Load Image
Advertisement

கோவை முழுக்க நடக்குது மண் கொள்ளை...குழி வெட்டுறதுக்கு அளவே இல்லை!

பாரதியார் பல்கலைக்குச் செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் டூ வீலரில் போய்க்கொண்டிருந்தார்கள். வேளாண் பல்கலையைக் கடக்கும்போது, புதிதாகப் போடப்பட்ட வேகத்தடையில் வண்டி தடதடவென்று தடுமாற, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த மித்ராதான் ஆரம்பித்தாள்...

''நம்ம ஹைவேஸ்காரங்களுக்கு வேகத்தடை போடுறதைத் தவிர, இப்ப வேற வேலையே இல்லைன்னு நினைக்கிறேன். இந்த யுனிவர்சிட்டிக்கு முன்னால, காலம் காலமா வண்டிங்க போய் வந்துட்டுதான் இருக்கு. இப்போ எதுக்கு திடீர்னு இந்த ஸ்பீடு பிரேக்கர்களைப் போட்டாங்கன்னு தெரியலை. போட்டதுதான் போட்டாங்க. அதுல ஒரு பெயின்ட் அடிச்சாங்களா...அல்லது ஒரு அறிவிப்பாவது வச்சாங்களா?''மித்ராவின் கோபமான கேள்விக்கு, சித்ரா பதில் சொன்னாள்...''இங்க இதுவரைக்கும் பெருசா ஆக்சிடெண்ட் எதுவும் ஆனதில்லை மித்து...ஆனா இந்த வேகத்தடை போட்ட பிறகு, போன வாரம் ஒரு பையன் இந்த வேகத்தடையினால பைக்ல இருந்து விழுந்து...செம்ம அடி. இப்பவாவது வண்டிங்க வேகத்தைக் கன்ட்ரோல் பண்றதுக்கு, போலீஸ் நடவடிக்கை எடுக்குறாங்களான்னா...அதுவும் இல்லை!''சித்ரா பேசும்போதே, அவர்களை அசுர வேகத்தில் கடந்து சென்ற கிராவல் மண் லாரியைப் பார்த்து, மித்ரா பேச்சைத் தொடர்ந்தாள்...''அக்கா! கொஞ்ச நாளா நம்ம மாவட்டம் முழுக்க மண் கொள்ளை அளவில்லாம நடக்குது. அ.தி.மு.க., ஆட்சியில நடந்ததை விட, பல மடங்கு அதிகமா மண்ணைச் சுரண்டி வித்துட்டு இருக்காங்க. மேட்டுப்பாளையம் பக்கத்துல தேக்கம்பட்டி, சாலையூர், மத்தம்பாளையம் ஏரியாவுல பத்தடியிலயிருந்து 20 அடி வரைக்கும், பள்ளம் பள்ளமா தோண்டிட்டே இருக்காங்க. மின்சார டவரைச் சுத்தி குழி தோண்டி வச்சிருக்காங்க...அதெல்லாம் யானைங்க போற வழி!''''இதுக்கெல்லாம் பர்மிட் வாங்குறாங்களா இல்லையா?''''எதுக்குமே கிடையாது. ஒரே ஒரு பர்மிட்டை வாங்கி வச்சுக்கிட்டு, நுாறு லோடு மண் எடுக்குறாங்க. அந்த பேப்பர் பர்மிட்ல தேதி எழுதிருக்கிற இடத்தை, ஊதுபத்தியை அடியில காமிச்சா அழிஞ்சிருமாம். ரெவின்யூ ஆபீசர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள்ன்னு யாராவது வந்தா, அதுல அன்னிக்குத் தேதியைப் போட்டு, எழுதிக் கொடுத்துர்றாங்களாம்!''''யாரு மித்து இந்த வேலையைச் செய்யுறது...?''''சொன்னா ஆச்சரியப்படுவீங்க....போன ஏ.டி.எம்.கே.,பீரியட்ல அப்போ துணை பொறுப்புல இருந்த தேனிக்காரர் பேரை வச்சு, மண் கொள்ளை நடத்துன புதுக்கோட்டை ஆளுங்கதான், இப்பவும் இந்த வேலையைப் பண்றாங்களாம். சமீபத்துல கட்சி மாறுன 'எக்ஸ்' ஒருத்தருதான், அப்போ செஞ்சதுமாதிரியே இப்பவும், இந்த வேலையைச் செய்யுறார்ன்னு தகவல்!''மித்ராவின் தகவலையொட்டி, தனக்குக் கிடைத்தத் தகவலைப் பகிர்ந்தாள் சித்ரா...''மித்து! அவுங்க அள்ளுறது எல்லாம் கிராவல் மண்ணு....கோர்ட் உத்தரவுல தடாகத்துல இருக்குற செங்கல் சூளைகளை மூடுன பிறகு, அங்க இருந்த மெஷினை எல்லாம் கழட்டிட்டு, வேற ஏரியாவுக்குப் போயிட்டாங்க. இப்போ வேற இடங்கள்ல செங்கல்லுக்கும் மண் எடுக்குறாங்க. மேட்டுப்பாளையம் பக்கத்துல தோலம்பாளையத்து சூளைக்குதான் மண் அள்ளுறாங்க. இங்க மாதம்பட்டி, குப்பனுார், ஆலாந்துறையிலயும் இந்த குழி தோண்டுற வேலை ஜோரா நடக்குது!''''அக்கா! இந்த மண் கொள்ளை அத்தனைக்கும் ஆளும்கட்சி மேலிடத்தோட சப்போர்ட் நிறையா இருக்குன்னு தகவல். அதனாலதான், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர், பேரூராட்சிக்காக ஒரு இடத்துல கொஞ்சம் மண் அள்ளுனதுக்கே, 'எங்களுக்கு லோடுக்கு 400 ரூபா தராம மண் எடுக்கக்கூடாது'ன்னு ஒரு குரூப் மெரட்டிருக்கு!''''அவரு ஆளும்கட்சி ஆளாச்சே!''''ஆமாக்கா...அதான் அதுல ஆச்சரியம்...'நீ சி.எம்.,ட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ...எங்களுக்குக் கொடுக்க வேண்டிய காசைக் கொடுக்காம இங்கயிருந்து வண்டி நகராது'ன்னு மெரட்டிருக்காங்க!''''ஆளும்கட்சியோட நிலைமை இப்போ, அப்பிடித்தான் போயிட்டு இருக்கு...வேற கட்சியில இருந்து வந்தவுங்களுக்கு பதவி, சொந்தத் தொகுதியில தோத்தவருக்கு கூடுதல் பவர்னு கட்சியில பண்ணிருக்கிற மாற்றம், கட்சித் தொண்டர்களை கொந்தளிக்க வச்சிருக்கு!''சித்ரா பேசும்போதே குறுக்கிட்டாள் மித்ரா...''நம்ம ஏற்கனவே பேசுனது மாதிரிதான், அஞ்சை மூணு மாவட்டமாக்கீட்டாங்க. நாலு பேருக்கு பதவி போச்சு. மெஜாரிட்டி கம்யூனிட்டிகள் மூணுக்கும் வாய்ப்பு கொடுத்துட்டாங்க. இதுல புதுசா போட்ருக்குற ரெண்டு மாவட்டங்களுமே, வேற கட்சியில இருந்து இங்க வந்தவங்க. ஆனா சொந்தத் தொகுதியிலயே தோத்துப் போன...அதுவும் சொந்த வார்டுலயே மூணாவது இடத்துக்கு வந்தவரை, மாத்துவாங்கன்னு நினைச்சாங்க. அவருக்கு கூடுதல் பவர் கொடுத்ததுல, சிட்டி உடன்பிறப்புகள் கொந்தளிக்கிறாங்க. சோஷியல் மீடியாவுல மட்டுமே கட்சி நடத்துறார்னு தெரிஞ்சும், இப்படிப் பண்ணிட்டதா கழுவி ஊத்துறாங்க!''''நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் மித்து... இந்த மூணு பேருமே, நம்ம ஊரு 'பொறுப்பு' வி.ஐ.பி.,யோட தேர்வுதானாம். அவர் சொன்னதால, தலைமையில தட்டாமப் போட்டுட்டதாச் சொல்றாங்க. அதனால, இவுங்க மூணு பேருமே, அவரோட 'கன்ட்ரோல்'லதான் இருப்பாங்கங்கிறது தெளிவாயிருச்சு!''''மாவட்டங்கள் வேணும்னா, அவரோட செலக்சனா இருக்கலாம். ஆனா ஒன்றியச் செயலாளர் பதவியெல்லாம் கூவிக்கூவிதான் விக்கிறாங்க போலிருக்கு. அன்னூர் வடக்கு ஒன்றியத்துல முக்கியமான பொறுப்பை வாங்க, மாவட்ட நிர்வாகிகளுக்கும், சென்னையில தலைமைக்கழகத்துல இருக்கிறவுங்களுக்கும் 70 லட்ச ரூபா செலவு பண்ணுனதா, புது நிர்வாகி சொல்லிட்டுத் திரியுறாரு!''மித்ரா சொன்னதைக் கேட்ட சித்ரா, 'உண்மைதான் மித்து' என்று தனக்குத் தெரிந்த மேட்டரை விவரித்தாள்...''மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்களை முடிவு பண்ணீட்டாங்க. ஆனா சூலுார் வடக்கு ஒன்றியத்துல செயலாளர் யாருன்னு, இன்னும் முடிவு பண்ணலையாம்...ஒருத்தரு, ஓட்டுப் போடுற கட்சி நிர்வாகிகளுக்கு காசை வாரி இறைச்சிருக்காரு. இன்னொருத்தரு, 'அம்மை அப்பன்தானே உலகம்'னு சொல்லிட்டு, தலைமையில சில பேரைப் பிடிச்சு, பெட்டி கொடுத்து காயை நகர்த்துறாராம்!''''ஆளும்கட்சியில காசு இருக்கிறவுங்களுக்குதான்க்கா மரியாதை...அ.தி.மு.க.,வுல இருந்து, தி.மு.க.,வுக்கு தாவுன மகா பிரபு ஒருத்தரு, தன்னோட பணபலத்தை வச்சு, ஆளும்கட்சி முக்கியப் புள்ளிகளைச் சந்திச்சு போட்டோ எடுத்து, சோஷியல் மீடியாவுல போட்டுட்டே இருக்காரு. அதுலயும் தலைமையோட வாரிசுகிட்ட ரொம்ப நெருக்கம்னு காட்டி, அடுத்து 'நான்தான் எம்.பி.,'ன்னு சொல்லிட்டுத் திரியுறாராம்!''பேசிக் கொண்டிருந்த மித்ரா, கடந்து சென்ற அரசு வாகனத்தைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...''அக்கா! வரவர நம்ம கலெக்டராபீஸ்ல, திங்கட்கிழமை நடக்குற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம், வெறும் குறை கேட்பு கூட்டமாயிருச்சாம். எந்த பெட்டிஷனுக்குமே தீர்வு கிடைக்கிறதில்லை... காரணம் என்னன்னா, மாசத்துல முதல் வாரம் நடக்குற கூட்டத்துக்கு மட்டும்தான் துறைகளோட எச்.ஓ.டி., வர்றாங்க. மத்த வாரத்துல பேருக்கு யாரையாவது அனுப்புறாங்க!''''ஆனா எல்லாக் கூட்டத்துக்கும் கலெக்டரும், டி.ஆர்.ஓ.,வும் வர்றாங்களே...!''''அவுங்க மட்டும் வந்து என்ன பண்றது...மத்த டிபார்ட்மென்ட்கள்ல சாதாரண ஆபீசர்கள் வர்றதால, பிரச்னை, கோரிக்கை வரக்காரணமான அதிகாரிகளுக்கே அனுப்பி வச்சிர்றாங்க. அதனால அதுக்கு தீர்வு கிடைக்கிறதில்லை. மறுபடியும், மறுபடியும் பெட்டிஷன் கொடுக்க மக்கள் வர்றாங்க!''''மித்து! கார்ப்பரேஷன்ல ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்குக் கடிவாளம் போட்டதா பேசுனோமே...அந்த கடிவாளம் இப்போ ரொம்ப இறுகிடுச்சாம்...மண்டலக் கூட்டங்களுக்குக் கூட பிரஸ்சை கூப்பிடுறது இல்லை. ஏற்கனவே மெயின் மீட்டிங்ல, 10 கவுன்சிலர்களைத்தான் பேச விடுறாங்க. இதுல மண்டலக் கூட்டத்துலயும் கவுன்சிலர்கள் என்ன பேசுறாங்கன்னு தெரியலைன்னா, பிரச்னை எப்பிடித்தான் வெளிய வரும்?''''அதைப் பத்தி யாருக்கா கவலைப்படுறாங்க...வடக்கு மண்டலக் கூட்டத்துக்கு மீட்டிங் நடக்குற விஷயத்தை, கவுன்சிலர்களுக்கே காலையிலதான் சொல்லிருக்காங்க...கூட்டத்துல எல்லா கவுன்சிலரும் கொந்தளிக்க, தலைவரு சமாதானப்படுத்திருக்காரு. அதுல கவுன்சிலர் ஒருத்தரை, சூபர்வைசர் ஒருத்தரு ரொம்ப கேவலமா பேசுன ஆடியோவைப் போட்டுக் காமிச்சிருக்காங்க. எழுத்துப்பூர்வமா புகாரும் கொடுத்திருக்காங்க!''''இதெல்லாம் விடக் கொடுமை...நம்ம மாவட்டத்துல இருக்குற டவுன் பஞ்சாயத்துகள்ல நடக்குற எந்த வேலையா இருந்தாலும், 'உதவி' ஆபீசருக்கு ஆறு பர்சன்டேஜ் கமிஷன் தரணுமாம். அவுட்சோர்சிங்ல நியமிச்ச ஆளுங்க சம்பளத்துலயும், அதே அளவு கமிஷன் வாங்குறாராம். யாரு கேட்டாலும், 'ஏகப்பட்ட செலவு இருக்கு. அதை சமாளிக்க வேற வழியில்லை'ன்னு சொல்றாராம்!''''ஊருக்குள்ள ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்காருக்கா...புதுசா வந்திருக்குற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதிதான் அந்த ஆபீசர். சமீபத்துல தலைமையாசிரியர்களுக்கு, காலையில 10 மணியிலயிருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் மீட்டிங் நடந்துச்சாம். அதுல தலைமையாசிரியர்களை கேள்வியாக் கேட்டு துளைச்சு எடுத்திருக்காரு!''''பரவாயில்லையே...!''''மாணவர்கள் சரியாப்படிக்காத வகுப்புகள்ல, 'டீச்சர்ஸ் நல்லா பாடம் நடத்துறாங்கன்னு பேருக்குக் குறிப்பு எழுதாதீங்க...உண்மைய எழுதுங்க. இனிமே நான் இன்ஸ்பெக்சன் வரும்போது, பசங்க சரியா இல்லைன்னா, டீச்சர்ஸ், எச்.எம்., ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுப்பேன்னு' சொல்லிருக்காரு. அத்தனை பேரும் ஆடிப்போயிருக்காங்க!''''மித்து! இன்னொரு நல்ல தகவல்...காளப்பட்டி கிழக்கு மணியக்காரர் ஆபீஸ்ல ஒருத்தரு, தண்ணியிலயே மெதக்குறாருன்னு பேசுனோமே...அவரை பன்னிமடைக்கு மாத்தீட்டாங்க!''''சபாஷ்! அதான் சரியான இடம்...!'' என்ற மித்ரா, காபிக்கடையைப் பார்த்ததும், வண்டியை ஓரம் கட்டி, ரெண்டு பில்டர் காபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.



வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த குழியிலே தேவிகாரையும் புதுக்கோட்டை கரையும் வைத்து புதைத்து விடலாமா?

  • ellar - New Delhi,இந்தியா

    கனிமவளம், வருவாய் துறை அதிகாரிகளின் மனசாட்சி இல்லாத செயல்பாடுதான் இதன் அடிப்படை. இவ்வாறான சமுதாய சீர்கேட்டை தடுக்காமல் அந்த பதவியிலிருப்போரின் வாழ்நாள் நிம்மதி இப் பகுதி வாழ் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நாள் நிம்மதியை விட தாழ்ந்து போவது தானே 100% உறுதியான நியாயம்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement