884 பள்ளிகளையும், 46 கல்லுாரிகளையும்,பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியையும் கொண்டு தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் இருக்கும் மாவட்டம் என்று (91.75 %) இன்று கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது என்றால் அதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர்தான் பெருமைக்குரிய தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,
நாடு சுதந்திரம் அடைந்திருந்த போதும் மக்கள், தாங்கள் அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடாமல் இருந்தனர் அவர்கள் சுதந்திரம் பெற்றவர்களாக வாழ வேண்டும், உலகத்தின் முன்னேற்றங் களை எல்லாம் எய்த வேண்டும் என்ற நிகழ்காலத்திற்கு வருவதற்கு தரமான கல்வி தேவைப்பட்டது.அதே போல சிறு சிறு பூசல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜாதி, மதம் போன்ற குறுகிய நோக்கில் இருந்த சமுதாயம் விடுபட வேண்டும் என்றால் அதற்கும் கல்விதான் துணை செய்ய முடியும் என்பதை தனது எழுத்து மூலமாக மக்களுக்கு புரியவைத்தார்.இருந்தும் படிக்கமாட்டேன் என்ற அடம்பிடித்து பள்ளிக்கூடம் பக்கமே தங்களது பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்கள் இருந்தமையால் அதற்கு கட்டாயக் கல்வித் திட்டமே கைகொடுக்கும் என்பதை உணர்ந்து கட்டாய கல்வி திட்டம் தேவை என்று வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் 'கட்டாய இலவசக் கல்வி உபதேசக் கமிட்டி' என்று ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது. அந்தக் கமிட்டியில் டி.எம்.சிதம்பரதாணுப் பிள்ளை எம்.எல்.சி., முன்னாள் மந்திரி பி.எஸ்.நடராஜபிள்ளை, முன்னாள் எம்.எல்.,ஏ., ஆர்.எஸ்.நாடார், எஸ்.திரவிய நாடார், டி.வி.ஆர்., ஆகிய ஐந்து பேரை நியமித்து, அரசாங்கக் கெஜட்டும் வெளியிட்டது.
உற்சாகமடைந்த இந்தக்குழு தங்கள் சொந்த வேலைகளை மறந்து துறந்து ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து கட்டாயக் கல்வியின் நன்மையையும், அவசி யத்தையும் எடுத்துக் கூறினர் இதன் விளைவு அடுத்த மூன்று மாதத்திற்குள் 50 பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டது.இவர்கள் பேச்சு காரணமாக பள்ளிக்கான இடத்தை மக்கள் இலவச மாகக் கொடுத்தனர். கட்டடம் கட்டத் தேவையான பணத்தை அரசு கொடுத்தது. தங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம் சிறப்பாக அமையவேண்டும் என்பதால் அரசாங்கம் கொடுத்த பணத்திற்கும் அதிகமாக செலவழித்து பள்ளிகளை அழகு அழகாய்க் கட்டிவிட்டனர்.காரணம்.
இது போன்ற கண்ணோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித் தொண்டில் தன்னை முழுக்க முழுக்க டி.வி.ஆர்.,ஈடுபடுத்திக் கொண்டார்,அதற்காகப் பெரும் தியாக வாழ்க்கையை மேற்கொண்டார்..பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உரிமையுடன் டி.வி.ஆர்., வீட்டுக்குப் போய்ப் படிப்புச் செலவிற்கு பணம் பெறுவர். ‛நான் கொடுத்தேன் என்று வெளியில் சொல்லாதே' என்று சொல்லிவிட்டு பலரது படிப்பு செலவிற்கும் உதவினார்.திருநெல்வேலி, நாகர்கோவில் சாலையில் உள்ள வெள்ளமடம் என்ற ஊரில் முதல் கட்டடத்திற்கு சி.பி.இராமசாமி ஐயர் அடிக்கல் நாட்டிய மூன்று மாதத்திற்குள் அப்பள்ளி செயல்படத் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்ட மக்களை இன்று, இமாச்சலப் பிரதேசம் முதல் குமரி வரை, உத்தியோகத்திலும் வேறுபல அலுவல்களிலும் இருக்கிறார்கள் அதிலும் நாடு முழுவதும் டாக்டர்கள் பரவலாக உள்ளனர். இந்த நன்மைக்கு மூலகாரணம் டி.வி.ஆர்.,துாக்கிப்பிடித்த கட்டாய இலவசக் கல்வித் திட்டம்தான்.இந்த திட்டம் முதல் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப் பட்டது இதை வெற்றிகரமாக அமலாக்க வடம் பிடித்து இழுத்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதை டி.வி.ஆர்.,அடிக்கடி பின்னாட்களில் பெருமையுடன் நண்பர்களிடம் குறிப்பிடுவது உண்டு..
மாவட்டத்தில் ஏனைய இடங்களை விடக் கன்னியாகுமரியில் கூடுதலாகவே ஆரம்பப் பள்ளிகளும், உயர்தர பாடசாலைகளும் இருக்கின்றன. ஆனால், கல்லுாரி படிப்புக்கு உள்ள வாய்ப்புகள் மிகக் குறைவு. வெளி மாவட்டங்களுக்கு ஒரு மாணவனை அனுப்பிப் படிக்க வைப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படும்.தொழில் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும், இம்மாவட்ட மாணவர் களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. மாவட்டத்தின் தேவைக் கேற்ப இடம் ஒதுக்கப்படுவதில்லை. இப்பிரச்னைகள் அனைத்தையும் கன்னியாகுமரிப் பல்கலைக்கழகம் தீர்க்க முடியும். ஏழை மாணவர் களுக்கு வாய்ப்பளிக்க முடியும் ஆகவே கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைவது அவசியம் என்பதை டி.வி.ஆர்.,பல நேரங்களில் வலியுறுத்தினார்.
இதற்காக ஜூன் 11, 1965ல் நடந்த பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தை கூட்டி 'கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான வாய்ப்புகளை அனைத்தையும் விலாவாரியாக தந்து தனது எண்ணத்தை எல்லோருக்குமான என்ணமாக மாற்றினார்.காமராஜர் முதல்மந்திரியாக இருந்தபோது, மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தார். அன்றைய கல்வி இலாகா டைரக்டர் என்.டி.சுந்தரவடிவேலு இத்திட்டத்தை எட்டயபுரத்தில் முதலில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்குப் பெரும் ஆதரவு தந்தது திருநெல்வேலி மாவட்டம்தான். இவை மட்டுமல்லாது, திருநெல்வேலியில் சித்த வைத்தியக் கல்லுபரி, பொறியியல் கல்லூரி, வைத்தியக் கல்லுபரி, விவசாயக் கல்லுபரி இவையும் வேண்டுமென்று 'தினமலர்' எழுதி வந்துள்ளது. இன்று அவை திருநெல்வேலியில் செயல்படுகின்றன என்றால் அதில், 'தினமலர்' இதழின் பங்கு பெரிய அளவில் உண்டு.
இப்படி கல்விதான் ஒருவனது வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதை டி.வி.ஆர்.,மூலம் உணர்ந்த அவரது வாரிகள் பின்னாளில் தினமலர் இதழின் பல பக்கங்ளை கல்விக்காக ஒதுக்கினர் இன்று பட்டம் போன்ற தனி இணைப்புகளே சிறார் கல்விக்காக வருகிறது தினமலர் நடத்தும் ஜெயித்துக்காட்டுவது எப்படி வழிகாட்டி போன்ற பல கல்வி நிகழ்ச்சிகளுக்கும் வேர் டி.வி.ஆர்.,தான்.
ஏழை எளியவர்கள் முன்னேற வேண்டுமானால் கல்விதான் அதற்கு சிறந்த வழி என்பதை உணர்ந்து அதை மக்களுக்கு உணர்த்திய தினமலர் நிறுவனர் டி.வி.ஆரின்.,114வது பிறந்த நாள் இன்று.
கல்வியில் முன்னேறி நாட்டிற்கும் வீட்டிற்கும் துாணாகவும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வழிகாட்டும் வழிகாட்டப்போகும் லட்சக்கணக்கான மாணவ செல்வங்களின் சார்பில் அமரர் ஐயா டி.வி.ஆர்.,அவர்களை போற்றி பாராட்டுவோம்
-எல்.முருகராஜ்
திருநெல்வேலி என்றாலே வீரத்துக்கு பெயர்பெற்றது , வீரப்பாண்டிய கட்டபொம்மன், மற்றும் எண்ணிலடங்கா சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்கள் வரிசையில் ஒரு பத்திரிக்கையாளர் என்பது மிகுந்த பெருமை அடைகிறோம் . வாழ்த்துக்கள் , அதுவும் கல்விக்காக என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒன்று. தனி ஒரு மனிதராக இருந்து எவ்வளவு சாதனை புரிந்திருக்கிறார் என்பதை அறிந்து பெருமைப்படுகிறோம், பாராட்டுக்கள், அதே நேரத்தில் இதே கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மற்றொரு மகனையும் இங்கு நினைவில் கொள்வதும் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்...