முதல்வர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சி, ஆன்மிகத்திற்கு, மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று, மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் கூறி வருகின்றனர். தி.மு.க., ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல; ஆன்மிகத்தை அரசியலுக்கும், சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானது.
டவுட் தனபாலு: ஓட்டு வங்கி நோக்கத்துல செயல்படும் தி.மு.க., பிற மதங்களின் ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி இல்லை என்பது தெரியும்... அது, ஹிந்துக்களுக்குமட்டுமே எதிரானது என்பதும், 'டவுட்டே' இல்லாம எல்லாருக்கும் தெரியும்!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை: அனைத்து அரசு மருந்துவமனைகளிலும், நான்கு மாதங்களாகவே, உயிர் காக்கும் விலை உயர்ந்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், டாக்டர்கள் இவற்றை வெளியே சொல்லி, அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால், மருந்து இல்லாததற்கு, டாக்டர்களை பலிகடாவாக்கி தண்டிப்பது வேதனை அளிக்கிறது.
டவுட் தனபாலு: 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது மாதிரி, அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுமே என்பதற்காக, மக்களை காக்க வேண்டிய மருந்துகள் இல்லை என்பதை மறைத்தது, தொழில் தர்மமா என்ற 'டவுட்'க்கு பதில் சொல்லுங்களேன்!
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கோவையில், 133 வேலைகளுக்கு, 11 முறை டெண்டர் அறிவித்துள்ளனர்; ஆனால், யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. காரணம், கமிஷன் அதிகம் கேட்பதாக தெரிவிக்கின்றனர். இதனால், தி.மு.க., ஆட்சியில் பல்வேறு பணிகள் முடங்கி உள்ளன.
டவுட் தனபாலு: கமிஷன் என்பதே, அரசியல்வாதிகளுக்கு தரப்படும் லஞ்சம் தான்... இதனால், பல மக்கள் நலத் திட்டங்கள், அரை குறையாக நடப்பது கண்கூடு... சென்னை முழுக்க நடக்கும் மட்டமான மழை நீர் வடிகால் பணிகளே இதற்கு சாட்சி என்பதில், 'டவுட்'டே இல்லை!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை ஆஸ்பத்திரிகளில் மருந்துகள் இல்லை என்பதை மறைத்தது தொழில் தர்மமில்லையென்றால், இரண்டு நாட்களுக்கு முன்னால் மந்திரி மா. சுப்ரமணியம் எல்லா மருத்துவமனைகளிலும் போதிய.அளவு மருந்துகள் கைவசம் உள்ளது என்று பத்திரிகைகளில் அறிக்கை விட்டது நியாயமா? ?