வீட்டுக்குள் நுழைந்தவுடன், ''புதுசா சோபா பளபளக்குது'' என்று மித்ரா துவங்கினாள்; ''ஆமா... தீபாவளிக்கு ஆபர்ல வாங்குனது'' என்று சித்ரா புன்னகைத்தாள்.
''தீபாவளிக்கு வசூல் வேட்டைய ஆரம்பிச்சிட்டாங்க... ஊத்துக்குளி தாலுகா ஆபீஸ்ல விஜிலென்ஸ் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத, 80 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செஞ்சாங்க... சில ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,, அவங்க உதவியாளருங்ககிட்ட இருந்து தான், நிறைய பணத்தை பறிமுதல் பண்ணியிருக்காங்க... பல கவர்மென்ட் ஆபீஸ்கள்ல ரெய்டு நடக்கப்போகுது'' என்று கணித்தாள் மித்ரா.
''சிட்டில போலீஸ்காரங்க பலரும், வசூல் வேட்டைல இறங்கிட்டாங்களாம்; சில ஆபீசருங்க, தங்களோட எல்லைக்குள்ள சட்டவிரோதமா கிளப், பார் நடத்த, பச்சைக்கொடி காட்டுறாங்களாம். பெரிய போலீஸ் ஆபீசர் நெனைச்சா எல்லாத்தையுமே கட்டுப்படுத்தலாம்.
இதே மாதிரி பல கவர்மென்ட் டிபார்ட்மென்ட்லயும் இப்பவே தீபாவளி வசூல் வேட்டைக்கு தயாராகிட்டாங்களாம். தலைமை அதிகாரிங்க நெனச்சா கடிவாளம் போடலாம். ஆனா, அவங்க கண்டுக்கறதே இல்ல'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''பெரிய ஆபீசருங்க 'புஸ்வாணமா' இருந்தா, தீபாவளி வசூல் 'பட்டாசா' பறக்கும்தான். பெருமாநல்லுார் ஸ்டேஷன்ல மூணு போலீஸ்காரங்கள எஸ்.பி., 'சஸ்பெண்ட்' செஞ்சிருக்காரு. ரோந்து போறப்போ, ஜோடியா யாராச்சும் டூவீலர்ல போனா, அவங்கள நிறுத்தி விசாரிப்பாங்களாம். அவங்க காதல் ஜோடியாவோ, வீட்டுக்கு தெரியாம சுத்தறாங்கன்னு தெரிஞ்சா, மிரட்டி பணம் பறிச்சுடுவாங்களாம். இந்த மாதிரி பிளாக்மெயில் பண்ணி பணம் சம்பாதிக்கிறது எவ்ளோ கேவலம்...'' என்று மித்ரா ஆவேசப்பட்டாள்.
'கூகுள் பே' மூலம் வசூல்
''மித்து, இன்னொரு டிராபிக் போலீசையும் சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க... இவரோடது தனிக்கதை. அவருக்கு அவிநாசியில டூட்டி போட்டிருக்காங்க. அவரும் நைட் ரோந்து போனப்போ, பனியன் கம்பெனில, வேல முடிஞ்சு திரும்பி வந்துட்டு இருந்த ஒரு வாலிபரையும், ஒரு பெண்ணையும் மடக்கி, பணம் கேட்டிருக்காங்க. வாலிபரோ பணம் இல்லைன்னு சொல்லவும், 'கூகுள் பே' பண்ண சொல்லியிருக்காரு அந்த போலீஸ்காரரு.
'கூகுள் பே' வேலை செய்யாததால, பக்கத்துல இருக்க பேக்கரிக்கு கூட்டிட்டு போய் 'கூகுள் பே' செய்ய வச்சிருக்காரு. இவரையும் சஸ்பெண்ட் செஞ்சாச்சு... இதுல என்ன ஒரு கொடுமைன்னா… இவரு 4, 5 வருஷத்துக்கு முன்னாடி பல்லடம் ஸ்டேஷன்ல வேல பார்த்தப்போ, பிடிபட்ட சூதாட்ட கும்பல்கிட்ட இருந்து பணத்தை சுருட்டுன விவகாரத்துல, அவரு மேல எப்.ஐ.ஆர்., பதிவு பண்ணி, ஜெயில்ல கூட இருந்திருக்காராம். அந்த கேஸை உடைச்சு, திரும்பவும் வேலைக்கே சேர்ந்திருக்காரு,'' என்று, வில்லங்கத்தை விளக்கினாள், சித்ரா.
''ம்ம்ம்… அந்த 'நடராஜர்' தான், அவரை திருத்தணும்,'' என்று மித்ரா வேண்டினாள். ''ஏன்க்கா… போலீஸ்காரருக்கு துணையா 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்'ல வேல பார்த்த ஒருத்தரும் சம்பந்தப்பட்டிருக்காராம். ரூரலை கவனிக்கிற பெரிய ஆபீசர் இவ்வளவு கண்டிப்பானவரா இருந்தும் கூட, இப்படி தப்பு மேல தப்பு பண்றாங்களே; பெரிய ஆபீசரும் கண்டும் காணாம இருந்தா, என்னவெல்லாம் தப்பு பண்ணுவாங்களோ...'' என அங்கலாய்த்தாள்.
யாருமே வராத கூட்டம்
''மகாசபை கூட்டம்ன்னு சொன்னாங்க… ஆனா, யாருமே வரலையாம்'', என புதிர் போட்ட மித்ரா, தொடர்ந்தாள்.
''அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில, பேரவைக்கூட்டம் நடத்தியிருக்காங்க. இதுதொடர்பா ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே விளம்பர மெல்லாம் கொடுத்தாங்க. ஆனா, தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் யாருமே கலந்துக்கலையாம்.
''ஏன் யாருமே கலந்துக்கலைன்னு கேட்டதுக்கு, 'இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க'ன்னு, தலைவர் சொல்றாராம். 'பொதுப்பேரவை கூட்டம் நடக்குறதா எங்களுக்கு எந்தவொரு தகவலோ, அழைப்போ இல்லை; அதனால நாங்க போகலைன்னு, துணைத் தலைவரு உண்மைய போட்டு உடைச்சிட்டாராம்.
''இந்த கூட்டம், வயது வரம்பை உயர்த்தினது தொடர்பா, அரசாங்கத்தோட திருத்தப்பட்ட துணை விதி சார்ந்த கூட்டம் தான்; அவ்வளவு முக்கியமான கூட்டம் இல்ல. இயக்குனர்கள் கூட்டத்துல கலந்துக்கலைன்னாலும் பரவாயில்ல; தீர்மான புத்தகத்துல கையெழுத்துப் போட்டாங்கன்னா போதும்''ன்னு நிர்வாக தரப்புல விளக்கம் சொல்லியிருக்காங்க.
''அந்த சங்கம் நல்லா தானே போய்ட்டு இருக்கு; எதுக்காக இப்படி ஒரு குழுப்பம் வந்துச்சுன்னு தெரியலையே'' என, கவலைப் பட்டாள் மித்ரா.
''பல்லடம் ஜி.ஹெச்.,ல 'நைட் டூட்டி' டாக்டருங்க இருக்கறதே இல்லையாமே,'' என, வேறு மேட்டருக்கு தாவிய சித்ரா,''நோயாளிங்க யாராச்சும் வந்தா, ரெஸ்பான்ஸே பண்றதில்லையாம். விசாரிச்சு பார்த்தா, அங்க வேலை செய்ற நிறைய டாக்டருங்க தனியா கிளினிக் வச்சு நடத்தறாங்களாம். அங்க பிசியாகிடறதால, ஜி.ெஹச்.,க்கு சரியான டைமுக்கு போக முடியறது இல்லைன்னு பேசிக்கிறாங்க. யாரும் கேட்கறதுக்கு இல்லைங்கறதால, சில டாக்டருங்க, ரொம்ப வருஷமா அதே இடத்துல இருக்காங்களாம்,'' என்று சித்ரா பொறுமினாள்.
போட்டி பூமி பூஜை
''கரைப்புதுார் ஊராட்சியில ரோடு, கால்வாய் கட்டுற வேலைக்கு, முதல்ல அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தரப்பு, பூமி பூஜை போட்ருக்காங்க; வேலையையும் துவக்கிட்டாங்க. இதக் கேள்விப்பட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவரு தரப்பு, 'எங்கள கூப்பிடாம எப்படி பூமி பூஜை போடலாம்'ன்னு சொல்லி, அதே இடத்துல மறுபடியும் பூமி பூஜை போட்டிருக்காங்க...
''இப்படி ஒவ்வொரு வேலைக்கும் இவங்க மாறி, மாறி பூமி பூஜை போடற பணத்தை வச்சே, ஏதாச்சும் புதுசா ஒரு வேலைய செய்யலாம் போலயே…'' என கலாய்த்தாள் மித்ரா.
''அ.தி.மு.க., மாவட்ட செயலாளரு, கட்சிக்காரங்க மேல ரொம்ப கோவத்துல இருக்காராம். கட்சி கூட்டம் போட்டா காங்கயத்துல இருந்து நிறைய பேரு வர்றாங்களாம்; ஆனா, உள்ளூர் கவுன்சிலருங்க வர்றதே இல்லையாம்.
கட்சி ஆண்டு விழா சம்பந்தமா ஆலோசனைக் கூட்டம் நடத்தினப்போ, கார்ப்பரேஷன் கவுன்சிலருங்க, ஒன்றிய கவுன்சிலருங்க, மாவட்ட கவுன்சிலருங்க, சேர்மன் பதவியில இருக்கறவங்கன்னு, 90 சதவீதம் பேர் வரவே இல்லையாம். அதனால டென்ஷனான மாவட்ட செயலாளரு, 'கட்சி ஆதரவு இல்லாம எல்லாரும் கவுன்சிலராகிட்டாங்களா? இதுக்கு மேலயும் கட்சி கூட்டத்துக்கு வராம இருந்தா, வேற மாதிரி ஆக்ஷன் எடுப்போம்னு 'கறாரா' சொல்லிட்டாராம். 'பூத் கமிட்டி' விவகாரத்துல, பி.ஜே.பி., காரங்க ரொம்ப வேகமா இருக்காங்க. அதனால, நாமளும் இப்போதிருந்தே, லோக்சபா தேர்தலுக்கு தயாராகணும்; தலா, 25 பேர் கொண்ட 'பூத் கமிட்டி' அமைச்சாகணும்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
'ஷாக்' தரும் மின் வாரியம்
''ஏன்க்கா… பகல்லயே லைட் எரியுது; அணைச்சுருங்க; இந்த மாசம் இ.பி., பில் எவ்வளவு வரும்ன்னே தெரியல'' என, அச்சத்தை வெளிப்படுத்தினாள் மித்ரா.
''ஆமா மித்து'' என, ஆமோதித்தாள் சித்ரா.
''மின் வாரியத்தோட புதிய உத்தரவுபடி, 'லைன் வீடு', 'காம்பவுண்ட்' வீடுகள்ல, ஒரு மின் இணைப்பை '1பி' இணைப்பா மாத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்துட்டு வருது. வீட்டு எண்ணிக்கையை விட, மின் இணைப்பு அதிகமா இருந்தா மட்டும் தான் ஒரு இணைப்பை '1பி' யா மாத்தணுமாம்.
ஆனா, சிட்டிக்குள்ளேயும், அவிநாசியிலும், லைன் வீடு, காம்பவுண்ட் வீடுகள்ல விதிப்படி இணைப்பு இருந்தாலும், ஒரு இணைப்பை '1பி'யா மாத்திடறாங்களாம். இத தெரிஞ்சு, கட்சிக் காரங்க போயி, 'ஏன் இப்டி பண்றீங்க?'ன்னு கேட்டிருக்காங்க.
''நாங்க, மின் வாரியத்துக்கு வருவாய் வரட்டும்னு செய்றோம்; நீங்க ஏன் கெடுக்கறீங்க; கண்டுக்காம விடுங்க. மக்களே இத பத்தி ஒண்ணும் கேட்கலன்னு பதில் சொல்றாங்களாம், இ.பி., காரங்க. இதனால 'கப்சிப்' ஆயிடறாங்களாம் கட்சிக்காரங்க'' என்றாள் மித்ரா.
''சரிக்கா... மழை வர்ற மாதிரி இருக்கு கெளம்பறேன்... ரோட்டுல போறத நெனச்சாதான் பயமா இருக்கு. மேயரு, கோபத்தோட கான்ட்ராக்டர்களை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாராம். இனியாவது சுறுசுறுன்னு பணி நடக்குதான்னு பாப்போம்...'' என்று மித்ரா சொல்லிக்கொண்டிருந்தபோதே, சுடச்சுட ஏலக்காய் மணக்க இரு கோப்பை டீயுடன் வந்தாள் சித்ரா.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!