வீதியெங்கும் இறைந்து கிடந்த தீபாவளி குப்பையை கடந்து, சித்ராவும், மித்ராவும் வண்டியில் தோழியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத நகர வீதிகளைப் பார்த்து விட்டு, சந்தோஷமான மித்ரா, ஆக்ஸிலேட்டரை வேகமாகத் திருகியபடியே பேசினாள்...
''என்னக்கா...ஒரு மாசமா ஊர் கொஞ்சம் அமைதியா இருந்துச்சு. இப்போ மறுபடியும் சிலிண்டர் வெடிச்சதும் பதற்றமாயிருக்கு...எங்க பார்த்தாலும் போலீசா இருக்காங்க...டி.ஜி.பி.,கூடுதல் டி.ஜி.பி.,ன்னு, பெரிய போலீஸ் ஆபீசர்ஸ் எல்லாரும் இங்கதான் 'கேம்ப்' அடிச்சிருக்காங்க!''
மித்ராவின் கருத்தை ஆமோதித்த சித்ரா, தனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்தாள்...
''சம்பவம் நடந்ததுமே, அது சாதாரண ஆக்சிடெண்ட் இல்லைங்கிறது உறுதியாயிருச்சு. அது தெரிஞ்சதுமே, போலீஸ் 'அலர்ட்' ஆகி, மீடியாக்காரங்க எல்லாரையும், 100 மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திட்டாங்க...ராத்திரி வரைக்கும் யாரையும் 'அலவ்' பண்ணலை... பி.ஜே.பி.,காரங்க கேட்ட எந்தக் கேள்விக்கும், போலீஸ்காரங்க பதில் சொல்லவேயில்லை!''
''ஆமாக்கா...பி.ஜே.பி., மாவட்டத்தலைவர் உத்தமராமசாமிஅங்க வந்தப்போ, அவரையும் விடலை...இந்து அமைப்புகளோட நிர்வாகிகள், கோவிலைப் பார்க்கவாவது விடுங்கன்னு அடம் பிடிச்சாங்க...அவுங்களுக்கும் ஏமாற்றம்தான்...எல்லாத்துலயும் அரசியல் பண்றாங்கன்னு போலீஸ்காரங்க சலிச்சுக்கிறாங்க!''
''அரசியல்னதும் கவுன்சில் ஞாபகம் வந்திருச்சு மித்து...இந்த மாசம் நைட் ஏழு மணி வரைக்கும் கவுன்சில் மீட்டிங் நடந்துச்சாமே...வழக்கமா ஸ்வீட், காரம், காபி மட்டும் கொடுக்கிறவுங்க, இந்த முறை 'லஞ்ச்' எல்லாம் கொடுத்து, மதியத்துக்கு மேல தெம்பா பேச வச்சிருக்காங்க... ஆனா கால் மணி நேரத்துல, 19 தீர்மானத்தையும் நிறைவேத்திட்டாங்க!''
சித்ரா சொன்னதற்கு பலமாகத் தலையாட்டிய மித்ரா, அதே கவுன்சில் மேட்டரைத் தொடர்ந்தாள்...
''குப்பை கிடங்கு கமிட்டி விவகாரத்துல, கவுன்சிலர்களுக்குள்ள ஈகோ வெடிச்சிருச்சுக்கா...குப்பைக் கிடங்கை ஆய்வு பண்ண வந்த கண்காணிப்பு அலுவலரான ஜட்ஜ் ஜோதிமணி, கலெக்டராபீஸ்ல ஒரு கூட்டம் நடத்துனாரு...அந்த மீட்டிங் முடிவுகளை அறிக்கையா தயாரிச்சு, துணை கமிஷனர் தலைமையில, ஒரு கமிட்டியும் அமைச்சாரு!''
''ஆமா...அதுக்கென்ன இப்போ?''
''அந்த கமிட்டியில குப்பைக் கிடங்கை சுத்தியிருக்கிற, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மூணு பேரை மட்டும் சேர்த்தாங்க. அதுதான் இப்போ கவுன்சிலர்கள் நடுவுல புகைச்சலைக் கிளப்பிருச்சு...பகுதி கழக செயலாளரான காதர், குப்பை கமிட்டிக்கு கவுன்சிலர்களை எப்படி தேர்வு செஞ்சீங்கன்னு பிரச்னையை கிளப்பிட்டாரு!''
''ஆஹா...இது வேறயா?''
''இன்னும் இருக்கு...கிழக்கு மண்டல கவுன்சிலர் பாபு, 'ஊர் முழுக்க குப்பை பிரச்னை இருக்கு... மண்டலத்துக்கு ரெண்டு பேருன்னு நியமிச்சிருக்கலாமே'ன்னு கேட்டாரு.
வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலும் இதையே பேச, கமிஷனருக்கு என்ன பண்ணனும்னே தெரியலை...அது ஜட்ஜ் அமைச்ச கமிட்டி. அதுல மேயரும், நானுமே இல்லைன்னு சொல்லியும் திரும்பத் திரும்ப அதே கேள்விகளைக் கேட்டாங்க!''
''பாவம்...வடிவேலுக்கு பஞ்சாயத்து பண்ணுன சங்கிலி முருகன் கதைதான்!''
சித்ராவின் கமென்ட்டுக்கு சிரித்த மித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...
''கடைசிவரை, கலெக்டர் ஆபீசுல நடந்த மீட்டிங்கிற்கு எப்படி அந்த மூணு கவுன்சிலர்கள் மட்டும் வந்தாங்கன்னு, மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டு தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குனாங்க. ஒரு வழியா, ஆளும்கட்சி கவுன்சில் தலைவர் கார்த்திகேயன், 'வாட்ஸ்ஆப் குரூப் மெசேஜ் பார்த்துப் போனோம்'னு சொன்னதும்தான், கவுன்சிலர்கள் 'கப்சிப்' ஆனாங்க!''
''அது சரி...அந்த குப்பை கமிட்டியில உறுப்பினராகி என்ன பண்ணப் போறாங்களாம்...?''
''பிரச்னை அது கிடையாது...ஈகோ...தெற்கு மண்டலத்துக்குள்ளதான் வெள்ளலுார் கிடங்கு இருக்கு...அந்த மண்டலத் தலைவரையே தன்னோட கட்டுப்பாட்டுல வச்சிருக்கிற, கவுன்சிலருக்குத் தெரியாம நியமனம் நடந்திருக்கு...அந்த கவுன்சிலர்களும் கலெக்டராபீஸ் மீட்டிங்ல, கெத்தா கலந்ததுல இந்த ஈகோ வந்திருக்கு!''
''மித்து! கார்ப்பரேஷன் விவகாரத்துல ரெண்டு மினிஸ்டர்களுக்கு இடையில, முட்டல், மோதல் அதிகமாயிட்டு இருக்காமே...அவுங்க ரெண்டு பேரோட, மேயரையும் சமாளிக்க வேண்டியிருக்கேன்னு ஆபீசர்ஸ் புலம்புறாங்க!''
''அக்கா! சிட்டியில அனுமதியில்லாம கட்டடம் கட்டுறவுங்ககிட்ட டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் சில பேரு, காசு வசூல் பண்றாங்கன்னு பேசுனோமே...இப்போ அந்த பில்டிங்கை எல்லாம் கணக்கெடுத்து, டவுன் பிளானிங் செக்சன்ல இருந்தே நோட்டீஸ் அனுப்புறாங்களாம்...!''
''உண்மைதான்க்கா...ஆனா நோட்டீஸ் போனதும் எல்.பி.எஸ்., மூலமா டீலிங் நடத்துறாங்க... லட்சக்கணக்குல பேரம் பேசி, கரன்சி கை மாறுனதும் இல்லீகல் பில்டிங்கை முறைப்படுத்திக் கொடுக்குறாங்களாம். காசு தரலைன்னா, அப்ரூவல் வாங்குறது குதிரைக்கொம்பா இருக்குன்னு கவுன்சிலர்களே புலம்புறாங்க!''
''கவுன்சிலர்னாலே, அந்த மேயர் கேண்டீடேட் கவுன்சிலர் ஞாபகம்தான் வருது...அந்தப் பொண்ணு, கவுன்சில் மீட்டிங்குக்கும் வர்றதில்லை; வார்டு பக்கமும் எட்டியே பாக்குறதில்லை; பேசாம பதவியை ராஜினாமா பண்ணிட்டுப் போனா, களத்துல வேலை பாக்குற யாராவது ஒருத்தருக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கும்ல... இதை ஆளும்கட்சி கவுன்சிலர்களே பேச ஆரம்பிச்சிட்டாங்க!''
''அவுங்களுக்கு இன்னமும் மேயராகலாம்கிற கனவு இருக்கு போலிருக்கு...!''
மித்ரா சொல்லி முடிக்கும் முன்னே குறுக்கிட்டுப் பேசினாள் சித்ரா...
''அந்தப் பொண்ணுக்கு மட்டுமில்லை...மண்டலத் தலைவர்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்காம்....!!''
''அக்கா! ஒரு பெண் மண்டலத் தலைவர் பத்தி இன்னொரு தகவல்...ரத்தினபுரி கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் பக்கத்துல இருக்குற, அவுங்களோட பானிப்பூரி கடைக்கு அந்த ஸ்கூல்ல இருந்துதான் கரென்ட், தண்ணி எல்லாம் எடுக்குறாங்களாம்!''
''அது பழைய மேட்டர் மித்து...கார்ப்பரேஷன் ஸ்கூல்களுக்குப் பொறுப்பா வந்திருக்குற புது லேடி ஆபீசர், பொறுப்பேத்த ரெண்டே நாள்ல மெடிக்கல் லீவ் போட்டுட்டு போயிட்டாங்களாம்...அவுங்க வந்து சார்ஜ் எடுத்தவுடனே, பெரிய ஆபீசர்ட்ட சரியான திட்டு வாங்குனாங்களாம்!''
''நான் இன்னொரு மேட்டர் கேள்விப்பட்டேன்க்கா...அந்த செக்சன்ல கங்காணி பொறுப்புல இருக்குற லேடி, டெண்டர், டிரான்ஸ்பர் எல்லாத்துலயும் புகுந்து விளையாடுறாங்களாம்.
அவுங்களைப் பத்தி, பல ஸ்கூல்களோட எச்.எம்.,களும் கம்பிளைன்ட் பண்ணியும் அவுங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம். ஏதாவது விசாரணை அப்படி, இப்படின்னு கூப்பிட்டா குளத்துல குதிச்சு, 'சூசைடு' பண்ணிருவேன்னு மெரட்டுறாங்களாம்!''
''புது ஆபீசர் இதுக்குப் பயந்தே, மெடிக்கல் லீவு போட்டுட்டாங்களோ என்னவோ...!''
''இருக்கலாம்...இங்க இப்பிடின்னா, பள்ளிக் கல்வித்துறை சார்புல, பிரைவேட் ஸ்கூல்களுக்காக ஒரு தனி ஆபீஸ் தொடங்கியிருக்காங்க. நாலு கல்வி மாவட்ட ஆபீசையும் ஒண்ணாக்கிட்டாங்க.
அந்த நாலு ஆபீஸ்ல இருந்தும், பிரைவேட் ஸ்கூல்களோட அப்ரூவல் அப்ளிகேஷன், ரினிவல் பைல்கள் எல்லாம் வரணும். ஆனா எதுவுமே வரலையாம். எல்லாமே அந்தந்த ஆபீஸ்ல தேங்கிக் கிடக்குதாம்!''
''புது ஆபீஸ்ன்னா அதுக்கு ஒரு ஆபீசர் போட்ருப்பாங்கள்ல?''
''ஆமா...போட்ருக்காங்க. ஸ்கூல் எச்.எம்.,ஆ இருந்த ஒருத்தரைப் போட்ருக்காங்க. புரமோஷன்ல வந்த அவருக்கு, ஒரு ரூல்சும் தெரியலையாம்...எந்த பயிற்சியும் கொடுக்காம, அவரைக் கொண்டு வந்து உட்கார வச்சுட்டாங்க. பைல்களும் இங்க வரலை...இப்பிடித்தான் 2008ல பிரைவேட் ஸ்கூல்களோட பைல்கள் எல்லாம் தொலைஞ்சு போச்சு. மறுபடியும் அப்பிடி நடந்துருமோன்னு அவுங்க பயப்படுறாங்க!''
மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தி.மு.க., போஸ்டரைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...
''மித்து! கொங்கு மண்டல தி.மு.க.,வுக்குள்ள சத்தமில்லாம குத்து வெட்டு நடந்துட்டு இருக்கு...திருப்பூர் வடக்கு மாவட்டத்துல இருந்த அன்னுார் ஒன்றியத்தை, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோவை வடக்கு மாவட்டத்துல சேர்த்து தலைமையில அறிவிச்சாங்க. இதனால, அந்த ஒன்றியத்துல இருக்குற ஆளும்கட்சிக்காரங்க சந்தோஷமா இருந்தாங்க!''
''ஏன்...இப்ப என்ன ஆச்சு?''
''நாலு நாளைக்கு முன்னால, அன்னுார் நிர்வாகிகள் தீபாவளிக்காக பொறுப்பு அமைச்சரைப் பார்க்கப் போனப்போ, 'நீங்க திருப்பூர் மாவட்டச் செயலாளரை பாருங்க'ன்னு சொல்லிருக்காரு. அன்னுார் தி.மு.க.,காரங்க குழம்பிப் போய்க் கிடக்காங்க....நீலகிரி எம்.பி.,ராசா, அன்னுார் ஒன்றியம் கோவையில இருக்கணும்னு நினைக்கிறாரு. அமைச்சர் திருப்பூருக்குத் தள்ளிவிடப் பாக்குறாராம்!''
''அக்கா! பிளிச்சிக்கு ஜெயிலை மாத்தப் போறதா சொன்னாங்களே...அங்க ஜெயில் வந்தா, அந்த ஊருல பொறுப்புல இருக்குற தலைவரும், அவரோட வீட்டுக்காரரும்தான், முதல்ல அங்க போவாங்க போலிருக்கு!''
சித்ரா சொன்னதைக் கேட்டுச் சிரித்த மித்ரா, ''எனக்கும் தகவல் வந்துச்சுக்கா...பிளிச்சி பஞ்சாயத்துல பிளிச்சீங் பவுடர் வாங்குனதுல துவங்கி, ரோடு போட்டது, தண்ணிக்குழாய் சரி பண்ணதுன்னு எல்லாத்துலயும் ஊழலாம். விசாரிச்ச அதிகாரிகளே மெரண்டு போயிட்டாங்களாம். அதனால முழு விசாரணை நடத்தச் சொல்லி, கலெக்டர் உத்தரவு போட்ருக்காராம்!''
''மித்து! சிட்டிக்குள்ள கவனிச்சியா...பத்திரிகைகள் பேருல மெகா போஸ்டர் ஒட்டி, கவர்மென்ட் சுவர்களை மறுபடியும் நாறடிக்க ஆரம்பிச்சிட்டாங்க...இதுக்காக போலீஸ், கார்ப்பரேஷன், ஹைவேஸ் ஆபீசர்களுக்கு தீபாவளியையொட்டி, பெரிய அளவுல கவனிப்பு நடந்திருக்காம். 'அஞ்சாயிரம் ரூபா பைன் மட்டும்தான் போடுவோம்; அதைக் கட்டிருங்க'ன்னு ஐடியா கொடுத்தே, போஸ்டர் ஒட்ட 'சிக்னல்' கொடுத்திருக்காங்களாம்!''
''அக்கா! பொது இடத்துல போஸ்டர் ஒட்றவுங்களை, பொதுவெளி மற்றும் திறந்தவெளி இடங்களின் அழகைச் சிதைப்பதைத் தடுப்பதற்கான சட்டப்படி, மூணு மாசம் ஜெயில்லயே தள்ளலாம்.
போஸ்டர் ஒட்றவுங்க, அந்த போஸ்டர்ல இருக்கிற கம்பெனிக்காரங்க, ரெண்டு பேர் மேலயும் கேஸ் போட்டு உள்ளே தள்ளுனாத்தான், இந்த போஸ்டர்களைத் தடுக்க முடியும்!''
இதைச் சொல்லிக் கொண்டிருந்த மித்ரா, கருப்பட்டிக் காப்பிக்கடையைப் பார்த்ததும், 'அக்கா! ஒரு கருப்பட்டி காபி குடிச்சிட்டுப் போலாம்' என்று, வண்டியை ஓரம் கட்டினாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!