Load Image
Advertisement

நடுவிலே வந்தாய் நடுவிலே போனாய் உனக்காக நான் ஏன் பூ எடுக்க வேண்டும்

பெண் தன் வாழ்க்கையில் கணவன் வருவதற்கு முன்பிருந்தே பூவும் பொட்டும் வைத்துக் கொண்டிருந்தவள்தான், நடுவில் வந்த கணவன் நடுவிலேயே இறந்து போனான் என்பதற்காக பூவையும் பொட்டையும் எடுப்பதும் இழப்பதும் பெண்ணின் சுயகவுரத்திற்கு இழுக்கு மட்டுமல்ல பெண்ணை வேட்டையாடும் இந்த சமுதாயத்தில் அது ஆபத்தும் கூட என்று சென்னையில் நடைபெற்ற விதவைகள் மாநாட்டில் விதவை பெண் ஒருவர் ஆவேசமாக பேசினார்.
விடியலை நோக்கி வீறு நடை போடு என்ற தலைப்பில் கைம்பெண்கள் கூட்டமைப்பின் மூன்றாவது மாநில மாநாடு அகில உலக கைம்பெண்கள் நலவாழ்வு மைய இயக்குனர் செல்வி ஒருங்கிணைப்பில் சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் மாநிலம் முழுழுவதிலும் இருந்து ஐநாறுக்கும் அதிகமான விதவைகள் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் மட்டும் 38,56,398 விதவைகள்,2,96,654 கைவிடப்பட்ட பெண்கள்,45,185 தனித்துவாழும் பெண்கள் உள்ளனர் இவர்களின் குரல்களை இந்த மாநாடு எதிரொலிக்கிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக நலத்துறை இருப்பது போல விதவைகளுக்கு என்று தனியாக நலத்துறை வேண்டும் என்று அரசைக்கேட்டுக் கொள்வது உள்ளீட்ட பல கோரிக்கைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

இதல் கலந்து கொண்டு பேசியவர்களில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ராணி என்பவரின் பேச்சு உருக்கமாக இருந்தது, அவர் பேசியதாவது
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் நன்றாக படிப்பேன் இருந்தும் எட்டாவது படிக்கும் போது சித்தப்பன் என்ற பெயரில் வீட்டிற்கு சாப்பிட வந்தவன் சாப்பிட்டுவிட்டு மட்டும் போகாமல்,‛ என்னப்பா பொம்பிளை பிள்ளயை படிக்க வச்சுக்கிட்டு இருக்கிறீக, இதுக்கு மேலே படிக்க போச்சுன்னா யாரையாவது வேறு சாதிப்பயல கல்யாணம் பண்ணிக்கிடும் பார்த்துக்குங்க' என்று விஷத்தை விதைத்துவிட்டு போனான்',அன்றே என் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர் படிக்கணும் என்ற ஆசை கனவு எல்லாம் கலைந்து போனது.அதன் பிறகு சொந்தக்கார பயல் ஒருத்தனுக்கு கட்டி வச்சாங்க, எனக்கு மூணு புள்ளய தந்துட்டு ஒடிப்போயிட்டான் அதுவும் மூணாவது புள்ள பிறந்து பதினைந்து நாள்தான் ஆகியிருந்தது
மூணு புள்ளைகளோட என்னைய பார்த்துக்கறதும் பராமரிக்கிறதும் உறவுகளுக்கு பெரிய பாராமாப்போச்சு
இதுகளுக்கு வடிச்சுக்கொட்ட எங்கே போறது என்பது போன்ற வார்த்தைகள் சாதத்தைவிட சூடாக இருந்தது, காதிற்குள் இறங்கிய வார்த்தைகளால் வாய்க்குள் சோறு இறங்கவில்லை,துாக்கம் வரவில்லை
சுயமாக வாழ் யாருக்கும் பாராமாக இருக்காதே என்று மனது சொல்லிக்கொண்டே இருந்தது
ஒரு நாள் வயக்காட்டில் வேலை இருக்கிறது ஐந்து பேர் வேண்டும் உன்னால் முடிஞ்ச நாலு பேரை கூட்டிட்டு வெள்ளன காட்டுக்கு வந்துடு என்று தெரிந்தவர் ஒருவர் சொல்லிவிட்டுப் போனார்.
மறுநாள் காலை நான் மட்டும் விடிகாலை போய் தோட்டத்தில் நின்றேன்
எங்கே மத்த நான்கு பேர் நீ வேற இப்பதான் புள்ள பெத்த பச்ச உடம்புக்காரி என்றார்
ஐயா தப்பா எடுத்துக்லைன்னா அந்த நான்கு பேர் வேலையையும் சேர்த்து நான் ஒருத்தியே செய்யுறேன்யா எனக்கு தேவை கூலிதான்யா உழைச்சுப் பிழைக்கணும் என்ற வைராக்கியத்தால் வைரம் உடம்பு வைரம் பாய்ஞ்சு கிடக்குய்யா என்றேன்
சரி என்று வயக்காட்டு வேலையை கொடுத்தார் நாமா ஜெயிக்கணும் புள்ளைகள நல்லா வளர்க்கணும் என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டே ஐந்து பேரின் வேலையையும் நான் ஒருத்தியே செய்தேன்
அன்றைக்கு கிடைச்ச கூலியில் சாப்பாடு செஞ்சு சாப்பிட்டேன் அமுதாம இருந்துச்சு அதுக்கப்புறம் மண்ணு என்னை விடலை நானும் மண்ணை விடலை
ரெண்டு பொம்புள பிள்ளைக ஒரு பையன்,பொம்புள பிள்ளைகளா நல்லா படிக்க வச்சேன் நகைநட்டு போட்டு கல்யாணம் பண்ணேன் நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தேன்
பையனை கல்யாணம் பண்ணும் போது, கல்யாண வீட்டிற்கு வந்த ஒடிப்போன புருஷன், என் மகனுக்கு என்னைய கேட்காம எப்படி கல்யாணம் பண்ணலாம் என்று தகராறு செய்தான்.
மூணு புள்ளைகள வச்சுட்டு இவ என்ன பண்ணுவா என்று யோசிக்காம ஒடிப்போனவன் நீ ,அதுக்கப்புறம் நாங்க செத்தமா இருக்கமான்னு கூட எட்டிப்பார்க்காதவன் நீ, இன்னைக்கு வரைக்கும் பெத்த புள்ளைகளுக்கு ஒத்த ரூபாய்க்கு ஒரு பிஸ்கட்டோ பத்து ரூபாய்க்கு துணியோ எடுத்துப் போடாதவன் நீ, இப்ப வந்து புருஷன் முறை கொண்டாடுறீயோ ஓடிப்போயிடு என்று நான் எடுத்த கோபாவதாரத்தை பார்த்து திரும்ப ஒடிப்போனான் திரும்பிப் பார்க்காமல்...
கொஞ்ச நாள் கழித்து என் கொழுந்தன் வந்தான், அண்ணி அண்ணன் இறந்துட்டாரு ஆயிரம் இருந்தாலும் இன்னைக்கும் நீங்கதான் அவரோட மனைவி வந்து செய்யற முறையை மட்டும் செஞ்சுட்டு போயிடுங்கன்னு கெஞ்சாத குறையா கேட்டான் சரி போய்த்தொலையுதுன்னு போய் புருஷனை அனுப்பிவச்சேன்
அப்புறம் சடங்கு சம்பிரதாயம்னு சொல்லி நான் பூ விழக்கணும் பொட்டு அழிக்கணும் வளையல் உடைக்கணும்னு சொன்னாங்க, வந்ததே கோபம் எனக்கு இதெல்லாம் எங்க அம்மா எனக்கு அறிமுகம் செய்து அழகு பார்த்தது புருஷங்கிறவன் நடுவில வந்தான் நடுவில போய்ட்டான் நான் ஏன் பூ ,பொட்டு இழக்கணும் அப்படியேதான் இருப்பேன்னு ஆங்காரமா சொன்னேன் அப்படித்தான் இருந்தேன்.
இப்ப வயசாயிட்டதால அதுல நாட்டம் குறைஞ்சு போய் வச்சுக்கிறதுல்லயே தவிர இந்த சமூகத்திற்கு பயந்தல்ல
பொதுவாக விதவைப் பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் வைராக்கியமும் இருந்தால் போதும் போராடி வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.
இன்னும் நாம் போகவேண்டிய துாரமும் ஜெயிக்க வேண்டிய விஷயமும் நிறயை இருக்கிறது
ஜெயிச்சுரலாம் வாங்க என்று சொல்லி முடித்த போது அரங்கில் எழுந்த கைதட்டல் அடங்க வெகுநேரமானது...
-எல்.முருகராஜ்வாசகர் கருத்து (13)

 • Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா

  அருமை. புதுமைப்பெண்களின் பேச்சு கம்பீரமாக ஆண்மையோடு இருக்கிறது. ஆனால் இதேயே தான் சில ஆண்களும் வேறு மாதிரி நினைக்கிறார்கள். நடுவே வந்தவ நீ-பல பெண்களை பார்த்தவனுங்க எப்படி ஒரே பெண்ணோடு வாழ்வார்கள். அவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். நடுவே வந்தவ எப்படி நம்மை கட்டுப்படுத்தப்பார்ப்பாள். இப்படி எல்லோரும் கிளம்பிவிட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும். ஆடையும் அலங்காரமும் நம்மை பாதுக்காக்க கடையை விரிக்க அல்ல. நாம் எப்போது விளம்பரப்பொருளாக மாறுகிறோமோ அப்பவே நாம் ஒருவகையில் வியாபாரி ஆகிறோம். பழைய சாஸ்திரங்கள் ஒரே இரவில் ஒரே நொடியில் தயாரிக்கப்பட்டவை அல்ல. இப்போதெல்லாம் சில ஈன ஜென்மங்கள் திருமணமாகியும் மற்ற குடும்பத்து பெண்களை வேட்டையாட அலைகிறார்கள். கணவனை இழந்தவர்கள் அவர்களோடு போட்டி போடப்போகிறார்களோ. அதற்கு பதில் கணவனை இழந்தவர்கள் இன்னொரு "நல்ல, பெருந்தன்மை கொண்ட" கணவனோடு வாழ்க்கையை தொடர்ந்தாலென்ன. அந்த இடைவெளியில் இடையில் போன அலங்காரம் விடுமுறையில் இருந்தாலென்ன?

 • Dharmavaan - Chennai,இந்தியா

  திருமணம் ஆனா பிறகும் தாம்பத்தியத்தின் பிறகும் பெண்களின் பழைய நிலைமை மாறுகிறது.முன்பும் பின்பும் ஒரே நிலை என்பது தவறு.

 • Tamilan - NA,இந்தியா

  நடுவில் வந்து நடுவில் போகவில்லை . கையில் ஒன்றிரண்டை மட்டுமல்ல பலவற்றை விட்டு சென்றுள்ளார், கொடுத்து சென்றுள்ளார்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  விதவைகள் என்ற சொல்லுக்குகூட பொட்டு இல்லை என்று சொன்னதற்கு ஒரு அறிஞர் அது வடசொல் தமிழில் கைம்பெண் என்ற சொல்லில் இரண்டு போட்டு உள்ளதுன்னு சொன்னார் .கணவன் இறந்துபோனால் அவன் கட்டிய தாலி மற்றும் மெட்டி எடுத்தால் போதும் மேலும் இது கணினியுகம் பெண்டிர் ஆண்களுக்கு நிகராக பணிபுரிகின்றனர் அனைத்து துறைகளிலும் எனவே பழைய சடங்கு மற்றும் மூடப்பழக்கவழக்கங்களை தூக்கியெறியவேண்டும்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  விதவை பெண்களை விட கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement