பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்: வி.சி., தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் பேசிய திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், 'திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஹிந்து அரசனாக்குவது என்று, சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது' என பேசியுள்ளது கண்டனத்துக்குரியது. ஹிந்து மத கலாசாரத்தை அழித்து ஒழிக்க, பல நுாறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சி தான் வெற்றிமாறனின் பேச்சு.
டவுட் தனபாலு: கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகளை தாண்டி நிலைத்து நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், ஹிந்து இல்லை என்பதை கேட்டு, சிரிப்பதா, அழுவதான்னே தெரியலை... யார், எத்தனை சதி திட்டங்கள் தீட்டினாலும், ஹிந்து மதத்தை அழிக்க முடியாது என்பதில் அணுவளவும், 'டவுட்'டே இல்லை
lசிவசேனா அதிருப்தி குழுவின் தலைவரான, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே: பாலா சாகேப் பால் தாக்கரேவின் சித்தாந்தத்தை நாங்கள் முன்னெடுத்து செல்கிறோம். அதனால் தான், எங்களுக்கு மக்கள் ஆதரவளிக்கின்றனர். நாங்கள் நடத்தும் தசரா பொதுக்கூட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர்.
டவுட் தனபாலு: பதவி நாற்காலியில இருந்தா, லட்சம் என்ன, கோடிக்கணக்கான மக்களை கூட திரட்ட முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆட்சியில இல்லாதப்ப, உங்களை தேடி மக்கள் வருவாங்களா என்பது தான் முக்கியம்!
முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும், சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கில் ஈடுபட வேண்டாம். தவறுகளுக்கோ, குறைகளுக்கோ இடம் தரக் கூடாது. அப்படி ஏதேனும் நடந்தால், கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்
.டவுட் தனபாலு: 'புலி வருது' கதையா, நீங்களும் இப்படி எச்சரிக்கை விடுத்துட்டே தான் இருக்கீங்க... ஆனா, உங்க கட்சிக்காரங்க, தங்களோட திருகுதாளங்களை செஞ்சிட்டு தான் இருக்காங்க... கட்சியில உங்க அப்பா பேச்சுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் தங்களுக்கு இல்லையோன்னு, 'டவுட்'டா இருக்குது!lll
......