'பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்பு மேற்கொள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமையுள்ளது. இதில், திருமணமானவர், திருமணமாகாதவர் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது. தங்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் விதமாக கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை, பெண்களுக்கு வழங்க வேண்டும்' என, தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த, ௧௯௭௧ல் இயற்றப்பட்ட சட்டப்படி, நம்நாட்டில் கருக்கலைப்பானது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பெண் குழந்தைகளை கருவிலேயே கலைக்கும் செயல்களை செய்து விடக்கூடாது என்பதற்காக, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சட்டப்படி, 20 வாரங்கள் வரை வளர்ந்த கருவை, பதிவு செய்யப்பட்ட டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, பெண்கள் கலைக்க முடியும்.
கடந்த ஆண்டு, இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. பாலியல் பலாத்காரத்தில் சிக்கும் பெண்கள் மற்றும் சிறுமியரை பாதுகாக்கும் வகையில், இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, திருமணமான பெண்கள், 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க முடியும். அத்துடன், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள், தகாத உறவால் கர்ப்பம் அடைந்தவர்கள், சிறார்கள், கர்ப்பம் அடைந்த பின் விவாகரத்தானவர்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளி பெண்கள் போன்றோர், 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க முடியும்.
இந்நிலையில் தான், கருக்கலைப்பு செய்யும் விதிகளில் திருமணமாகாத பெண்களையும் சேர்க்கக்கோரி, பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, 'சட்டத்தில் திருமணமான, திருமணமாகாத பெண்கள் என்று வேறுபடுத்தி பார்ப்பது செயற்கையானது, அரசியல் சட்டப்படி செல்லாது. மேலும், திருமணமான பெண்கள் மட்டுமே, உடலுறவில் ஈடுபடுவர் என்ற பழைய வாதத்தை முன்வைப்பதாகவும் உள்ளது.
'கருக்கலைப்பு சட்டத்தின் கீழ், அனைத்து வகை பெண்களும், 24 வாரம் வரையிலான கருவை கலைக்க உரிமையுண்டு. திருமண அந்தஸ்தை காட்டி, பேதம் பார்ப்பதை ஏற்க முடியாது. மேலும், கருக்கலைப்பு திருத்த சட்ட விதிகளில், திருமணமாகாத பெண்களையும், தனியாக வாழும் பெண்களையும் சேர்க்காமல் இருப்பது சரியல்ல; அவர்களையும் சேர்க்க வேண்டும்.
'ஒவ்வொருவருக்கும் தேவையான மருத்துவ சேவை மற்றும் குறித்த நேரத்தில், மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்' என்று கூறியுள்ளது. அத்துடன், இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவுகள் குறித்த விபரங்கள், அனைத்து மக்களையும் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையற்ற முறையில் கருவுறுவதை தடுக்க, கருத்தடை மாத்திரைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. நம்நாட்டில், திருமண ரீதியான பலாத்காரம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்களைப் போலவே, கணவருடன் ஒருமித்த அடிப்படையிலான உறவு இல்லாமல், அவரின் பலாத்காரத்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் போது, அதையும் பாலியல் வன்கொடுமையாகவே கருத வேண்டும். பெண்கள் விரும்பாத அந்த கருவையும் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் கூறியுள்ளது மிகவும் சரியானதே. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பாலியல் பலாத்காரம் போன்ற அசம்பாவிதங்களில் சிக்கும் பெண்களும், சிறுமியரும், திருமணமாகாத பெண்களும், துரதிருஷ்ட சம்பவத்தால் தங்களின் வயிற்றில் வளரும், விரும்பத்தகாத கருவை கலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.
அதுமட்டுமின்றி, காதலிக்கும் போது ஆணுடன் ஒருமித்த அடிப்படையில் உறவு கொண்டு, அதனால் கர்ப்பம் அடையும் பெண்கள், பின், அந்த காதலரால் கைவிடப்படும் போது, பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில், விரும்பத்தகாத கருவை கலைக்க தற்போதைய தீர்ப்பு அனுமதி வழங்குகிறது. இதன் வாயிலாக, அத்தகைய பெண்கள், புதிய வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். மொத்தத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு, பெண்கள் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்து கொள்ளும் வகையில், அது தொடர்பான விதிகளை எளிமையாக்கி இருக்கிறது என்பதால் வரவேற்கத்தக்கதே.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!