சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்புத்தரோடு ஏசுவும்உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளைஎழுதி எழுதி வச்சாங்கஎல்லாந்தான் படிச்சீங்கஎன்னபண்ணிக் கிழிச்சீங்க?
இப்படி கேள்விகளால் வேள்வி நெய்து 29 வயது வரையே வாழ்ந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் நினைவு தினம் இன்று(08/10/1959).
கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மாடுமேய்ப்பதில் இருந்து மாம்பழ வியாபாரியாக இருந்தது வரை 17 தொழில்களை செய்தார்.
அந்த அனுபவங்கள் அவருக்குள் இருந்து கவிதையாக வெடித்துக் கிளம்பியது.
உழைக்கும் மக்களையும் உழவுத்தொழில் செய்பவர்களையும் பற்றி அவர் வார்த்த வரிகள் புதிய பரிமாணத்தில் கவிதைகளாக கொட்டத்துவங்கியது.
மனைவிக்கு கடிதம் எழுதினால் கூட பாரதிதாசன் வாழ்க என்று பிள்ளையார் சுழி போல எழுதிவிட்டுத்தான் எழுத ஆரம்பிப்பார். அந்த அளவிற்கு அவருக்கு பாரதிதாசன் மீது பற்றும் பாசமும் அதிகம். அதே போல பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரை பாட்டுக்கோட்டையாராக மாற்றும் வகையில் கூர் தீட்டினார்.
தனக்கான களமும் பலமும் தலைநகரில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து பட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். ஆனால் தலைநகர் அவ்வளவு சீக்கிரம் அவருக்கு கம்பளம் விரித்துவிடவில்லை. அவரது தோழர் ஜீவானந்தம் மூலமாக நாடகத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்.
எது கிடைக்கிறதோ அதில் தனது முத்திரையை பதிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பட்டுக்கோட்டையார் வழங்கிய பாடல்கள் அவருக்கு சினிமாக் கதவுகளை திறந்துவிட்டது.
எளிய வார்த்தைகளில் வலிய கருத்துக்களை தாங்கி வந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவிட, அவரது பாடல்கள் இல்லாத படமே இல்லை எனுமளவிற்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கொடிகட்டிப்பறந்தார்.
எம்ஜிஆரும்,சிவாஜியும் இரு துருவங்களாக சினிமாவில் இருந்தாலும், உயர்ந்தாலும், பறந்தாலும் இருவருமே தங்களது படங்களுக்கு பாடல் எழுத பட்டுகோட்டையார்தான் வேண்டும் என்பதில் ஒருமனதாக இருந்தனர்.
எனது ஆட்சி நாற்காலியை தாங்கும் துாண்களாக நிற்கும் நான்கு கால்களில் ஒன்று பட்டுக்கோட்டையார் எனக்காக எழுதிய பாடல்களாலானது என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார்.
பட்டுக்கோட்டையார் கண்களை மூடியதும் கலை உலகமே இருண்டுவிட்டதாக உணர்கிறேன் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி இரங்கல் செய்தியில் குறிப்பிடுகிறார்.
திரைப்படத்திற்கு பாடல் எழுத ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்குள் காலத்தால் அழியாத பல பாடல்களை எழுதியிருந்தார். எல்லோருக்கும் அவரை அந்த வயதில் பிடித்ததில் தப்பில்லை. ஆனால் எமனுக்கும் அவரை பிடித்துப் போனதுதான் வருத்தமாகும். ஆம் சிறு உடல் உபாதை என்று படுத்தவர் திரும்ப எழுந்து கொள்ளவேயில்லை. அவரது ஒரே மகன் குமரவேலுக்கு அப்போது வயது ஐந்து மாதம்தான்.
பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காத பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்தான், பல கல்லுாரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்களாக வைக்கப்பட்டுள்ளது.
சமூகம் முழுமையான சீர்திருத்தம் பெறும் வரை அவரது பாடல்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும், இருக்கவேண்டும்.
-எல்.முருகராஜ்.
பாரதிதாசன் வாழ்க. ஆனா, அந்த பாரதியார் வாழ்க வராது ஏன் என்றால் அவர் பார்ப்பனர். ஜாதி வெறி அப்போதே இருந்துள்ளது