Load Image
Advertisement

'கணக்கு' காட்டாம சரக்கு... 'கல்லா' கட்டுறது யாருக்கு?

'மித்து... காலைலயே 'சரக்கு' அடிச்சுட்டு, ரோட்டுல, 'குடி'மகன்கள் ஒரே அலப்பறை பண்றாங்க'' என்று கூறியவாறே, மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.

''ஆமாக்கா... இப்பெல்லாம் சின்ன சின்ன பசங்க கூட போதை பழக்கத்துக்கு அடிமையாகிடறாங்க,'' என அங்கலாய்த்தாள் மித்ரா.

''ஆமா மித்து; டாஸ்மாக் சரக்கோட நிக்கறதில்ல... பான்பராக், குட்கா, கஞ்சான்னு போதை வஸ்துகளைப் பயன்படுத்த இளைஞர்கள் பழகிடறாங்க. இதையெல்லாம் வாங்கறதுக்கும், விக்கறதுக்கும் தடை விதிச்சாலும் கூட, நிறைய இடங்கள்ல வித்துட்டுத்தான் இருக்காங்க. அவங்கள போலீஸ்காரங்க 'அரெஸ்ட்' பண்ணி ஜெயிலுக்கு அனுப்பினா கூட திருந்த மாட்டேங்கறாங்களாம். ஜாமீன்ல வந்ததுக்கு அப்புறம் கூட, அதே தொழிலை தான் திரும்ப திரும்ப செய்றாங்களாம். இப்படித்தான், பல்லடம் மாதப்பூர்ல, குடும்பம் சகிதமா போதை வஸ்துகளை வித்துட்டு இருந்தவங்கள அங்க இருந்த பொதுமக்களே கையும், களவுமா பிடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சிருக்காங்க. அவங்க ஜெயிலுக்கு போய்ட்டு, ஜாமீன்ல வந்ததுக்கு அப்புறம் பார்த்தா மீண்டும் வியாபாரம் பட்டைய கிளப்புதாம்,'' என்றாள் சித்ரா, கவலையுடன்.

''இந்த விஷயம் அங்க இருக்கிற போலீஸ்காரங் களுக்கு தெரியாமலா இருக்கும்?,'' என மித்ரா வெள்ளந்தியாய் கேட்க, ''அதெப்படி தெரியாம இருக்கும். தெரிஞ்சும், தெரியாத மாதிரி தான் இருப்பாங்க. இப்பல்லாம், போலீஸ்காரங்களே குட்கா வியாபாரம் செய்ற அளவுக்கு நிலைமை மாறிப்போச்சு… நீ என்னடான்னா விவரம் புரியாதவளா இருக்கியே,'' என சித்ரா செல்லமாக கடிந்துக் கொண்டாள்.

''என்னக்கா சொல்றீங்க'' என வாய் பிளந்தாள் மித்ரா.

''அவிநாசி, தெக்கலுார் பக்கம் இருக்கற ஆலம்பாளையத்துல, ஒரு வியா பாரிகிட்ட இருந்து, ரெண்டு மூட்டை அளவுக்கு தடை செய்யப்பட்ட குட்காவை, போலீஸ்காரங்க பறிமுதல் பண்ணியிருக்காங்க. ஆனா, வழக்குப்பதிவு பண்ணாம விட்டுட்டாங்க. ஒரு போலீஸ்காரர், அந்த குட்கா மூட்டைய எடுத்துட்டு போய், மூவாயிரம் ரூபாய்க்கு வேறொரு கடைல வித்து காசு பார்த்துட்டார்ன்னா பார்த்துக்கோயேன்.

''அதே மாதிரி, பழங்கரை பக்கம் ரோந்து போன ஒரு போலீஸ்காரர், கால் கிலோ கஞ்சாவோட ஒருத்தர பிடிச்சட்டு வந்து, ஸ்டேஷன்ல ஒப்படைச்சிருக்காரு. அவர் மேலயும் 'கேஸ்' எதுவும் போடாம விட்டுட்டாங்களாம்; ஸ்டேஷன்ல இருக்க ஒரு பெரிய அதிகாரி, அவருகிட்ட, 25 ஆயிரம் ரூபா 'டீல்' பேசி வசூல் பண்ணிட்டாங்கன்னு சொல்றாங்க,'' என்று அம்பலமாக்கினாள், சித்ரா.

''அடக்கடவுளே… வேலியே பயிரை மேய்ற மாதிரி, இவங்களே இப்படி பண்ணாங்கன்னா, எப்படிதான் போதைப்பொருட்கள் ஒழியும்?'' என, மித்ரா அங்கலாய்த்தாள்.

டாஸ்மாக் 'ரகசியம்'''தீபாவளிக்கு இலக்கை தாண்டி நம்ம 'குடி'மகன்கள் மது குடிச்சிருக்காங்க, தெரியும்ல'' என சித்ரா கூற, 'இதை சொல்லி தெரியணுமாக்கா' என்று சிரித்தாள் மித்ரா.

''அந்த மூணு நாள்ல மட்டும், நம்ம மாவட்டத்துல, 32 கோடிக்கு மது விற்பனை செஞ்சிருக்கிறதா கணக்கு சொல்றாங்க... மது ஆலைகள்ல இருந்து 'டாஸ்மாக்' கடைகளுக்கு கொண்டு வர்ற மதுபாட்டில்கள்ல, 10 சதவீத பாட்டில்களை கணக்குல காட்டக்கூடாதாம். இந்த மதுபாட்டில்களை குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டும் அனுப்பி, வித்துடறாங்க. இதுல வர்ற பணம் எங்கேன்னு கேட்டா, 'மேலிடத்துக்கு'ன்னு சொல்றாங்களாம். கடை மேற்பார்வையாளருக்கோ, விற்பனையாளருக்கோ ஒரு பைசா கூட கிடையாதாம்,'' என 'ரகசியம்' உடைத்தாள் மித்ரா.

''மித்து... இந்த மாதிரி ஒவ்வொரு துறையிலும், 'மேலிடம்'னு ஒரு வார்த்தையை சொல்லி 'கல்லா' கட்றாங்க... உண்மையில என்ன நடக்குதுன்னு சம்பந்தப்பட்ட அமைச்சரே வந்து அதிரடி காட்டுனா தான் தெரியும்... இந்த காசை யாரு சுருட்டுறாங்கன்னு அப்பத்தான் தெரியும். ஆனா, எங்க நடக்கப்போகுது... அடுத்த எலக்ஷன் வர்றப்ப தான், இதோட ரியாக்ஷன் என்னென்னு தெரியும்'' என, 'அலர்ட்' கொடுத்தாள் சித்ரா.

''பல்லடம் பக்கத்தில இருக்கிற 'பட்டி இஞ்சி' பஞ்சாயத்துல, வீடில்லாம இருக்கற ஏழை மக்களுக்கு, அரசாங்கத்தோட பட்டா வாங்கி தர்றதா சொல்லி, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, தீயா வேல பார்க்குறாராம். அங்க இருக்கிற பூங்காவை அழிச்சு, அந்த இடத்துல பட்டா கொடுத்தாகணும்ன்னு, ஒத்த கால்ல நிக்கிறாராம். விசாரிச்சு பார்த்தா…பட்டா வாங்கித்தர்றதா சொல்லி, கலெக்ஷன் அள்றாருன்னு பேசிக்கிறாங்க. இதப்பத்தி இளைஞரணியில இருக்கற 'சிவகுமார்' அண்ணன்கிட்ட கேட்டா விவரம் புரியும்,'' என்று, சித்ரா 'வில்லங்க' விவகாரத்தைச் சொன்னாள்.

'லீவு' நாளில் 'டீல்'''மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்வாங்க; ஆனா, எந்த ஊருக்கு மாத்தினாலும், சிட்டியை மறக்காம இருக்காராம் ஒரு போலீஸ் அதிகாரி'' என்ற சித்ரா தொடர்ந்து பேசினாள். ''டாலர் சிட்டிங்கறதால, நிறைய போலீஸ் அதிகாரிங்க காட்டுல பண மழைதான். வசூல் அள்ளி பழகின ஒரு பெரிய அதிகாரியை பழநிக்கு மாத்திட்டாங்க. இருந்தாலும், அங்க இருந்துட்டே, இங்க தன்னோட செல்வாக்கை காண்பிக்கிறாராம். வார லீவு நாட்கள்ல இங்க வந்து 'டீல்' பேசற விஷயங்களை எல்லாம் 'நல்லபடி'யா முடிச்சுட்டு போறார்ன்னு பேசிக்கிறாங்க. சிட்டிக்கு 'வேந்தரா' இருக்க ஆசைப்படறாரு போல'' என்று மித்ரா கலகலத்தாள்.

''சிட்டி லிமிட்ல மட்டும், 87 'ஸ்பா' இருக்காம். சில இடங்கள்ல 'பியூட்டி பார்லர்'ங்கற பேர்ல 'மசாஜ் சென்டர்' நடத்தறாங்களாம். இதை கண்காணிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ்காரங்க, கமிஷன் வாங்கிட்டு, 'கம்'முன்னு இருக்காங்கன்னும் சொல்றாங்க'' என காதில் கேட்டதை சொன்னாள் சித்ரா.

''நல்ல ஊருக்கு புதுசா ஒரு லேடி போலீஸ் அதிகாரி வந்திருக்காங்க; நேர்மையானவங்களாம்; கண்டிப்பானவங்களாம். ஆனா, அவங்களோட ஜீப் டிரைவருங்க ரெண்டு பேரு பண்ற 'அட்ராசிட்டி' தாங்க முடியலையாம். டாஸ்மாக், பட்டாசு கடை, கட்டப்பஞ்சாயத்துன்னு, வளைச்சு, வளைச்சு காசு பார்க்குறாங்களாம்; அவங்க எங்ககெங்க போனாங்க, எவ்வளவு வசூல் பண்ணுனாங்கன்னு, ஸ்டேஷனுக்குள்ள பட்டிமன்றமே நடக்குதுன்னா பார்த்துக்கோயேன். அதே மாதிரி அங்க இருக்கற ஒரு 'சின்ன' அதிகாரியும், தில்லா கல்லா கட்றாராம்,'' என்றாள் மித்ரா.

''அந்த அதிகாரி ஏற்கனவே, நம்ம சவுத் பக்கம் இருந்து போனவரு தானே'' என சித்ரா கூற, ''அவரே தான் மித்து. சவுத் பக்கம் இருக்கும் போதே அவரு மேல ஏகப்பட்ட புகாரு. அங்க போயும், அவர் மாறல போல,'' என, விஷயத்தை உள்வாங்கினாள் சித்ரா.

''ம்ம்ம்…சொல்ல மறந்துட்டேன் அக்கா. 'பெருமாள் அண்ணனும், மாறன் அண்ணனும் நாளைக்கு வீட்டு வர்றதா சொன்னாங்க,'' என, ஞாபகத்துக்கு வந்ததை வெளிப்படுத்தினாள், மித்ரா.

அரசியல்ல சகஜமப்பா!''தீபாவளி பண்டிகையப்போ, உள்ளாட்சிகள்ல வேல செய்ற துாய்மை பணியாளருங்க சந்தோஷப்படற மாதிரி, அ.தி.மு.க.,காரங்க அவங்களுக்கு ஸ்வீட், புது துணியெல்லாம் கொடுத்தாங்க. போன தேர்தல்ல, அ.தி.மு.க.,வுல 'சீட்' கேட்டு கிடைக்காததால, சுயேட்சையா நின்னு ஜெயிச்சு, ஆளுங்கட்சியில ஐக்கியமான ஒரு லேடி கவுன்சிலரும் துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்திருக்காங்க. இதை கவனிச்ச, ஆளுங்கட்சி நிர்வாகிங்க சிலரு, 'ஏன்மா… இப்படியெல்லாம் செய்றீங்க; அ.தி.மு.க.,வுல இருக்கிற மாதிரியே நினைச்சுட்டீங்களா; கட்சியோட கொள்கைக்கு ஏத்த மாதிரி மாறிக்கணும்; நம்ம தலைவரு தான் தீபாவளிக்கு வாழ்த்துக்கூட சொல்றது இல்ல; நீங்க என்னடான்னா புது துணியெல்லாம் கொடுத்து கொண்டாடறீங்கன்னு கேட்டிருக்காங்க,'' என்று மத்தாப்பூ புன்னகையுடன் கூறினாள் மித்ரா.

''ஆளுங்கட்சின்னு சொல்லவும் தான், இன்னொரு விஷயம் ஞாபகம் வருது மித்து. மெடிக்கல் காலேஜ்ல நடந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்குல அரங்கம் முழுக்க கருப்பு, சிவப்பு பலுான் கட்டி அலங்கரிச்சு வச்சிருந்தாங்களாம். இது அரசு நிகழ்ச்சியா, அரசியல் நிகழ்ச்சியான்னு, கலந்துகிட்டவங்களுக்கே சந்தேகம் வந்துடுச்சாம்,'' என்று சித்ரா 'சீரியஸாக' சொன்னாள்.

''மழை வர்ற மாதிரி இருக்கு... சூடா லெமன் டீயோட வர்றேன்'' என்று சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா. சித்ரா காத்திருந்தாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement