தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட, 15 மாநிலங்களில், 93 இடங்களில், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனப்படும், பி.எப்.ஐ., அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், இம்மாதம் 22ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள், ௧௦௦ பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையை கண்டித்து, தமிழகம் உட்பட நாடு முழுதும், பி.எப்.ஐ., மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகளை குறிவைத்து, பெட்ரோல் குண்டுகளை வீசி வருகின்றனர். கேரள மாநிலத்திலும், பெரிய அளவில் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.'நேஷனல் டெவலப்மென்ட் பிரன்ட்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பு தான், ௨௦௦௬ல், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற பெயரில், புதிய அமைப்பாக உருவெடுத்தது.இதன் பின், தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜஸ்தானில் கல்வி மற்றும் சமுதாய சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்ஷா சமிதி, மணிப்பூரில் லிலிங் சமூக மன்றம், ஆந்திராவில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன.பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு, இஸ்லாமிய தனிநபர் சட்ட நீதிமன்றம், பட்டியலினம் மற்றும் முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாடு போன்றவற்றில், அக்கறை காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஆனாலும், அந்த அமைப்பின் நிர்வாகிகளது வீடுகள் மற்றும் அலுவலகங்களில், சமீபத்தில், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரும், அமலாக்கத் துறையினரும், அதிரடி சோதனை நடத்தியது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. உளவுத் துறை அளித்த தகவல்கள் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும், அதன்பின், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது, உளவுத் துறையின் சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது.
நாடு முழுதும் எத்தனையோ பொது நல அமைப்புகள், அரசியல் சார்ந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பல அமைப்புகள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களது நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன. அந்த அமைப்புகளின் மீது எல்லாம், உளவு நிறுவனங்களுக்கு சந்தேகம் வராத நிலையில், இந்த அமைப்பின் மீது மட்டும் சந்தேகம் வந்துள்ளது என்றால், அந்த சந்தேகம் தவறு என்றும், தாங்கள் தேச விரோத சக்திகள் இல்லை என்றும், குறிப்பிட்ட சமூகத்தினரின் மேம்பாடு மற்றும் அவர்களின் உரிமையை பாதுகாக்கவே செயல்பட்டு வருவதாகவும், நிரூபிக்க வேண்டியது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் நிர்வாகிகளது கடமை.
அதை விடுத்து, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது. மேலும், ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் வசிப்பிடங்கள் குறித்த விபரங்கள், இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுவதும், அமைப்பின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தவே செய்கிறது.அதற்கேற்ற வகையில், 2011 மும்பை குண்டு வெடிப்பு, 2012ல் நிகழ்ந்த புனே குண்டுவெடிப்பு மற்றும் 2013 ஐதராபாத் குண்டு வெடிப்பு போன்றவற்றிற்கும்
இந்த அமைப்புக்கு தொடர்புள்ளதாக, தேசிய புலனாய்வு அமைப்பு சுமத்திய குற்றச்சாட்டு தவறு என, இதுவரை நிரூபிக்கப்படவில்லை.'மடியில் கனமில்லை எனில், வழியில் பயமில்லை' என்பது பழமொழி. உண்மையிலேயே பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு, இஸ்லாமிய மக்களின் நலனில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறது என்றால், வன்முறைகளில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய புலனாய்வு நிறுவனங்களின் நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொண்டு, தங்கள் அமைப்பு பரிசுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஏனெனில், இந்தியா ஜனநாயக நாடு என்பதால், அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.அதே நேரத்தில், தேச விரோத சக்திகளுக்கு, அன்னிய நாடுகளின் நாசகார சக்திகளுக்கு துணை போகும் எந்த அமைப்புகளுக்கும், இந்திய மண்ணில் இடமில்லை. நாட்டின் ஒருமைப்பாடும், சகோதரத்துவமும், மத நல்லிணக்கமும் பேணி காக்கப்பட வேண்டும் என்பதில், எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
மத நல்ல இணக்கத்தை பற்றி யாரு பேசுறது பிஜேபி யா? கர்மமும் எல்லாம் உங்க கும்பலால் தான வந்தது பிள்ளாய் கிள்ளி வீட்ட தொட்டிலை ஆட்டும் வேலை வேண்டாம்