'தீபாவளிக்கு டிரஸ் எல்லாம் எடுத்தாச்சாக்கா,'' என்றபடியே, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
''இரண்டு வருஷத்துக்கு அப்புறம், சனி, ஞாயித்துக்கிழமைல, திருப்பூர்ல கடைவீதி எல்லாம் கூட்டம். இனிதான் போகணும்; நீ எடுத்துட்டியா மித்து'' எனக் கேட்டாள், சித்ரா.
''ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்க்கா... திருமுருகன்பூண்டி காப்பகத்துல, மூணு பசங்க இறந்து போயிட்டாங்க... நெனச்சாலே மனசு கஷ்டமா இருக்குதுக்கா...'' என்று சோகத்தைப் பகிர்ந்தாள் மித்து.
''கணியாமூர் விவகாரத்துல நிறைய பாடம் கத்துக்கிட்டதால, உடனுக்குடனே அமைச்சர்கள், அதிகாரிகள், விசாரணைன்னு, கவர்மென்ட் வேகமாக இந்தப் பிரச்னைய 'டீல்' பண்ணுச்சு...'' என்று, பாராட்டினாள் சித்ரா.
''ஆனாலும், அரசியல் கண்ணோட்டத்துல தான் எல்லாத்தையும் பார்க்கிறாங்க. காப்பக விவகாரத்துல சரியா நடவடிக்கை எடுக்கணும்ன்னு, சொல்லி 'தோழர்'கள் 'வழக்கம் போல' ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க; இதுல, தி.மு.க., நிர்வாகிகளும் கலந்துக்கிட்டதுதான் வேடிக்கை.
நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்துல இருக்கறவங்களே, அவங்கதான். அவங்களே ஆர்ப்பாட்டம் நடத்துறாங்களே... இது அரசியல்தானேன்னு மக்கள் கலாய்க்க ஆரம்பிச்சிட்டாங்க... ஆனா, காங்., கட்சிக்காரங்க கலந்துக்காம சுதாரிச்சுட்டாங்களாம்'' என்று, புட்டுப்புட்டு வைத்தாள் மித்ரா.
தேவையில்லாத 'கெத்து'
''என்னம்மா... இப்பிடி பண்றீங்களேம்மான்னு புலம்ப வச்சிட்டாங்களாம் ஒரு லேடி போலீஸ் அதிகாரி'' என புதிர் போட்ட சித்ரா தொடர்ந்தாள்:
''பெருமாநல்லுார் பக்கத்துல 'பாளையம்காளி' ஊராட்சியில இருக்கிற ஒரு பகுதியில, குடிநீர் இணைப்பு வாங்கி வச்சிருந்த ஒரு வீட்டை சேர்ந்தவரு, வீடு கட்ற வேலைக்காக அந்த இணைப்பை வீட்டுக்கு வெளியே வச்சு, தண்ணி பிடிச்சு பயன்படுத்திட்டு வந்திருக்காரு. அந்த குழாய்ல வர்ற தண்ணியை அந்த வீதியில இருக்கிற மக்களும் அப்பப்போ எடுத்து பயன் படுத்திட்டு வந்திருக்காங்க.
''அவரு வீடு கட்டி முடிச்சதுக்கு அப்புறம், தண்ணி பைப்பை, அவரோட வீட்டுக்குள்ள எடுத்து போட்டிருக்காரு. 'அவரு பொது குழாயைத்தான், வீட்டுக்குள்ள எடுத்து போட்டுக்கிட்டாரு; அந்த இடத்துல ஒரு குழாய் வேணும்'ன்னு, அந்த வீதியில இருக்கிற மக்கள் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய் 'பஞ்சாயத்து' பண்ணியிருக்காங்க. மக்களுக்கு நல்லது பண்ற ஆசைல, அந்த ஸ்டேஷன் லேடி அதிகாரி, ஊராட்சி தலைவரை கூப்பிட்டு, 'அந்த இடத்துல ஒரு குழாய் போட்டு கொடுத்துடுங்க…இல்லைன்னா மக்கள் பிரச்னை பண்ணுவாங்க போல'ன்னு சொல்ல, 'என் இஷ்டத்துக்கு குழாய் போட்டு தர முடியாது; ஊராட்சி கூட்டத்துல தீர்மானம் போட்டு, அதிகாரிங்க சம்மதம் வாங்கினதுக்கு அப்புறம் தான், போட்டு தர முடியும்ன்னு சொல்லியிருக்காரு.
''ஆனாலும், அந்த அதிகாரி விடாம நச்சரிக்க, 'என்னடா இது… வம்பா போச்சே'ன்னு, வடக்கு தொகுதி வி.ஐ.பி., கிட்ட விவரத்தை சொல்லியிருக்காரு அந்த ஊராட்சி தலைவரு.
அவரு, அந்த ஆபீசரம்மாவை கூப்பிட்டு, குழாய் இணைப்பு தர்ற நடைமுறையை விளக்க, அதுக்கு அப்புறம் தான் அவங்க 'சைலன்ட்' ஆனாங்களாம்,'' என்று 'முழுக்கூத்தை'யும் விவரித்தாள், சித்ரா.
''ஆர்வக்கோளாறுல இந்த மாதிரி சில குழப்பம் வரத்தான் செய்யும். இப் படித்தான், போன, 8ம் தேதி, வெள்ளியங்காட்டுல இருக்கிற ரேஷன் கடைல இருந்து ஒருத்தரு அரிசி மூட்டைகளை கடத்தறார்ன்னு, கம்யூ., கட்சிக்காரங்க தாசில்தாருக்கு புகார் பண்ணியிருக்காங்க.
மங்கலம் பகுதியில குறைகேட்பு முகாமுல இருந்த வட்ட வழங்கல் அதிகாரி, உடனடியா கெளம்பி அங்க போயிருக்காரு. அவரு போறத்துக்கு முன்னாடியே, 'மப்டி'யில இருந்த உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு போலீஸ்காரங்க, கடத்தறதுக்கு தயாரா இருந்த அரிசி மூட்டைகளை கைப்பத்தியிருக்காங்க. ஆனா, அவங்க போலீஸ்காரங்க தான்னு தெரியாம, மக்கள் அவங்களோட வாக்குவாதம் பண்ண, விவகாரம் பெரிசாகிடுச்சு. அப்புறம் சிவில் சப்ளை அதிகாரிங்க தலையிட்டு விவகாரத்தை சமாளிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா, சுவாரசியத்துடன்.
''போலீஸ்ன்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. மிலாடிநபி அன்னிக்கு 'டாஸ்மாக்' கடைக்கெல்லாம் லீவு விட்டாங்கள்ல; ஆனா, தென்னம்பாளையம் ஏ.பி.டி., ரோட்ல இருக்கிற மதுக்கடை 'பார்' வழக்கம் போல திறந்தே இருந்துச்சாம்.
ரோட்டுலயே டேபிள் போட்டு உட்கார்ந்து சிலர், சரக்கு அடிச்சிட்டு இருக்கறத பார்த்த மக்கள், போலீசுக்கு தகவல் சொல்ல, போலீஸ்காரங்க அங்கபோய் மதுபாட்டில்களை பறிமுதல் பண்ணியிருக்காங்க. 'சார்…
இது, தி.மு.க., நிர்வாகியோட 'பார்'; அது தெரியாம ஏதேதோ பண்றீங்க'னு அங்கிருந்த சேல்ஸ்மேன்களே போலீஸ்காரங்கள மிரட்டியிருக்காங்க. 'ம்ஹூம்…என்ன கொடுமைங்க இது…'பார்'ல வேல செய்றவங்க எல்லாம் நம்மள மிரட்டற அளவுக்கு நிலைமை வந்துடுச்சு... நாமளும் அரண்டுபோக வேண்டியிருக்கு'ன்னு, போலீஸ்காரங்க புலம்பிட்டே போயிருக்காங்க'' என்று ஆதங்கப்பட்டாள் சித்ரா.
''இதே மாதிரி… சிட்டி லிமிட்ல, திரும்பவும் நிறைய இடங்கள்ல சூதாட்டம் நடக்குதாம். வடக்கு பார்த்த இடங்க, பூண்டி ஸ்டேஷன் பகுதிகள்ல சூதாட்டம் நடத்தினதா சிலரை கைதும் பண்ணாங்க; அவங்ககிட்ட இருந்து பெரியளவு தொகையையும் பறிமுதல் பண்ணியிருக்காங்க...
''பெரிய அதிகாரி சாட்டைய சுழட்டுவாரான்னு பார்க்கலாம். வடக்கு பார்த்த ஸ்டேஷன்ல 'செல்வ' செழிப்போட இருந்த ஒரு போலீஸ்காரர், டிரான்ஸ்பர் போட்டும், போகாம இருக்காருன்னு போன வாரம் பேசினோம்ல. அவரை வேற இடத்துக்கு மாத்திட்டாங்களாம்'' என்று மித்ரா பகிரங்கப்படுத்தினாள்.
கிடா வெட்டில்போலீஸ் அடிதடி
''கிடா விருந்துல, போலீஸ்காரங்க ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்ட விஷயம் கேள்விப்பட்டியா...
''தாராபுரத்துல, விநாயகர் சதுர்த்தி விழாவை நல்ல முறையில் நடத்தி முடிச்சதுக்காக, போலீஸ்காரங்களுக்கு கிடா விருந்து கொடுத்திருக்காங்க. அப்ப, ரெண்டு போலீஸ்காரங்களுக்குள்ள ஏதோ பிரச்னையாக, அடிதடி வரைக்கும் போயிருக்கு. அந்த விஷயத்தை அப்படியே மூடி மறைச்சிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா பரபரப்புடன்.
''அ.தி.மு.க., நிர்வாகி ஒருத்தரு போன ஆட்சியில, அரசாங்க இடத்துல, 'ஆவின்' பேர்ல கடை நடத்திட்டு வந்தாரு. வடக்கு வி.ஐ.பி.,யின் 'விசு'வாசியா அவர் இருந்ததால, அவரை யாரும் எதுவும் கேட்கல; கொஞ்ச நாளைக்கு முன்னாடி, 'குண'மான பேர் கொண்ட தெற்கு 'மாஜி' வி.ஐ.பி.,யை கூப்பிட்டு, தன்னோட பகுதியில விளையாட்டு விழா நடத்தியிருக்காரு. கடுப்பான வடக்கு வி.ஐ.பி., அதிகாரிகளை விட்டு, அந்த நிர்வாகி நடத்திட்டு இருந்த கடையை காலி செய்ய வச்சிட்டாராம். இதனால, 'அப்செட்' ஆன அந்த நிர்வாகி, தீக்குளிக்க முயற்சி பண்ண, அவரை தெற்கு 'மாஜி' வி.ஐ.பி., கூப்பிட்டு சமாதானம் செஞ்சு வச்சிருக்காரு,'' என்று அ.தி.மு.க., 'அரசியலை' விளக்கினாள் சித்ரா.
''காமராஜ் ரோட்டுல பாலத்துக்கு கீழ நிறுத்தற வாகனங்களுக்கு 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்க மாநகராட்சி அதிகாரிங்க டெண்டர் விடப்போறாங்க. 'நம்ம ரோட்டுல அவங்க எப்படி பார்க்கிங் கட்டணம் வசூல் பண்ணலாம்'ன்னு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிங்க கூட கேட்கலையாம். எதுக்கெடுத்தாலும் கொடி பிடிக்கிற தோழர்கள் கூட அமைதியா இருக்காங்களாம்,'' என்று மித்ரா கூற, ''டெண்டர் எடுக்கப்போறது யாரோ'' எனக் கேட்டு, சித்ரா நகைத்தாள்.
''நாளைக்கு போலாமாக்கா டிரஸ் எடுக்க...'' என மித்ரா கேட்க, ''ஓகே, மித்து...'' என்று கூறியவாறே, சமையலறைக்குள் சித்ரா நுழைந்தாள். சூடான டீ தயாரானது!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!