அரசின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், பணியில் சேரும் போது கொடுக்கப்படும் அடிப்படை பயிற்சி தவிர, அவர்களது பணிக்காலத்தில், பணியிடை பயிற்சி கொடுக்கப்படுகிறது.
சமுதாயத்தில் நிகழும் மாற்றங்களுக்கும், அவ்வப்போது ஏற்படும் தேவைக்கும் ஏற்ப அவர்களது பணி இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, அவர்களது திறமை மற்றும் பணியில் காட்டும் உற்சாகம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படுவது தான் பணியிடைப் பயிற்சி.
ஆனால், இந்த பயிற்சி கொடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அந்த பணியின் முக்கியத்துவத்தையும், பயிற்சியில் உட்படுத்த வேண்டிய விஷயங்களையும் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே, இந்த நோக்கம் நிறைவேறும்.
சட்ட விரோத செயல்
பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பாடத்தை மட்டுமே போதித்து, அடுத்தவரை மதிக்கும் மனவளத்தை மாணவர்களுக்கு போதிக்காமல் விடுவதால் தான், மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒருவரை யொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்கின்றனர்.
அதேபோல் அரசு அதிகாரிகளுக்கு, அவர்களது பணி பற்றிய செயல்முறைகளைப் பற்றி மட்டுமே போதிப்பதோடு மட்டும் நிறுத்தி, சமூக அக்கறை, மனித நேயம், மக்களின் நட்பையும் ஒத்துழைப்பையும் தேடிச் சென்று பெறுதல் போன்றவை போதிக்கப்படுவதில்லை.
சில சட்ட விரோத செயல்கள் ரகசியமாக பூத்துக் காயாகி கனிந்து அழுகத் தொடங்கும்போது தான், அதிகாரிகளின் அறியாமை வெளிப்படுகிறது; எதிர்க்கட்சியினர் 'டின்' கட்டுகின்றனர்.
சில அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தைக் காட்டவும், சுய லாபத்திற்காக மக்களிடம் கடுமை காட்டவும் செய்கின்றனர்.
ஆற்றல் மிக்க அதிகாரிகள், ஆரவாரமின்றி தங்களின் கடமையை தவறாது செய்து அனைவரின் பாராட்டையும் பெறமுடியும் என்பதை, அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.
அதிகாரிகள் எதிர்கொள்ளும் சம்பவங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவை, வழக்கமாக நிகழக் கூடிய, முன் அனுபவத்தின் மூலம் தீர்வு காண இயலும் சம்பவங்கள்.
இருபது சதவீத நிகழ்வுகளைச் சமாளிக்கத்தான் தனித்திறமை தேவைப்படும். அந்த திறமைக்கு துணை நிற்பது, எந்த சூழலில் எந்த அளவுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும், எந்த அளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு சார் நுண்ணறிவு.
விழிப்புணர்வு
பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உள் உணர்வையும், தவறான நபர்கள் வெளிப்படுத்தும் போலித்தனமான நடிப்பையும் புரிந்து கொள்ள உதவும் புலனுணர்வு மேலாண்மை, சட்டப்படியும் நியாயப்படியும் சரியானவற்றை தயக்கமின்றி செயல்படுத்தும், நம்பிக்கைத் துணிவு அதிகாரிகளுக்கு வேண்டும்.
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியிடத்தில் உள்ள மக்களிடையே நட்பு பாராட்டி, அவர்களுக்கு தான் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, சந்திக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ளுதல், உடன் இருக்கும் உணர்வு என்ற மனப்பக்குவம், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்துவதைத் தவிர்த்தல் ஆகியவை அவசியம்.
மக்கள் கூறும் குறைகளை பொறுமையுடன் ஊன்றி கவனித்துக் கேட்டு புரிந்து கொள்ளும் ஆற்றல், மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய விழிப்புணர்வு தகவல்களை தெளிவாக எளிதில் புரியும்படி சொல்லத் தெரிந்திருத்தல் ஆகியவை அவசியம்.
இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு அரசு அதிகாரி, அரசுக்கும், மக்களுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
சமீபத்திய இரண்டு முக்கிய நிகழ்வுக்கான விசாரணை அறிக்கைகள், மேற்சொன்ன தகுதிகள் அதிகாரிகள் இல்லை என்பதை பறைசாற்றுகின்றன.
அரசும், அரசு அதிகாரிகளும், ஒரே ரதத்தில் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள். ஒரே இலக்கை நோக்கி ஒருமித்து பயணித்தால் மட்டுமே, இலக்கை எட்ட முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு அவசியம் அது மக்கள் நலன் சார்ந்த இலக்காக இருக்க வேண்டும் என்பது!
ஆனால் பல சமயங்களில் அது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சுயலாபம் சார்ந்த இலக்காக இருப்பது கசப்பான உண்மை.
அந்த உண்மை வருவாய்த் துறை, அமலாக்க பிரிவு மற்றும் ஊழல் தடுப்புத் துறையால் வெளிப்படுத்தப்படும்போது, குதிரை ஓடிய பிறகு லாயத்தைப் பூட்டிய கதையாகி விடுகிறது.
குழந்தையாக இருந்த கண்ணன், வெண்ணெயைத் திருடித் தின்று விடுகிறார் என்பதால், உறியில் மணியைக் கட்டி வைத்திருந்தனராம், ஆயர்பாடி பெண்கள்.
இதைத் தெரிந்து கொண்ட கண்ணன், மணிகளிடம், தான் வெண்ணெய் திருடும் போது ஒலி எழுப்பக் கூடாது என்று உத்தரவு போட்டார்; அவையும் ஒப்புக்கொண்டன.
நிரந்தரப் பணி
ஆனால், கண்ணன் வெண்ணெயைத் திருடும்போது அமைதியாக இருந்த மணிகள், கண்ணன் வெண்ணெயை வாயில் போட்டு உண்ணத் துவங்கியபோது ஒலியெழுப்பியதால், பெண்கள் கண்ணனை கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டனர். கண்ணன் மணிகளிடம் கேட்டார், 'ஏன் இப்படி வாக்கு தவறினீர்கள்?' என்று.
மணிகளோ, 'கண்ணா... நீ வெண்ணெய் உண்பது, உனக்கு நடக்கும் நைவேத்யம் என்ற எங்கள் வழிபாட்டு முறை. அப்போது ஒலியெழுப்ப வேண்டியது எங்களது கடமை. அந்தக் கடமையிலிருந்து எப்படி கண்ணா தவற முடியும்?' என்று கேட்டனவாம்.
தன் கடமையின் முன் இறைவனின் நியாயமற்ற கட்டளையைக் கூட மீறும் துணிவு, உறியில் இருக்கும் ஒரு சாதாரண மணிக்கு இருக்கும்போது, நிரந்தரமில்லாத அரசியல்வாதிகளின் தவறான உத்தரவுகளை மீறும் துணிவு, நிரந்தரப் பணியில் இருக்கும்அரசு அதிகாரிகளுக்கு இருக்க வேண்டாமா?
தன் வாழ்க்கையை தொலைத்து விட்டு வந்து, கலங்கி நின்ற பெண்ணிடம், தன் கடமையை செய்ய லட்சம் ரூபாய் கேட்டு பேரம் பேசி, கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பெண் போலீஸ் அதிகாரி...
ஆடிட் அறிக்கை அனுப்ப லஞ்சம் கேட்ட அறநிலையத்துறை அதிகாரி...
களையெடுக்க வேண்டாமா இவர்களை?
படிப்பறிவு இல்லாதவர்கள் கூட, பொது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு காரணம், அவர்களிடம் மேற்குறிப்பிட்ட நல்ல பண்புகளில் சில, பிறவியிலேயே அமைந்து இருந்ததனால் தான்.
தலைவர் என்பவர், அவரிடம் இருக்கும் சில நல்ல குணங்களுக்காக மதிக்கப்படுபவர் தான் என்றார் ஒரு அறிஞர். புரிந்து கொள்ள வேண்டியவர்களுக்குப் புரியுமா?
- மா.கருணாநிதி,
காவல்துறை
கண்காணிப்பாளர் (ஓய்வு)
இ - மெயில்:
spkaruna@gmail.com
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!