனா வேலுமணி தலைமையில எல்லா எம்.எல்.ஏ.,க்களும் வந்துட்டாங்க!''
''ஆஹா...ரெண்டு பேரும் சந்திச்சாங்களா?''
''இல்லைக்கா...அப்பிடி சந்திச்சிருந்தா, 'ஒரு மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...இரண்டும் சந்தித்தபோது பேச முடியவில்லையே' மொமன்ட்' இருந்திருக்கும்.
ஆனா நம்ம கலெக்டர் ரொம்ப விவரமா, அமைச்சர் கூட்டத்தை புது பில்டிங்லயும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை பழைய பில்டிங்லயும் நடத்திட்டாரு. சந்திப்பும் இல்லை...சண்டையும் இல்லை...கிரேட் எஸ்கேப்!''
மித்ரா பேசிக் கொண்டே, பிளாஸ்க்கில் இருந்த சுக்குமல்லி காபியை இருவருக்கும் ஊற்றினாள். அதைச் சுவைத்தபடி, சித்ரா கேட்டாள்...
''மித்து! கோவை கலெக்டராபீஸ்ல மாசாமாசம் நடக்குற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்துல கொடுக்குற மனுக்களுக்கு, எந்தத் தீர்வும் கிடைக்கிறதில்லைன்னு சொல்லி, இந்த கலெக்டர் இருக்குற வரைக்கும், நாங்க கூட்டத்துல கலந்துக்க மாட்டோம்னு கந்தசாமி தலைமையிலான விவசாயிகள் சங்கம் புறக்கணிச்சாங்களே...இப்ப வர்றாங்களா?''
''இப்ப வரைக்கும் வரலைக்கா...கந்தசாமி சங்கத்துக்காரங்க புறக்கணிச்சதைப் பத்தி, பழனிசாமி தலைமையிலான கம்யூனிஸ்ட் விவசாயிகள் சங்கத்துக்காரங்க, வாட்ஸ்ஆப்ல கிண்டலடிச்சு மெசேஜ் போட்டுட்டு இருந்தாங்க. அவுங்களும் அதே காரணத்தைச் சொல்லி, போன கூட்டத்தை புறக்கணிச்சிட்டாங்க. இப்போ கந்தசாமி சங்கத்துக்காரங்க, அவுங்களை கிண்டலடிக்கிறாங்க!''
''இவுங்களைப் பார்த்தா, 'நாங்களும் மதுரைக்காரய்ங்கதாண்டி...அப்பவே நாங்க சொன்னோம்ல' காமெடிதான் ஞாபகத்துக்கு வருது...அது சரி மித்து...இப்பிடி எல்லா சங்கத்துக்காரங்களும் புறக்கணிச்சா, யாரை வச்சு விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தை, கலெக்டர் நடத்துவாரு?''
''அதுலதான் கலெக்டர் ரொம்பவே சங்கடமாயிட்டாராம்...நிலுவையில இருக்குற மனுக்களை எல்லாம் என் பார்வைக்குக் கொண்டு வாங்கன்னு சொல்லி, நடவடிக்கை எடுக்குறதுக்கு வேகமா வேலை பாக்குறாராம்!''
குறுக்கிட்டுப் பேசினாள் சித்ரா...
''இந்த ஆம்னி பஸ்களோட அட்டூழியத்துக்கும், கலெக்டர் தான் கடிவாளம் போடணும். இந்த தீபாவளியில ஆர்.டி.ஓ.,ஆபீஸ்காரங்க ஒத்துழைப்போடயே, அள்ளித்தட்டிட்டாங்க!''
''இல்லையே மித்து...ஆர்.டி.ஓ.,க்கள் ஆய்வெல்லாம் நடத்துனாங்களே?''
''நடத்துனாங்க...ஆனா அவுங்க எங்க ஆய்வுக்கு வர்றாங்கங்கிறவிஷயம், முன் கூட்டியே தெரிஞ்சு, வேற ரூட்ல ஆம்னி பஸ், வேன் எல்லாத்தையும் எல்லா ஊருக்கும் 'ஷன்டிங்' அடிச்சிருக்காங்க. இந்த தகவலைச் சொன்ன ஆர்.டி.ஓ., ஆபீஸ் கருப்பு ஆடுகளுக்கு, 'பம்பர் பிரைஸ்' கொடுத்திருக்காங்களாம்!''
''தீபாவளின்னதும் ஞாபகம் வந்துச்சு...அன்னிக்கு ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, நரசீபுரம், கோட்டைக்காடு, மத்வராயபுரம்னு மூணு இடத்துல சேவல் சண்டை நடந்திருக்கு...அதுல ஸ்டேஷன் இன்ஸ்க்கு, ஒரு இடத்துக்கு ஒரு லட்ச ரூபா தீபாவளி பரிசு கிடைச்சிருக்கு. அதே மாதிரி, பேரூர் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல மத்திபாளையத்துலயும் சேவல் சண்டை நடந்திருக்கு!''
சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டுக் கேட்டாள் மித்ரா...
''அங்க இருக்குற இன்ஸ்க்கு எவ்வளவு கிடைச்சுதாம்?''
''இன்னும் சொல்லியே முடிக்கலையே...அந்த ஸ்டேஷன்ல இருக்குற இன்ஸ் மேடத்துக்கே தெரியாமல்தான், இந்த சேவல் சண்டை நடந்திருக்கு. பொன்னான பேரைக் கொண்ட எஸ்.ஐ.,தான் அதுக்கு 'கிரீன் சிக்னல்' கொடுத்திருக்காரு. அதுக்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிருக்காரு!''
''லஞ்சம்னதும் ஞாபகம் வந்துச்சு... துாய்மைப் பணியாளர்கள் சங்கத்துக்காரங்க கொடுத்த புகாரை விஜிலென்ஸ் விசாரிக்கிறாங்க. கார்ப்பரேஷன்ல வேலை பாக்குற கம்ப்யூட்டர் ஆபரேட்டர்ல துவங்கி, மண்டலத்துக்கு ரெண்டு பேர்ட்ட, 'எப்போ வேலைக்கு சேர்ந்தீங்க, எவ்வளவு பணம் கொடுத்தீங்க'ன்னு கேட்ருக்காங்க. சம்பளத்தை ஆட்டைய போடுற கான்ட்ராக்டர்ஸ் கலங்கிப் போயிருக்காங்க!''
மித்ரா பேசிக் கொண்டிருந்தபோது, 'டிவி'யில் ஏதோ பல்கலை செய்தியைப் பார்த்ததும் சித்ரா தொடர்ந்தாள்...
''நம்ம பாரதியார் யுனிவர்சிட்டி முன்னாள் துணைவேந்தர் மேல, ஏகப்பட்ட ஊழல் புகார் இருக்கு. குறிப்பா, பணம் வாங்கிட்டு, 'அப்பாயின்ட்மென்ட்' போட்ருக்காரு, இவர் பேரை வச்சு, சில சிண்டிகேட் மெம்பர்களும் ஆதாயமடைஞ்சிருக்காங்கன்னு கம்பிளைன்ட்...!''
''ஆமாக்கா...அவருக்கு வேண்டிய சிண்டிகேட் மெம்பர் ஒருத்தரு ஏற்பாட்டுல, நம்ம கவர்மென்ட் ஆர்ட்ஸ்ல இருந்த ஏழு பேரை, தொலைநிலைக் கல்வி இயக்கத்துக்கு மாத்திருக்காங்க.
வேண்டப்பட்ட ஒருத்தரை மட்டும், ஈரோட்டுல இருக்குற பி.ஜி.,எக்ஸ்டன்ஷன் மையத்தோட முக்கியப் பொறுப்புல போட்ருக்காங்க. இவுங்க ரெண்டு பேரும், அந்த வி.சி.,க்கு ஏகப்பட்ட விஷயங்களை முடிச்சுக் கொடுத்திருக்காங்க!''
''இப்போ யுனிவர்சிட்டியில நடந்த போராட்டம் கூட, அவரோட துாண்டுதல்ல நடந்ததாவே ஒரு பேச்சு இருக்கு... புது வி.சி., போடுற வரைக்கும் இந்த ஒருங்கிணைப்புக்குழு என்ன பண்ணப் போறாங்கன்னு தெரியலை...ஏதாவது நல்லது பண்ணுனா சரி!''
இதைச் சொல்லி விட்டு, ஆதங்கத்துடன் கேட்டாள் சித்ரா...
''நம்ம ஊருல சந்தோஷப்படுறா மாதிரி, எதுவுமே நடக்குறதில்லையா மித்து?''
''நடக்குதுக்கா...பல விஷயங்கள் வெளியே வர்றதில்லை. நீட், ஜே.இ.இ., மாதிரி போட்டித் தேர்வுகளுக்கு, கவர்மென்ட் ஸ்கூல் பசங்களை கலந்துக்க வைக்க மாடல் ஸ்கூல்களை உருவாக்கிருக்காங்க. நம்ம மாவட்டத்துல ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி காது கேளாதோர் பள்ளியை மாத்திருக்காங்க. அங்க பிளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ் தங்கிப் படிக்கிறாங்க!''
''இதுல என்ன ஸ்பெஷல்?''
''அக்கா! அவுங்களோட வகுப்புகளைக் கையாள, ஸ்பெஷலா டீச்சர்ஸ் நியமிச்சிருக்காங்க. பசங்களுக்கு சாப்பாடு சமைக்க ஆள் வராத நாள்ல, எச்.எம்.,பரிமளாவே சமைச்சுக் கொடுக்குறாங்க.
ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் இளமுருகன், காய்கறி நறுக்கிக்கொடுத்து, சமையலுக்கு உதவி பண்றாராம். பசங்க படிச்சாப் போதும்னு, அந்த எச்.எம்.,10 மணிக்குதான் வீடு திரும்புறாராம்!''
''அப்பிடின்னா அவுங்க எம்.எம்.,மா இருக்குற ஸ்கூலோட நிலைமை...!''
''அவுங்க, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலதான் தலைமையாசிரியரா இருக்காங்க. அந்த ஸ்கூல், மாடல் ஸ்கூல் ரெண்டையுமே நல்லா நடத்துறாங்களாம்...பசங்க, பேரன்ட்ஸ் எல்லாரும் பாராட்டுறாங்க!''
''கேக்கவே சந்தோஷமா இருக்கு மித்து...!'' என்ற சித்ரா, கடிகாரத்தைப் பார்த்து விட்டு, 'அச்சச்சோ...டைம் ஆச்சுடா...நான் கிளம்புறேன்...நாளைக்குப் பார்ப்போம்!'' என்று பார்சல்களை எடுத்துக் கொண்டு, நடையைக் கட்டினாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!