சித்ரா கொடுத்த ஜாங்கிரியை சுவைத்தாள், மித்ரா; ''இவ்ளோ ருசியா செய்ய எங்கக்கா கத்துக்கிட்டீங்க. நாங்க கடைல வாங்கறதோட சரி... ஸ்வீட், பலகார கடைல்லாம் இந்த தடவை வியாபாரம் நல்லா இருந்திருக்கும் போல'' என்றாள், தித்திப்பான வார்த்தைகளுடன்.
''கொரோனா இல்லாத தீபாவளியாச்சே... கடைக்காரங்களை எல்லாம் மொதல்லயே, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிங்க கூப்பிட்டு வச்சு, தெளிவா விளங்கற மாதிரி பாடம் எடுத்திருக்காங்க... தரம் இல்லேன்னா நடவடிக்கை உறுதின்னு அழுத்தமா சொல்லீட்டாங்களாம்'' என்று சித்ரா கூறியதும், ''நல்ல விஷயம்தாங்கா... தரம் தான் முக்கியம்'' என்று மித்ரா நியாயப்படுத்தினாள்.
வெளியே பட்டாசு சத்தத்துடன், வாண்டூஸின் கலகலப்பான குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. ''ஆனா, பட்டாசு கடையெல்லாம் வியாபாரம் டல்லுன்னு சொல்றாங்கக்கா'' என்று கேள்விப்பட்ட தகவலை கூறினாள், மித்ரா.
''மொதல்ல டல்லா இருந்தாலும், அப்புறம் 'பிக் அப்' ஆயிருச்சுங்கறாங்க... பட்டாசுக் கடைன்னாலே மாமூலும் இரண்டற கலந்தது... 'ஓசி' பட்டாசு அள்ளீட்டு போகாம இருந்தாலே, கடைக்காரங்களுக்கு லாபம்தான். தீபாவளிக்கு ரெண்டு மூணு நாளுக்கு முன்னாடி இருந்தே மழை குறைஞ்சிட்டதால, வியாபாரம் நிச்சயமாக மோசமா இருந்துருக்காதுன்னு நம்பலாம்'' என்று சித்ரா கணித்தாள்.
''குழந்தைங்க பட்டாசு வெடிக்க ஆசைப்படற வரைக்கும், பட்டாசு வியாபாரம் களைகட்டும்தான்...'' என்றாள் மித்ரா.
''குழந்தைங்கன்னு சொன்னதும் ஞாபகம் வருது; நிறைய இடங்கள்ல அனுமதியில்லாம 'ப்ளே ஸ்கூல்' நடத்துறதா சொல்றாங்க. சேவூர்ல, ரோட்டோரமா ஒரு 'ப்ளே ஸ்கூல்' இருக்காம். இதுக்கு அனுமதி வாங்கியிருக்காங்களான்னு கேட்டா… 'அனுமதி தரலை'ன்னு கல்வித்துறை அதிகாரிங்க சொல்றாங்க. அதே மாதிரி, நிறைய இடங்கள்ல, வீடுங்க கூட 'ப்ளே ஸ்கூல்' மாதிரி செயல்பட ஆரம்பிச்சுடுச்சு,'' என்று, சித்ரா ஆதங்கப்பட்டாள்.
''குழந்தைகளுக்கு எதுவும் பிரச்னை ஆகாத வரை பரவாயில்ல; ஏதாச்சும், நடந்ததுக்கு அப்புறம் கவலைப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்ல'' என அங்கலாய்த்தாள் மித்ரா.
'டிமிக்கி' ஊழியர்கள்
''திருப்பூர் மாநகராட்சியில, துாய்மை பணியாளருங்க சில பேரு, சரியா வேலைக்கு வர்றது இல்லைங்கற புகார் இருக்கு. 'பயோ மெட்ரிக்'ல, வருகையை பதிவு பண்ணிட்டு, வீட்டுக்கு போயிடறாங்களாம். அவங்க மேல நடவடிக்கை எடுக்க விடாம, அதிகாரிகள, ஆளுங்கட்சிக்காரங்க தடுக்கிறாங்களாம். இதனால, ஒழுங்கா வேலைக்கு வர்றவங்களுக்கும் வருத்தமாம். இப்படி, வேல செய்யாம 'டிமிக்கி' கொடுக்கிறவங்கள, சில சமூக ஆர்வலருங்க, ஆதாரபூர்வமா சொல்லியும் நடவடிக்கை எதுவும் எடுக்கலையாம்'' என்று கவலைப்பட்டாள் சித்ரா.
''எல்லா துறைலயும் ஒண்ணு, ரெண்டு பேரு 'ஓ.பி' அடிக்கத்தான் செய்றாங்க... இருந்தாலும் ஒட்டுமொத்தமா துாய்மைப்பணியாளர் இல்லேன்னா, ஒரே நாள்ல கார்ப்பரேஷனே நாறிடும். ஆயுத பூஜையப்ப, இரவோடு, இரவா குப்பைகளை அள்ளுனாங்க... தீபாவளிக்கும் இதேபோல வேலை பார்க்கிறாங்க... துாய்மைப் பணியாளருங்களுக்கு பல இடங்கள்ல, அந்தந்த வார்டு கவுன்சிலருங்க, சமூக அமைப்புகள்னு தீபாவளி பரிசு வழங்கி கவுரவிச்சிருக்காங்க... நம்ம தெருக்களை சுத்தமா வச்சிருக்கிற அவங்கள, அவங்க மனம் குளிர்ற அளவுக்கு கவுரவிக்கறது நல்ல விஷயம்தானே'' என்று, சித்ரா புகழ்ந்தாள்.
''கொரோனா வந்தப்ப தான், பொதுமக்கள் பலருக்கும் துாய்மைப்பணியாளரோட அருமை, பெருமையெல்லாம் தெரிஞ்சுது... இருப்பினும் பொதுமக்கள் சிலர், கண்ணியம் இல்லாம, நடந்துக்கிறாங்கன்னு துாய்மைப்பணியாளர் புலம்பறாங்க...'' என்று, மித்ரா யதார்த்தத்தைச் சொன்னாள்.
''வார்டுல வேலை நடக்கலையேன்னு புலம்பறதப் பொறுத்தவரைக்கும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கும் வித்தியாசமே இருக்கறதில்ல. மண்டலக்குழு கூட்டத்தில, அ.தி.மு.க., குழு தலைவர் அன்பகம் திருப்பதி, ரோடு பணி குறித்து குறை கூறிப் பேசியிருக்காரு. துணை மேயரா இருக்கிற இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த பாலசுப்ரமணியம், கூட்டம் முடிஞ்சதும், ரோடு வேலைகளை ஆய்வு பண்றதுக்காக தன்னோட கார்லயே, அன்பகம் திருப்பதியை அழைச்சிட்டுப் போயிருக்காரு'' என்று சித்ரா, நடந்த விஷயத்தைப் பகிர்ந்தாள்.
''கட்சி வேறுபாடு பார்க்காம கவுன்சிலருங்க இருக்கிறது நல்லதுதான். ஆனா, 'எல்லா' விஷயத்துலயும் இப்படி இருந்துறக் கூடாது'' என்று நமுட்டுச்சிரிப்புடன் கூறினாள், மித்ரா.
''மாநில கல்வி கொள்கை தொடர்பா பல்லடத்துல, கல்வித்துறை அதிகாரிங்க 'மீட்டிங்' நடத்தினாங்க... ஆனா பலருக்கும் விஷயமே தெரியலியாம். கருத்து சொல்ல நினைச்ச பல பேரு ஏமாந்துட்டாங்க. இதை பத்தி 'ஆனந்தி' அக்காகிட்ட கேட்டா விஷயம் தெரியும்,'' என்றாள் சித்ரா.
''அந்த ஊர்ல இருக்கிற தாலுகா ஆபீஸ்ல, கப்பம் கட்டினாதான் பழைய ரெக்கார்டுகளை தருவேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்கிற ஒருத்தர பத்தி, போன வாரம் பேசினோம்ல. இத தெரிஞ்சு, திடீர்ன்னு தாலுகா ஆபீசுக்கு 'விசிட்' போன கலெக்டரு, 'என்னென்ன ரெக்கார்டு கேட்டு, யாரு, யாரு அப்ளை பண்ணாங்க; எத்தனை பேருக்கு கொடுத்து இருக்கீங்க'ன்னு விசாரிச்சிருக்காராம். இதனால, 'கல்லா' கட்டுறவரு, பீதியில உறைஞ்சு போயிட்டாராம்'' என்று தகவலைப் புட்டுப்புட்டு வைத்த மித்ரா, கலெக்டரை பாராட்டினாள்.
''இந்த மாதிரி 'சுருக்'னு கேட்டுட்டாலே, கல்லா கட்டுறவுங்க, இனி தில்லா இருக்க முடியாது'' என்றாள் சித்ரா. சித்ராவின் மொபைல் போன் ஒலிக்க, ''யாரு, முருகேசு அண்ணாவா? நல்லா இருக்கீங்களா?'' என, நலம் விசாரித்து இணைப்பை துண்டித்தாள்.
கற்பதா? திணிப்பதா?
''ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கற பேர்ல, வாலிபர் சங்கத்தை சேர்ந்தவங்க, அவிநாசி அரசு மேல்நிலை பள்ளி முன்னாடி நின்னு, 6, 7வது படிக்கிற மாணவர்கள் கையில எல்லாம் கொடியை கொடுத்து, போராட்டம் பண்ண சொல்லியிருக்காங்க. இதை பார்த்த பள்ளி தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியரும், 'ஸ்கூல் கேம்பஸ்ல ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை'ன்னு சொல்ல, ரெண்டு தரப்புக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஆயிடுச்சு. அந்த ஆசிரியர் 'நாலு மொழி கத்துக்கிட்டா' என்ன தப்புன்னு கேட்க, 'கத்துக்கிறது வேற, திணிக்கிறது வேற'ன்னு பையங்க சொல்ல, வாக்குவாதம் பெரிசாகிடுச்சு.
''இத கவனிச்ச ஒருத்தரு துணிக்கடைங்க, ஓட்டல், மால், பனியன் கம்பெனின்னு எல்லா இடத்துலேயும், நிறைய வட மாநிலத்தை சேர்ந்தவுங்க வேலைக்கு வந்துட்டாங்க. கடைக்கு வர கஸ்டமர், கடைல வேல செய்ற நம்மவங்க கிட்ட பேசி, பேசி, அவங்க தமிழை கத்துக்கிறாங்க; அவங்ககிட்ட இருந்து, நம்மவங்க ஹிந்தி கத்துக்கறாங்க. இதுல, எது திணிப்பு; எது, கத்துக்கறதுன்னு சொல்ல முடியுமான்னு கேட்க, போராட்டம் பண்ணவங்க குழம்பிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா, உண்மையை உரக்க சொன்னாள்.
அட்ராசிட்டி தாங்கல...
''காலேஜ் ரோட்ல ஆளுங்கட்சிக்காரரின் 'அட்ராசிட்டி' தாங்கலையாம்'' என தொடர்ந்தாள் சித்ரா.''அங்க இருக்கிற கட்சியோட வார்டு செயலாளரு, கட்சிக்காரங்ககிட்ட கை நீட்றது; கட்டப்பஞ்சாயத்து பண்றது; 'பார்'ல போய் வசூல் பண்றதுன்னு, நிறைய 'அட்ராசிட்டி' பண்றாராம். இதைப் போய், தொகுதி வி.ஐ.பி., கிட்ட சொன்னா, 'என் சொந்தக்காரர் மேலயே புகார் தர்றீங்களா'ன்னு கேட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கறாராம்,'' என்றாள் சித்ரா.
''ராமா… ராமா' என, சலித்துக் கொண்டாள் மித்ரா. ''கொஞ்ச நாள் முன்னாடி, காங்கயத்துல, ஆளுங்கட்சியோட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளரு நடத்தின நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வந்திருக்காரு. அவருக்கு தடபுடல் வரவேற்பு கொடுக்க, காங்கிரஸ் கட்சிக்காரங்களும் தயாராகிட்டாங்களாம். ஆனா, 'எந்த வரவேற்பும் கொடுக்க வேண்டாம்; நிகழ்ச்சிக்கு கூட யாரும் வரவேண்டாம்'ன்னு சிதம்பரம் தரப்புல இருந்து சொல்லிட்டாங்களாம். ஏன், அப்படி பண்ணாங்கன்னு, கட்சிக்காரங்களுக்கு புரியவே இல்லையாம்,'' என்றாள் சித்ரா.
''சரிக்கா... மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம்லாம் நிறைய இருக்கு. வீட்டுக்கு வாங்கக்கா... குட்டீேஸாட சேர்ந்து விடலாம்'' என்று அழைத்தாள் மித்ரா. ''அணுகுண்டெல்லாம் வச்சிருப்பியோன்னு பாத்தேன்... சூடா இஞ்சி டீ சாப்பிட்டு போ மித்து...'' என்று சித்ரா கூற, ''எனக்கு டீ வேணாங்க்கா... தீபாவளி லேகியம் வச்சிருந்தீங்கன்னா குடுங்க...'' என்று மித்ரா கலகலத்தாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!