வீ ட்டில் அமர்ந்து, லேப் டாப்பில் தீவிரமாய் எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தாள் சித்ரா. வண்டிச்சாவியை விரல்களில் சுழற்றிக் கொண்டே, 'அக்கா! ஜாலியா தீபாவளி ஷாப்பிங் போலாமா?' என்றபடி, உற்சாகமாய் உள்ளே நுழைந்தாள் மித்ரா.
அவளை வரவேற்ற சித்ரா, ''மித்து! சிட்டியில ரோடு இருக்குற கண்டிஷன்லயும், டிராபிக் ஜாம்லயும் ஜாலியா வெளிய போறது மாதிரியா இருக்கு...ஆனா தீபாவளிக்கு கடை கடையாப் போயி 'பர்ச்சேஸ்' பண்ற சந்தோஷம், வேற எதுலயும் கிடைக்காது...இரு... கொஞ்ச நேரம் கழிச்சு கிளம்பலாம்!'' என்று, அலுப்போடு சொன்னாள்.
சரியென்று அவளுக்கு அருகில் அமர்ந்த மித்ரா, அதே அலுப்போடு ஆரம்பித்தாள்...
''என்னக்கா...இந்த டிராபிக் போலீஸ் இப்பிடிப் படுத்துறாங்க. ஹைவேஸ், கார்ப்பரேஷன்காரங்க ரோடுகளைப் போடாம கொல்றாங்க... இவுங்க என்னடான்னா, எல்லா ரோட்டையும் அடைச்சு, ஊரையே திக்கு முக்காட வைக்கிறாங்க,'' என்றார் சித்ரா.
''அதுலயும் தீபாவளி டைம்ல ஏன் இப்பிடி டிரையல் பாக்குறாங்கன்னுதான் தெரியலை...அதே மாதிரி, உக்கடம்-ஆத்துப்பாலம் ரூட்ல, பஸ், லாரிகளை விடாதீங்கன்னு ஹைவேஸ்காரங்க, சிட்டி போலீஸ்க்கு லெட்டர் கொடுத்தும், அந்த ரூட்ல எல்லாத்தையும் அனுமதிச்சு, வேலையே பார்க்க விடாம தடுக்குறாங்களாம். கவர்மென்ட்டுக்கு கெட்ட பேரு ஏற்படுத்த எல்லா டிபார்ட்மென்ட் அதிகாரிகளும் சேர்ந்து, கூட்டுச்சதி பண்றாங்களோ!''
''போலீஸ் பண்றதுதான் ஒண்ணுமே புரியலைக்கா...நம்ம தேவாங்கர் ஸ்கூல்ல, ஆர்.எஸ்.எஸ்.,பயிற்சி நடத்த அனுமதி கொடுத்தது, கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்குப் பெரிய தலைவலியாயிருக்கு... ஸ்கூல் எச்.எம்.,ட்ட 'ஸ்கூலை க்ளீன் பண்ணப் போறோம்'னுதான் அவுங்க அனுமதி வாங்கிருக்காங்க. இந்த விவகாரத்தை பெ.தி.க., கிளப்புனதும் வேற வழியில்லாம, அதே எச்.எம்.,ஐ வச்சு, போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க!''
''இந்த மேட்டர்ல, ஸ்கூல் வாட்ச்மேனை பலிகடா ஆக்கலாம்னு ஆபீசர்ஸ் முடிவு பண்ணிட்டாங்களாம். ஏதோ 'லீகல் ஒப்பினீயன்' வாங்கிட்டு கேஸ் பதிவு பண்ணப் போறாங்களாம்...இன்னொரு பக்கம், கோவையில பெட்ரோல் குண்டு வீசுனவுங்களை எல்லாம் போலீஸ் அரெஸ்ட் பண்ணாலும், ஆர்.எஸ்.எஸ்.,சார்பு அமைப்பைச் சேர்ந்த ஒருத்தர் வீட்டுல, யாரு வீசுனாங்கன்னு கண்டுபிடிக்க முடியலை!''
''அது யாரு வீடுக்கா?'' என்று ஆர்வமாய்க் கேட்ட மித்ராவுக்கு, அதை விளக்கினாள் சித்ரா...
''சமஸ்கிருத பாரதி அமைப்போட தென் மாநிலத் தலைவரான ஆனந்த கல்யாண கிருஷ்ணன்கிறவரோட வீட்டுல, யாரு பெட்ரோல் குண்டு வீசுனதுன்னு துப்பு கிடைச்சிருக்குன்னு ரெண்டு வாரமா போலீஸ்ல சொல்றாங்க. ஆனா யாரையும் அரெஸ்ட் பண்ணலை. இப்ப வரைக்கும் மண்டைய உடைச்சிட்டுதான் இருக்காங்க!''
''அக்கா! கொடநாடு கேஸ் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாறுனதுல, நம்ம ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகர்கள் சில பேருக்கு உதறல் எடுத்திருக்கு....நம்ம ஊர்ல ரெண்டு மூணு பேரை அக்யூஸ்ட்டா சேர்க்குறதுக்கு, வலுவான ஆதாரம் கிடைச்சிருக்காம். புதுசா எப்.ஐ.ஆர்.,போட்டு துாக்கப்போறாங்கன்னு தகவல்!''
மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இருவருக்கும் சுடச்சுட பில்டர் காபியும், அரிசி முறுக்கும் வைத்துவிட்டுப் போனாள் அம்மா. அம்மாவுக்கு 'தேங்க்ஸ்' சொல்லி விட்டு, மித்ராவே தொடர்ந்தாள்...
''கொஞ்ச நாளா எதிர்க்கட்சி எம்.எல். ஏ.,க்களுக்குள்ளயும், ஏதோ கசமுசா ஓடிட்டு இருக்குக்கா...போன வாரம் சென்ட்ரல் மினிஸ்டர் மிஸ்ரா வந்து, கலெக்டராபீஸ்ல 'ரிவ்யூ மீட்டிங்' நடத்துனப்ப, வேலுமணி தலைமையில அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் எல்லாரும் வர்றதா இருந்துச்சு...ஆனா யாருமே வரலை. பொள்ளாச்சி எம்.பி., மினிஸ்டருக்குப் பக்கத்துல உட்கார்ந்துட்டதாலதான், அவரு வரலைன்னு சப்பைக்கட்டா ஒரு காரணம் சொல்றாங்க!''
''அவுங்க ஏன் வரலைன்னு தெரியலை...ஆனா நம்ம ஊரு எம்.பி.,யும் வரலை...காட்சிகளைப் பார்த்தா, அடுத்த எலக்சன்ல கூட்டணி கலரே மாறிடும் போலிருக்கு!''
''ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்துல பசுமைத்தீர்ப்பாய ஜட்ஜ் கலந்துக்கிட்ட திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கூட்டத்துல, கவுன்சிலர்களும் கலந்திருக்காங்க...அதுல பேசுன மண்டலத்தலைவர் ஒருத்தவுங்க, 'நீதியரசர்'ன்னு சொல்றதுக்குப் பதிலா, 'நிதியமைச்சர்'னு பேச்சை ஆரம்பிக்க எல்லாரும் சிரிச்சிருக்காங்க!''
''அடக்கொடுமையே...அப்புறம்!''
''கார்ப்பரேஷன் கமிஷனர்தான், 'அவர் நிதியமைச்சர் இல்லை மேடம்...நீதியரசர்'னு சொல்லிருக்காரு. உலக அளவுல பேரு வாங்குற ஊருல, 'நேருன்னா யாரு'ன்னு கேக்குற மேயரும், 'நீதியரசரை நிதியமைச்சர்'னு சொல்ற மண்டலத்தலைவரும் இருக்குற கொடுமைய எங்க போயி சொல்றது!''
ஆத்திரத்தோடு சித்ரா முடிக்க, அமைதியாய் ஆரம்பித்தாள் மித்ரா....
''நம்ம மாவட்டத்துல இருந்து நிறையா மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் ஏகப்பட்ட பதக்கம் அடிச்சிட்டு வர்றாங்க. ஆனா, அவுங்க பயிற்சி எடுக்குறதுக்கு சரியான ஒரு கிரவுண்ட் கூட இல்லை!''
''உண்மைதான் மித்து! லேட்டஸ்ட்டா சிட்டிங் வாலிபால்ல நம்ம கோவை மாற்றுத்திறனாளிகள் லேடீஸ் டீம்தான், ஸ்டேட் சாம்பியன் வாங்கிட்டு வந்திருக்காங்க. அவுங்களுக்கும் சரியான கிரவுண்ட் இல்லைன்னு புலம்புறாங்க!''
''அக்கா! நம்ம ஊரு பெரிய யுனிவர்சிட்டியோட துணைவேந்தர் பதவிக்காலம் சீக்கிரமே முடியப்போகுது. அதனால பல்கலை ஆசிரியர்கள் எதைக் கேட்டாலும் அவர் செய்யுறதேயில்லையாம். தனக்கு வேண்டப்பட்ட சில பேருக்கு மட்டும் ஏகப்பட்ட பொறுப்புகளை அள்ளிக் கொடுக்குறாராம்!''
''புது வி.சி.,யா வர்றதுக்கு யாருக்கு வாய்ப்பிருக்கு மித்து?''
''தெரியலைக்கா...இப்போ இருக்குற துணைவேந்தர் ரிட்டயர்டு ஆக கொஞ்ச நாள்தான் இருக்கு. ஆனா புது துணைவேந்தர் தேடல் குழுவுக்கும் கவர்னரால பிரதிநிதியை, இதுவரைக்கும் நியமிக்கவே இல்லை. மொத்தத்துல யுனிவர்சிட்டியே கலகலத்துப் போயித்தான் இருக்கு!''
''அவுங்க கேக்குறது மட்டுமா கிடைக்கலை...கொரோனா காலத்துல டாக்டர்கள், நர்ஸ்களை துாக்கி வச்சு கொண்டாடுனாங்க. ஆனா அந்த காலகட்டத்துல ஜி.எச்.லயும், இ.எஸ்.ஐ.,ஹாஸ்பிடல்லயும் வேலை பார்த்த 80க்கும் அதிகமான பி.ஜி.,ஸ்டூடண்ட்ஸ்க்கு ஆளுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியதை இப்ப வரைக்கும் கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம். எப்பிடிக் கேட்டாலும் பதில் இல்லையாம்!''
''இ.எஸ்.ஐ.,பத்தி ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன்....கோவையைச் சேர்ந்த ஒரு அமைப்பு சார்புல, இ.எஸ்.ஐ., ஹாஸ்பிடலுக்கு சேர், பர்னிச்சர்னு நிறையா பொருட்கள் கொடுத்திருக்காங்க. சில நாளுக்கு முன்னால, அதே அமைப்பைச் சேர்ந்த ஒருத்தரு, ஆர்.டி.ஐ.,யில இ.எஸ்.ஐ.,க்கு 'டோனர்கள்' கொடுத்த பொருட்கள் பட்டியலைக் கேட்டு வாங்கிருக்காரு. ஆனா அதுல அந்த அமைப்பு பொருட்கள் கொடுத்த தகவலே இல்லையாம்!''
''தகவல் விடுபட்டுப் போயிருச்சா...அல்லது யாரோட வீட்டுக்காவது பொருட்கள் போயிடுச்சா?''
''அதான் தெரியலை...ஆனா ஒரு விஷயம் தெளிவாத் தெரியுது. சி.எம்.சி., இ.எஸ்.ஐ., உட்பட எல்லா ஜி.எச்.,லயும் மருந்துத் தட்டுப்பாடு அமோகமா இருக்கு...ரூரல் ஏரியாவுல நிலைமை அதை விட மோசமா இருக்கு. துடியலுார் கார்ப்பரேஷன் ஹெல்த் சென்டர்ல சாதாரண காய்ச்சல், தலைவலிக்கே வெளியில வாங்கிக்கச் சொல்லித்தான், மருந்து எழுதிக் கொடுக்குறாங்களாம்!''
''மருதமலை முருகா! நீதான் அந்த ஏழை நோயாளிகளை காப்பாத்தணும்...!''
முருகனின் படத்தைப் பார்த்துக் கை துாக்கி வணங்கிய சித்ராவைப் பார்த்து மித்ரா சொன்னாள்...
''அக்கா! மருதமலை கோவிலுக்கு வந்துருக்குற லேடி ஆபீசர் பத்தி, வண்டி வண்டியா புகார் வருது. கோவில் இருக்குற ஊர்லதான் பொறுப்பு ஆபீசர் இருக்கணும்னு ரூல் இருக்கு.
ஆனா இவுங்க அதை மீறி, தினமும் உடுமலையில இருந்து மதியம்தான் வர்றாங்களாம். சூப்பரின்டெண்ட்டும் தினமும் கோபியில இருந்து 12 மணிக்குதான் வர்றாராம். மொட்டை எடுக்குற பணியாளர் யாராவது ஒருத்தர்தான், தினமும் அவரை டவுன்ல இருந்து டூ வீலர்ல, 'பிக் அப்' பண்ணிட்டு வரணுமாம்!''
''நானும் நிறையா கேள்விப்பட்டேன் மித்து...அங்க ஏகப்பட்ட போஸ்ட்டிங் 'வேகன்ட்'டா இருக்காம்...கீழ்மட்ட ஊழியர்களை நேரம் காலம் இல்லாம வேலை வாங்குறாங்களாம். லேடீஸ்க்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலையாம்!''
''அதைவிட கொடுமை...அங்க அடிவாரத்துல வேலை பாக்குற பணியாளர்களுக்குத் தனியா ஒரு டாய்லெட் கூட கிடையாதுக்கா... பக்தர்கள் போற கழிப்பிடத்துலதான் அவுங்களும் போயிக்கணும். ஆனா செக்யூரிட்டி ஆபீசர், பெரிய ஆபீசர் எல்லாருக்கும் அடிவாரம் விடுதியில ஆளுக்கொரு டீலக்ஸ் ரூமை, நிரந்தரமா எடுத்து வச்சிருக்காங்களாம்!''
பேசிக்கொண்டே மணியைப் பார்த்த மித்ரா, 'அக்கா! டைம் ஆச்சு...நீங்க கிளம்புங்க. அதுக்குள்ள நான் மெயில் செக் பண்றேன்!'' என்று லேப் டாப்பை திறந்தாள்.
உடைமாற்ற அறைக்குள் ஓடினாள் சித்ரா.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!