Load Image
Advertisement

விளையாட்டுல 'தில்லுமுல்லு'... களையெடுக்க விசாரணை!



ஆயுத பூஜை கொண்டாட வீட்டை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தாள், சித்ரா.

''அக்கா, டிஸ்டர்ப் பண்ணீட்டனா...'' என்று கூறியவாறே வந்தாள் மித்ரா. ''குழந்தைகள் விளையாடற மாதிரி, நமக்கு அரட்டைதானே பொழுதுபோக்கு'' என்று புன்னகைத்தாள் சித்ரா.''விளையாட்டுன்னு சொன்னவுடன தான் ஞாபகம் வருது... குறுமைய விளையாட்டுப் போட்டியில, ஒருத்தரு, அதிகபட்சமா, மூணு போட்டியில தான் பங்கெடுக்க முடியும்ங்கற நிலைமைல, ஒரு ஆசிரியர் தனது மகளை விதிமீறி நான்கு போட்டிகள்ல பங்கெடுக்க செய்தார்ன்னு, போன வாரம் பேசினோம்ல, இந்த விவகாரம் வெளியே வந்த பிறகு, போட்டி நடத்தறவங்க ரொம்ப உஷாராகிட்டாங்களாம்.ஒரு தனியார் ஸ்கூல் மாணவன், விதிமீறி நான்கு போட்டிகள்ல பங்கெடுத்திருக்கிறதா புகார் கிளம்ப, அந்த பையனை நான்காவதா கலந்துக்கிட்ட போட்டியில இருந்து தகுதி நீக்கம் செஞ்சுட்டாங்களாம். அதே மாதிரி, 17 வயசு பசங்க பிரிவு போட்டியில, 19 வயசு பையனை ஓட வைச்சிருக்காங்க.இந்த விஷயமும் வெளிய வர, அந்த பையனையும் தகுதி நீக்கம் செஞ்சுட்டாங்களாம். இந்த மாதிரி தில்லுமுல்லு வேலை செய்றது யாருன்னு, கல்வி அதிகாரிங்க விசாரணை பண்ணிட்டு இருக்காங்களாம். அந்த 'தில்' ஆசாமிகளோட முகத்திரை கிழியப்போகுது'' என்று, மித்ரா அம்பலப்படுத்தினாள்.

சவுத் வி.ஐ.பி., உற்சாகம்



''விளையாட்டா எதையும் விட முடியாது போல'' என்ற சித்ரா, ''திருப்பூர் சவுத் வி.ஐ.பி.,க்கு கட்சியில மீண்டும் மாவட்ட செயலர் பொறுப்பு கிடைச்சிடுச்சு... இதனால, ரொம்ப உற்சாகமா இருக்காராம். கேரள சமாஜம் நடத்தின ஓணம் விழாவுல கலந்துக்கிட்ட அவரு, மகிழ்ச்சிக்கடல்ல மிதந்திருக்காரு. குழந்தைகளோட கலை நிகழ்ச்சிகளை ரொம்ப ரசிச்சு பார்த்தாராம்.கடைசியா மேடையேறி பேசறப்ப, 'சிறப்பா நடனம் ஆடறீங்க'ன்னு உடல் அசைவும் செய்து காண்பிக்க, அத்தனை பேரும் சிரிச்சு, ஆரவாரம் செஞ்சிருக்காங்க,'' என்று ஆர்வத்துடன் கூறினாள் சித்ரா.''கட்சிப்பொறுப்பை மீண்டும் வாங்கிட்டு வந்த அவரை வரவேற்க, சிட்டிக்குள்ள இருந்து நிறைய நிர்வாகிங்க போகலையாம். அவிநாசி, பல்லடத்துல இருக்கிற கட்சிக்காரங்க தான், நிறைய பேரு போயிருக்காங்க,'' என்று, மித்ரா 'நிஜத்தை' சொன்னாள்.''மாநகராட்சி மண்டல ஆபீஸ்ல, துாய்மைப்பணியாளர் வருகைப்பதிவு விவகாரத்துல, முறைகேடு நடந்ததா, அதிகாரி மேல நடவடிக்கை எடுத்தாங்கள்ல. எப்படி தப்பு நடந்துச்சுன்னு விசாரிச்சு பார்த்தப்ப, துாய்மை பணியாளருக்கு தர்ற சம்பளத்துல 'கை' வச்சுத்தான், மண்டல வி.ஐ.பி.,யோட வாகன பராமரிப்பு செலவை சமாளிச்சிருக்கிறதா சொல்றாங்க.இந்த விஷயம் இப்பத்தான் வெளிய வந்திருக்கு; தனக்கு எதுவுமே தெரியாத மாதிரி, வி.ஐ.பி., ஒதுங்கிட்டாராம். விவகாரத்தை தோண்டியெடுத்தா உண்மை வெளியே வரும்ன்னு, அங்க இருக்கிறவங்க பேசிக்கிறாங்க'' என்று 'ரகசியத்தை' வெளிப்படுத்தினாள் சித்ரா.''ரேஷன் கடைகள்ல ஆய்வு செய்ற அளவுக்கு கூட, தாலுகா ஆபீஸ்ல பணிகளை, மாவட்ட அதிகாரி ஆய்வு செய்றதில்லைன்னு பேசிக்கிறாங்க. புகார் சொல்றதுக்கு, வருவாய் அதிகாரியை போன்ல கூப்பிட்டா, அவர் எப்பவும் தொடர்பு எல்லைக்கு வெளில தான் இருக்காராம்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.

அதிகாரியை மடக்கிய மக்கள்



''பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு, அந்த துறை மாவட்ட அதிகாரி சமீபத்துல ஆய்வுக்கு போனப்போ, 'பராமரிப்பே சரியில்லை; எவ்வளவு மோசமா வச்சிருக்கிறாங்க பாருங்க'ன்னு, அங்க இருந்த பொதுமக்கள், அதிகாரியை மடக்கிட்டாங்களாம். கலெக்டர் அந்த ஆஸ்பத்திரிக்கு போனப்பவும் இதே நிலைமை தானாம். ''நீங்க சொல்லாம, கொள்ளாம திடீர்ன்னு வந்து ஹாஸ்பிடலை வந்து பாருங்க; நிலைமை தெரியும்'ன்னு, சொல்ல சரின்னு சொல்லிட்டு போயிருக்காராம் கலெக்டர்.''அங்க என்ன தான் நடக்குதுன்னு, ராமசாமி அங்கிள்கிட்ட கேட்டா தெரியும்,'' என்றாள், மித்ரா.''பல்லடம் பக்கத்தில இருக்கிற 'புதுார்கரை' பஞ்சாயத்து தலைவரா அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவரு இருக்காரு. யூனியன் தலைவரா, தி.மு.க., வைச் சேர்ந்தவரு இருக்கிறதால, திட்டப்பணிக்கு பூமி பூஜை போடறப்ப, ஊராட்சி தலைவரு, யூனியன் தலைவரை கூப்பிடறது இல்லையாம்; இதேபோல யூனியன் தலைவரு ஊராட்சி தலைவர கூப்பிடறது இல்லையாம்.இவங்க அக்கப்போர்ன்னால தர்மசங்கடத்துக்கு ஆளாகி இருக்கிற அதிகாரிங்க, எங்க பூமி பூஜை நடந்தாலும் போறதே இல்லையாம்,'' என்று 'அரசியல்' விவகாரத்தை 'கலாய்த்தாள்' சித்ரா.

ரகசியம் காக்கும் அதிகாரிகள்



''திருப்பூர் யூனியன் ஆபீஸ், கிணத்துல போட்ட கல்லாட்டம் கிடக்குதாம். எந்த விஷயமும் வெளிய வரக்கூடாதுங்கறதுல, அங்க வேல பார்க்குற ஆபீசர்ங்க ரொம்ப தெளிவா இருக்காங்களாம். யூனியன் மூலமா பல இடங்கள்ல ஆரம்பிச்ச வேலைங்க முடியாம, ஒரு வருஷமா கிடப்ல போட்டுவச்சிட்டாங்க. இதனால, 'அப்செட்' ஆன கவுன்சிலருங்க, கட்சிப்பாகுபாடு பார்க்காம, அதிகாரிகளை கேள்வி மேல கேட்டு துளைச்சு எடுத்துட்டு இருக்காங்களாம். மாவட்டத்துல இருக்கிற ரெண்டு அமைச்சர்ங்க தொகுதியை சுத்தி, சுத்தி வர்றாங்க; ஆனால், இந்த பிரச்னையெல்லாம் அவங்க கண்ணுல பட மாட்டேங்குதேன்னு புலம்பறாங்க,'' என்று அங்கலாய்த்தாள் மித்ரா.''வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை, அரசு ஊழியருங்களுக்கு மட்டும் தான் ஒதுக்கணுமாம். ஆனா, 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் பணம் வாங்கிட்டு, விதிமீறி, மாநகராட்சி ஊழியர்களுக்கு கூட வீடுகளை ஒதுக்கியிருக்காங்களாம், அது மட்டுமில்லாம, 'சிங்கிள், டபுள் பெட்ரூம்' இருக்கிற வீடுகளை ஒதுக்கறதுலையும், பணம் விளையாடுதாம். சிலரு இடைத்தரகர் மாதிரி செயல்படறாங்கன்னு பேசிக்கிறாங்க'' என்று உண்மையை உரக்கச்சொன்னாள் சித்ரா.''இப்படியே பண்ணிட்டு இருந்தாங்கன்னா, பதவியை ராஜினாமா செய்றத தவிர வழியில்லைன்னு சொல்லிட்டாங்களாம், அவிநாசி பக்கத்துல இருக்கற உப்பிலிபாளையம் ஊராட்சி தலைவி'' என்ற மித்ரா தொடர்ந்தாள்: ''அந்த ஊர்ல துணைத்தலைவரோட அதிகாரம் தான் கொடிகட்டி பறக்குதாம். 'பில்டிங் அப்ரூவல்'ல இருந்து, வரி ரசீது போடற வரைக்கும் அவர் சொல்ற மாதிரிதான், நடந்துக்கணும்ன்னு ஆசைப்படறாராம். இதுசம்பந்தமா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நடந்த கிராமசபைல கூட விவாதம் வந்திருக்கு. 'துணை தலைவரோட ஆதிக்கம் அதிகமா இருக்குது; இப்படியே போனா, என் பதவியை ராஜினாமா செய்றேன்னு, மக்கள் முன்னாடியே ஊராட்சி தலைவி சொல்லிட்டாங்களாம்.''அவங்க பேசுனதை அப்படியே 'மொபைல் போன்'ல வீடியோ எடுத்து, சிலரு வைரலாக்கிட்டாங்க. அந்தம்மா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவங்களா இருக்கிறதால தான், இப்படியெல்லாம் பண்றாங்கன்னும் கிளப்பி விட்டுட்டாங்க,'' என்று, நீட்டி முழங்கினாள்.

'பார்' மீதே பார்வை



''அவிநாசில காந்தி ஜெயந்தி விடுமுறையன்னைக்கு, சில இடங்கள்ல சரக்கு விற்பனை அமோகமா நடந்திருக்கு. இந்த தகவல், எஸ்.பி.,க்குப் போக, உள்ளூர் போலீசை நம்பினா வேலைக்கு ஆகாதுன்னு, தன்னோட 'ஸ்பெஷல் டீமை' அனுப்பி வைச்சு, தெக்கலுார் செங்காளிபாளையம், அவிநாசி பட்டறைல, சரக்கு வித்தவங்கள பிடிச்சு, அவங்ககிட்ட இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் பண்ணுனது மட்டுமில்லாம, அவங்க மேல வழக்கும் போட வச்சிருக்காரு,'' என உள்ளூர் போலீசாரின் சாயம் வெளுத்தாள் சித்ரா.''அங்க மட்டுமில்லைங்க அக்கா; மாவட்டம் முழுக்க, பல இடங்கள்ல உள்ளூர் ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க, இல்லீகல் சரக்கு விக்கறவங்க, 'பார்' காரங்களுக்கு ரொம்ப பக்கபலமா இருக்காங்க; அந்த மாதிரி போலீஸ்காரங்களுக்கு 'பார்' காரங்களுக்கும் ரொம்ப விசுவாசமா நடந்துக்கிறாங்க. ஒரு 'பார்' உரிமையாளரு, சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற போலீஸ்காரங்க சிலரின் பிறந்தநாளுக்கு 'கேக்' வாங்கிக் கொடுத்து, வெட்ட வச்சு, கொண்டாட வச்சிருக்காருன்னா பார்த்துக்கோயேன்'' என நிலவரத்தை விளக்கினாள் மித்ரா.''வேலை நிறைய இருக்கு...'' என்று சித்ரா சொல்ல, ''சூடா ஏலக்காய் டீ போட்டுத்தாங்கக்கா'' என்று மித்ரா கேட்டாள். 'உனக்கு இல்லாத டீயா?' என்று கலகலத்தாள் சித்ரா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement