பொதுவாக ராணுவத்தினர் மனஉறுதி மிக்கவர்கள் எதற்காகவும் கண்ணீர் சிந்தாதவர்கள் கலங்கி நிற்காதவர்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வைப் பார்த்து ராணுவ அதிகாரிகள் உள்பட பலரும் நெகிழ்நது போய் கண்கலங்கி நின்றனர்.
சென்னையில் பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த அதிகாரிகள் தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் மகத்தான விழா.
186 அதிகாரிகளில் 35 பேர் பெண்கள்
பெண் அதிகாரிகள் மிடுக்காக நடந்து தங்களுக்கான மெடல்களையும் நட்சத்திர அந்தஸ்தையும் பெற்று அதனை துாரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த உறவுகளிடம் காண்பித்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
அதில் ஒரு பெண் அதிகாரியின் கையைப்பிடித்துக் கொண்டு சீக்கிய சிறுவன் ஒருவன் கம்பீரமாக அந்த மைதானத்தில் நடந்து கொண்டு இருந்தான்.அந்த சிறுவன் யார் என்பதை விட அந்த சிறுவனின் அம்மா யார் என்பதுதான் முக்கியம்.
பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஹர்வீன் என்பவர் படித்து முடித்து தனது ஊரில் உள்ள சர்வதேச பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துவந்தார் அவருக்கும் 129வது பட்டாலியனைச் சார்ந்த மேஜர் கலோனுக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது.
பாசமும் நேசமும் கொண்ட அன்புக்கணவனின் பரிசாக ஹர்வீன் கர்ப்பமுற்றோர் அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருந்த போது இடியென ஒரு செய்தி வந்தது.ஆம் அவரது பாசத்திர்குரிய கணவர் மேஜர் கலோன் எல்லை பாதுகாப்பில் இருந்தபோது எதிரிகளின் குண்டுபாய்ந்து வீரமரணம் அடைந்தார் என்பதுதான் அந்த செய்தி.அப்போது அவருக்கு வயது 26தான்.
கணவரின் நினைவாக அவரது ராணுவ உடை ஹர்வீனிடம் வழங்கப்பட்டது.கணவர் மேஜர் கலோன் காதலுடன் மனைவியுடன் பேசும் போது கூட ராணுவத்தின் சிறப்பையும் அதன் மேன்மையையும் நாட்டிற்கு செய்யும் சேவையையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்.அந்தப் பேச்சும் நினைவுகளும் கணவரின் ராணுவ உடையைப் பார்த்ததும் ஹர்வீனுக்கு மலரும் நினைவுகளாக மனதிற்குள் வந்து நின்றது.
கணவர் பாதையில் தானும் பயணிக்க முடிவு செய்தார் அதற்கான ராணுவ தேர்வுகளை எழுதிவிட்டு காத்திருந்தார் இதற்கு இடையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது கணவர் கலோனை அப்படியே உரித்துவைத்திருந்த தனது மகனுக்கு அன்ஹட்பிர்சிங் என பெயரிட்டு அவனே தன் உலகம் என வளர்த்துவந்தார்.
மகனுக்கு ஓன்றரை வயதான போது அவர் தேர்வுகளில் வெற்றி பெற்று ராணுவ உயர் பயிற்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டார்.பயிற்சி பெறும் 11 மாதகாலமும் மகன் உள்பட எந்த உறவுகளையும் பார்க்கமுடியாது என்ற நிலையில் தாய் நாட்டிற்காக தனது தாய் உள்ளத்தை 11 மாத காலம் மறந்திருக்க முடிவு செய்தார்.
உறவினர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து ராணுவ அதிகாரி என்ற பட்டம் கிடைத்ததும் அவரது கண்கள் முதலில் தேடியது அவரது மகனைத்தான்அதே போல இரண்டரை வயதான மகனின் கண்களும் அவனது தாயின் முகத்தை தேடியது
இரண்டு பேரும் பயிற்சி மைதானத்தில் சந்தித்துக் கொண்டது போது, உறவினர்களின் தோள்களில் இருந்து தாவிக்குதித்து ஒடி தன் அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்து பாசத்தை பொழிந்தான் மகன்.
அவனது கண்களில் கணவனின் ஆசீர்வாதத்தையும் அன்பையும் கண்ட ஹர்வீன் ஒரே நேரத்தில் மகிழவும் நெகிழவும் செய்தார்.இந்தக் காட்சி சுற்றி நின்றவர்கள் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
கணவரின் மறைவிற்கு பிறகு அவர் தந்த மகனே உலகம் என வாழ்ந்துவந்தேன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் ராணுவ அதிகாரியாக வேண்டும் என்றால் குழந்தையை தற்காலிகமாக பிரிந்திருக்க வேண்டும் என்பது மனதிற்கு கடினமான மற்றும் சவலான விஷயம்தான், இருந்தும் நான் எடுத்த இந்த முடிவை கணவரின் ஆத்மா இங்கே எங்கேயோ இருந்து வாழ்த்திக் கொண்டுதான் இருக்கும் எனது மகன் வளர்ந்தபிறகும் என்னை வாழ்த்துவான் என்று கண்கலங்க ஹர்வீன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்
அதே நேரம் சிறிது துாரத்தில் ராணுவ அதிகாரியான அம்மாவின் கைப்பிரம்பை கையில் வைத்துக் கொண்டு, ராணுவ வீரர்கள் போல நடந்தும் சல்யூட் செய்தும் மகன் அன்ஹட்பீர் சிங் விளையாட்டாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான்
மேஜர் ஹர்வீன் கவுர் கலோனின் வீட்டில் அடுத்த ராணுவ வீரர் ரெடி...
-எல்.முருகராஜ்
உங்கள் வடிவில் பரத மாதாவை பார்க்கிரோம். வாழ இடம் இல்லாத மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை