Load Image
Advertisement

வௌியூர் பஸ்களில் தீபாவளி கட்டண வேட்டை மேயரும், மண்டல சேர்மனும் 'காச்மூச்'

கிராஸ்கட் ரோட்டில், சித்ராவும் மித்ராவும் ஜாலியாகப் பேசிக் கொண்டே, தீபாவளி பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தனர். நடப்பதற்கே வழியின்றி கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்த சித்ரா, மகிழ்ச்சியோடு பேசினாள்...

''ரெண்டு வருஷம் கழிச்சு, இப்பதான் மக்கள் முகத்துலயும், வியாபாரிங்க முகத்துலயும் தீபாவளி களை தெரியுது மித்து...பார்க்கவே சந்தோஷமா இருக்கு...ஆனா எல்லாத்துலயும் கொள்ளை லாபம் வச்சு விக்கிறாங்க!''

சித்ராவின் முகத்தைப் பார்த்துத் தலையாட்டிய மித்ரா, வருத்தத்தோடு தொடர்ந்தாள்...

''ஆமாக்கா! அதுலயும் இந்த ஆம்னி பஸ்காரங்க பண்ற அலும்புக்கு அளவேயில்லை. மத்த நாள்ல ஐநுாறு ரூபாய்க்குப் போற திருச்சிக்கு, இப்போ 'ஆன்லைன்'லயே ஆயிரம் ரூபாய்க்கு மேல கட்டணம் போட்ருக்காங்க. தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முந்தி, எப்பிடியும் ரெண்டாயிரம், மூவாயிரம்னு ஏத்திருவாங்க!''

''தென்மாவட்டத்துக்காரங்க பாடுதான் ரொம்பப் பாவம் மித்து...மதுரை, திருநெல்வேலிக்கு ரெண்டு ஸ்பெஷல் டிரெயின் விட்டா பெரிய உதவியா இருக்கும். ஆனா ரயில்வேகாரங்கதான், ஏற்கனவே ஓடிட்டு இருந்த டிரெயின்களையே விட மாட்டேங்கிறாங்க!''

ரோட்டில் டிராபிக்கில் வாகனங்கள் சிக்கித் திணறுவதைப் பார்த்த மித்ரா, அடுத்த டாபிக்கிற்கு மாறினாள்...

''அக்கா! சிட்டி டிராபிக் டி.சி.,யை 'எல் அண்ட் ஓ'வுக்கு மாத்தீட்டாங்க. புதுசா அசோக் குமார்ன்னு ஒருத்தரைப் போட்ருக்காங்க. சிட்டிக்குள்ள 'டிரையல்' பாக்குறேன்னு சொல்லி, எல்லா ரோடுகளையும் மூடி, டிராபிக் ஜாம் பண்ணுன ஆபீசரை மாத்துனதுல, டிராபிக் போலீஸ்காரங்க சந்தோஷப்படுறாங்க. புதுசா வந்திருக்கிறவரு, என்ன பண்ணப்போறார்ன்னு பார்க்கலாம்!''

''இப்போ இருக்கிற நிலைமையில, சிட்டிக்குள்ள போதையைத் தடுக்குறதுதான், போலீசுக்கு பெரிய 'டாஸ்க்'கா இருக்கு. குட்கா, பான் மசாலா புழக்கம் கொஞ்சமும் குறைஞ்ச மாதிரித் தெரியலை. விக்கிறவுங்களைப் பிடிக்கிறாங்க. கையோட ஜாமின்ல விட்டுர்றாங்க. அவுங்க போய் திரும்ப அதே வேலையைத்தான் பண்றாங்க...என்ன பிரயோஜனம்?''

சீரியஸ் ஆகக்கேட்ட சித்ராவுக்கு, பதில் சொன்னாள் மித்ரா...

''நீங்க சொல்றது உண்மைதான்க்கா...இந்த விஷயத்துல இப்போ போலீசே பொறுமையிழந்து, குட்கா, பான் மசாலா விக்கிறவுங்க மேல, ஐ.பி.சி.,யில கடுமையான பிரிவுகள்ல கேஸ் போட்டு ஜெயில்ல தள்ள ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்கு அப்புறமாவது, இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியுமான்னு தெரியலை!''

''கஞ்சா, போதை மாத்திரையும் தாராளமா புழங்குது. விக்கிற சில பேரைப் பிடிச்சும் போட்ருக்காங்க. மெடிக்கல் ஷாப்காரங்களையே அரெஸ்ட் பண்ணிருக்காங்க...ஆனா...!''

''என்னக்கா...ஆனா...!''

''ஆனா சிட்டிக்குள்ள இன்னமும் போதை மாத்திரைப் புழக்கம் குறையவேயில்லைன்னு போலீசே வருத்தப்படுறாங்க!''

''ரூரல் போலீஸ்ல தீபாவளி வசூல்ல பட்டாசு கிளப்புறாங்க!''

''அதான் ரெண்டு வாரமாவே, தீபாவளி வசூல் எல்லா டிபார்ட்மென்ட்லயும் ஜோரா நடந்துட்டுதானே இருக்கு... நீ என்னமோ அவுங்க மட்டும்தான் வசூல்பண்றது மாதிரி சொல்ற!''

''தீபாவளி வசூல் எல்லா இடத்துலயும் தான் நடக்குதுக்கா...ஆனா ரூரல் ஏரியாவுல வேற மாதிரி வசூல் நடக்குது. பேரூர் ஏரியா போலீஸ்ல, 'டார்கெட்' வச்சு வசூல் நடக்குதாம்!''

மித்ரா சொல்லி முடிக்கும் முன் குறுக்கிட்டு கேள்வி கேட்டாள் சித்ரா...

''இப்ப இருக்கற டி.எஸ்.பி., ஆளுங்கட்சிக்காரங்களோட ரொம்பவே இணக்கமா இருக்காராமே!''

''ஆமாக்கா...தீபாவளியை ஒட்டி, வடவள்ளி, ஆலாந்துறை ஸ்டேஷன் லிமிட்கள்ல இருக்கிற சில தோட்டங்கள்ல சேவல் சண்டை நடத்திட்டு இருக்காங்க. வடவள்ளியில ஆளும்கட்சி கிளைச் செயலாளர் ஒருத்தரே, 'வீரமா' சேவல் சண்டை நடத்தி 'மணி'யை அள்ளிட்டு இருக்காரு. டி.எஸ்.பி.,க்கு இதைப் பத்தி தகவல் தெரிஞ்சு, அங்க போலீசை அனுப்பிருக்காரு. ஆனா ஆளுங்கட்சின்னதும் பேருக்கு கேஸ் போட்ருக்காங்க. அந்த ஆளுங்கட்சி நிர்வாகி மேல கேஸ் போடலை!''

சிறிது இடைவெளி விட்டு மித்ராவே தொடர்ந்தாள்...

''அக்கா! கவர்மென்ட் ஆபீஸ்கள்ல தீபாவளி வசூல் நடத்துறதைப் பத்திப் பேசுறோம்...அதே ஆபீசர்கள்ட்ட, நம்ம ஊர்ல இருக்குற டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் நடத்துற வசூல், அதை விட கூடுதலா இருக்காம்...தொண்டாமுத்துார் ஏரியாவுல இவுங்களுக்குப் பயந்தே பி.டி.ஓ., வி.ஏ.ஓ.,எல்லாம் ஆபீசுக்கே வராம, 'பீல்டு விசிட்'ன்னு எஸ்கேப் ஆயிர்றாங்களாம்!''

''சிட்டியிலயும் இது அதிகமாத்தான் நடக்குது மித்து...கவர்மென்ட் ஆபீஸ்ல மட்டுமில்லாம, அனுமதியில்லாம, விதிகளை மீறி கட்டடம் கட்டுறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு, சில பில்டிங்காரங்ககிட்ட, டுபாக்கூர் பத்திரிக்கைக்காரங்க மிரட்டி பணம் பறிக்கிறதும் நிறையா நடக்குது. இப்பிடி மிரட்டுற ஒருத்தரையாவது பிடிச்சு, உள்ளே போட்டாத்தான் மத்தவுங்க அடங்குவாங்க!''

''அந்த மேட்டரை விடுங்கக்கா...கார்ப்பரேஷன்ல கமிஷன் கேட்டு டார்ச்சர் பண்றாங்க தெரியுமா?''

''முழுசாத் தெரியலை மித்து...ஆனா கமிஷனுக்காக பைல்களையே எடுத்து ஒளிச்சு வச்சுர்றாங்கன்னு ஒரு தகவல் வந்துச்சு!''

''அதேதான்க்கா...டெண்டர் எடுக்குற கான்ட்ராக்ட்காரங்களுக்கு, ஒர்க் ஆர்டர் கொடுக்கற பைல்களை பதுக்கி வச்சிடுறாங்க. மண்டல ஆபீசுக்கு, நிலைக்குழு தலைவர்கள் ஆபீசுக்கு, மெயின் ஆபீஸ்ல இருக்குற முக்கிய 'தலை'களுக்குன்னு தனித்தனியா கமிஷன் கேக்குறாங்களாம். அத்தனை பேருக்கும் கமிஷன் கொடுத்து, வேலையை செஞ்சு, எப்போ, 'பில்' வாங்குறதுன்னு, கான்ட்ராக்டர்கள் புலம்புறாங்க!''

''மித்து...மேயருக்கும், மத்திய மண்டல தலைவருக்கும் போன்ல பயங்கர சண்டை நடந்தது தெரியுமா?''

''இல்லையேக்கா...என்ன பிரச்னையாம்?''

''கார்ப்பரேஷன் ஸ்கூலுக்குப் பக்கத்துல, பயன்பாடில்லாம இருந்த ஒரு ரூமை, ஆளுங்கட்சி லேடி கவுன்சிலர் ஒருத்தருக்கு, ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. இதை நிலைக்குழு தலைவர்கள்ல ஒருத்தரு, மேயர்ட்ட வத்தி வச்சிட்டாங்க. 'உடனே, மத்திய மண்டல தலைவரை, போன்ல கூப்பிட்டு மேயர் தாறுமாறா பேசிருக்காங்க. ரெண்டு பேருக்கும் பயங்கர 'ஆர்க்யூமென்ட்' நடந்திருக்கு!''

''அடடா... அப்புறம்!''

''இதைப் பத்தி கம்பிளைன்ட் பண்றதுக்காக, மேயர் 'பிளைட்'ல சென்னை போயிட்டு வந்திருக்காங்க...இந்த லேடீஸ்களுக்கு நடக்குற சண்டையில, தலைமைக்குதான் தேவையில்லாத மண்டைக்குடைச்சல்!''

சித்ரா சொல்லி முடித்ததும் மித்ராவும், தனக்குத் தெரிந்த மாநகராட்சி தகவலைப் பகிர்ந்தாள்...

''அக்கா! கோவை மாநகராட்சி கல்வி பிரிவுல இருந்து கல்விக்குழுவுக்கு ஒரு பைலும் போறதில்லையாம். எல்லாமே நேரடியா பெரிய ஆபீசர்களுக்கு தான் வரணும்னு உத்தரவாம். அதைவிட, கல்விக்குழுவுல இருந்து யாராவது பார்க்க வந்தா, கண்காணிக்கற லேடியும், அசிஸ்டென்ட்டும் மொபைல்போனை 'ஆன்' பண்ணி, ரெண்டு பெரிய ஆபீசர்களையும் 'லைவ்' ஆடியோபோடுறாங்களாம்!''

''சிறப்பான பணி...!''

''சில நேரத்துல வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி, அதையே அனுப்பி விடுறாங்களாம். மொத்தத்துல நல்லா 'ஸ்பை' வேலை பாக்குறாங்களாம். இதே கதிதான் மத்த நிலைக்குழுக்களுக்கும்...இந்த பீரியட்ல ஏண்டா ஜெயிச்சோம்கிற நிலைமைக்கு வந்திருச்சு, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் நிலைமை!''

''மித்து! கார்ப்பரேஷன் தற்காலிக துாய்மைப் பணியாளர்களுக்கு வெறும் 3,750 ரூபா போனஸ் போட்ருக்காங்க. அதனால, போனஸ் சட்டத்தின்படி போனஸ் தரச்சொல்லி லேபர் கோர்ட்ல கேஸ் போடப் போறாங்க!''

''அதை விட ஒரு பரபரப்பான மேட்டர்க்கா...சம்பள உயர்வுக்காக இவுங்களை வச்சு ஸ்டிரைக் நடத்துன கூட்டமைப்போட ஒருங்கிணைப்பாளர் ஒருத்தரு, 25 லட்ச ரூபாயை வாங்கிட்டு, போராட்டத்தைக் கைவிட்டுட்டதா, ஆளே இல்லாத யூனியன்காரங்க கிளப்பி விட்ருக்காங்க. அவரு, 25 லட்ச ரூபாய்க்கு எத்தனை சைபர்ன்னே எனக்குத் தெரியாதுன்னு புலம்புறாரு!''

ரோட்டோரத்தில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க.,போஸ்டரைப் பார்த்து விட்டு சித்ரா, ''அவிநாசி ரோட்டுல கட்டுற புது மேம்பாலத்துல, தி.மு.க.,காரங்க போஸ்டர் ஒட்டுனதைக் கண்டிச்சு, பி.ஜே.பி.,காரங்க போராட்டம் நடத்துனாங்க. போஸ்டர்களைக் கிழிச்சு தீ வச்சாங்க...ஆனா அவுங்களே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வந்ததுக்கு, அதே துாண்கள்ல பெருசு பெருசா போஸ்டர் ஒட்டிருக்காங்க. இப்பிடியே மாத்தி மாத்தி ஒட்டுனா யாருதான் இதை நிறுத்துறது?''

''பி.ஜே.பி.,ன்னதும் ஞாபகம் வந்துச்சுக்கா...தென்னை வளர்ச்சி வாரியம் சார்புல, அக்ரி யுனிவர்சிட்டியில நடந்த உழவர் சந்திப்பு கூட்டத்துக்கு, அது அரசு விழான்னு தெரிஞ்சும், பி.ஜே.பி.,மாவட்டத்தலைவர் மேடையில இருக்குற ஒரு சேர்ல உட்கார்ந்துட்டு கடைசி வரைக்கும் இறங்கவேயில்லை. அதிகாரிகள் புலம்பித் தள்ளீட்டாங்க,''

''மித்து! கோவை ஆவின்ல பால் பண்ணையில தரம் மாறுன விவகாரத்துல, மூணு ஊழியர்களை 'சஸ்பெண்ட்' பண்ணிருக்காங்க. ஆனா பிரச்னைக்குக் காரணமான பெரிய ஆபீசர்களை விட்டுட்டாங்கன்னு, கீழ்மட்ட ஊழியர்கள் கொந்தளிக்கிறாங்க!''

''உண்மைதான்க்கா...ஆவின் குடோன்ல கெட்டுப்போன மூணு டன் இனிப்பு வகைகளை, ரெண்டு வருஷமா ஸ்டாக்குன்னு கணக்குக் காமிச்சிருக்காங்க. ஆபீஸ்ல விஜிலென்ஸ் ரெய்டு நடந்துச்சு. ஒரு ஆபீசர் மேல பாலியல் புகாரே சொன்னாங்க. அவுங்க மேல எல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்காம ஊழியர்களை பலிகடா ஆக்கிருக்காங்க. சஸ்பெண்ட் ஆன மூணு பேர்ல ஒருத்தரு, மாற்றுத்திறனாளி!''

பேசிக் கொண்டிருக்கும்போதே, ஓட்டலைப் பார்த்த மித்ரா, 'அக்கா! பசிக்குது...ஏதாவது சாப்பிட்டுட்டு, மறுபடியும் 'ஷாப்பிங்' பண்ணலாம்!'' என்று சொல்ல, இருவரும் ஓட்டலுக்குள் நுழைந்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement