Load Image
Advertisement

காந்திய அஹிம்சை பொருளாதாரத்தை பின்பற்றலாமே!

பொருளாதாரம் - காந்தியும், குமரப்பாவும் கூறியது போல் பரவலாக்கப்பட்ட, பரந்துபட்ட பல வாழ்வாதாரங்களை தொடக்கூடிய, இதயம் நிறைந்த ஒன்றாக இருக்க முடியுமா?

காந்தி என்றதும் நம் மனதுக்கு சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், தனி மனித ஒழுக்கம், உண்மை, அமைதி என்றெல்லாம்நினைவிற்கு வரும் ஆனால், பொருளாதாரம்வருவதில்லை. காந்திய சிந்தனைகளும், விழுமியங்களையும் பேசும் போது கூட காந்திய பொருளியல் சிந்தனைகள் பேசப்படுவதில்லை. அதனால் தான் தர்மம், நியாயம், இதயம், வளங்கள், சாதாரண குடிமக்கள் என, எதற்கும் தொடர்பில்லா ஒரு அரக்க குணம் படைத்த விஷயமாகவே வெளிப்படுகிறது இன்றைய பொருளாதாரம்.

ஆரோக்கிய சீர்கேடு



பொருளாதாரம் என்பதுவெறும் உற்பத்தி, முதலீடு,கைமாற்று, சொத்து குவிப்பு என்று மட்டுமேஅடங்கிவிடுமா; இதில் எங்கு வன்முறை, அஹிம்சை என்பது வரும்?வன்முறை எப்படி பொருளியலிலும், சமூகத்திலும், அரசியலிலும் இப்படி எளிதாக வியாபித்து மனிதகுலத்தை பாதிப்பதாகிறது? அஹிம்சை என்பதை முதலில் உற்றுநோக்குவோம்... அஹிம்சை -வன்முறையற்ற என்பதை ஒரு எதிர்வினை சொல்லாகவே பார்க்கக்கூடாது; வன்முறை தான் இதற்கு எதிர்வினை.

சொல்லப்போனால் உலகின் பல மொழிகளில்,'அஹிம்சா' என்பதற்கு நேரடியான ஒரு சொல் இருப்பதில்லை. அதுவே இந்த சொல்லின், மனநிலையின், புரிதலின்ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியாகவும் பார்க்கலாம்.உலகின் எந்த மூலைக்கு சென்று அஹிம்சை -வன்முறையற்ற என்ற சொற்றொடரை பயன்படுத்தினாலே, இந்தியாவையும், காந்தியையும் உடனடியாக சம்பந்தப்படுத்துகின்றனர்.

பொருளியலில் வன்முறை எங்கு, எப்படி வந்தது?முதலீட்டு பொருளாதாரம், பேராசை, தனிமனித சொத்து குவிப்பு, மையப்படுத்துதல், பெரும் உற்பத்தி, சந்தை ஆக்கிரமிப்பு, பெரும் கொள்ளை லாபம் என விரிய விரிய, அதில் ஏற்றத்தாழ்வு, பெரும்பான்மையினர் அன்னியப் படுதல், வளங்களை அழித்தல், அழுத்தங்கள், சுரண்டுதல், சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கிய சீர்கேடு என அனைத்தும் நிறைந்ததாகிறது.

இன்று உலகளவில், அதிலும் முதலீட்டு பொருளாதாரத்தின் தலையான அமெரிக்காவிலேயும் கூட, இந்த முதலீட்டு பொருளாதாரத்தின் கேடுகளையும், தோல்வியையும் பேசத் துவங்கியுள்ளனர். அதன் பெரும் வீச்சும்,வீழ்ச்சியும், அரக்க குணங்களும், அதன் கைகள் அரசியல் முதல் உடல் நலம் வரை எல்லா இடத்திலும் ஆக்கிரமித்து அழிப்பதை பார்த்து பேச துவங்கியுள்ளனர்.

அதிலும் இந்தியாவையும், காந்தியையும், அஹிம்சை பொருளாதாரமும், பரவலாக்கப் பட்ட பரந்து விரிந்து பல சிறிய தொழில்களை இணைக்குமொரு பொருளியலையே தீர்வாகவும் பார்க்கின்றனர்.அது சரி, ஒரு சிலரின்வெறிச்செயலை, குவிப்பை, அரசியல் தலையிடலை பொதுவாக வன்முறை பொருளாதாரம் என்று கூற முடியுமா?

இதில் வன்முறை எங்கு வருகிறது என்று பார்ப்போம்.நம் இன்றைய மைய பொருளாதாரத்தில் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எப்போது உயர்கிறது என்று பார்த்தால், மரத்தை வெட்டினால், காட்டை அழித்தால், சுற்றுச்சூழலை கண்மண் தெரியாமல் பாதித்தால், வெள்ளம் புயல் போன்ற பேரிடர்கள் வந்தால் அது உயர்கிறது.

வன்முறை



மரம் நட்டால், காடுகளை பேணினால், இதயத்துடன் செயல்பட்டால், அது இந்த ஜி.டி.பி.,யை அசைப்பதில்லை; என்ன ஒரு பரிணாமம்!உலகிலேயே, இயற்கை மற்றும் மனித வளங்கள் நிறைந்த நாடுகள் என்றால் ஆப்பிரிக்க நாடுகளே முதலில் நம் மனதில் நிற்கும். ஆனால், அவை தான் மிகவும் ஏழ்மையான நாடுகளாக விளங்குகின்றன.இந்தியாவிலும் பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்ற இயற்கை வளம் நிரம்பிய மாநிலங்களே ஏழைகளாக உள்ளன.

ஆனால் அவற்றை சுரண்டுவது பெரும் கம்பெனிகளும், நாடுகளும், பெரும் செல்வந்தர்களும். அது எப்படி?விவசாய உற்பத்தியில் கொடிய ரசாயனங்களின் உபயோகம் முதல், பதப்படுத்துதல், 'பேக்கேஜிங்' என எல்லாவற்றிலும் வன்முறை. காட்டை அழித்து, அதாவது நல்ல காடுகளையும், புல்லினங்களையும் அழித்து, ஓரினப்பயிராக தேயிலையை வளர்த்து, அதற்கு கூலிக்கு, எங்கிருந்தோ மிகக்கம்மி கூலிக்கு, கொடிய சூழலில் ஆட்களை அமர்த்தி, சிறு, குறு விவசாயிகளை அழித்து, அப்புறப்படுத்தி, பெரும் ஆலைகளை உருவாக்கி, நம் அனைவரின் வீட்டிற்கும் 10 முதல், 13 வகையான கொடிய ரசாயனங்களை கொண்டு உருவாக்கப்பட்டு, அழகிய நெகிழி பொட்டலங்களில் அடைத்து, பெரும் காசு கொடுத்து விளம்பரங்கள் செய்து... என்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல்.இப்படி பற்பசை, புட்டிகளில் அடைத்த பானங்கள் என எல்லாமும் நம் மண், நீர், மனித வளங்களை அழித்து, கெடுத்து எங்கோ ஓரிருவருக்கு மட்டும் சொத்தை குவிக்குமொரு ஆயுதமாக விளங்குவதை வன்முறை என்று தானே பார்க்க வேண்டும்?

உணவு, மதிப்பு கூட்டிய பொருட்கள், ஆடைகள், காலணிகள், ஆலைகள், என எதைப் பார்த்தாலும் பல பிரச்னைகள்.இதற்கு மாற்று என்ன?மண்ணை குடைந்து, நிலத்தடி நீரை உறிஞ்சி, அதில் சில கொடிய ரசாயனங்களை சேர்த்து பானமாக கொடுக்க, ஒரு சில இடங்களின் நீர்நிலை முதல் சுற்றுச்சூழலை பாதித்து பெரும் லாபம் கண்டு, அதையும் இங்கு செலவிடாமல் வேறு எங்கோ சென்று குவிப்பது. இங்கே எளிதாக கிடைக்கும் எலுமிச்சை, பழ ரசங்கள், இளநீர் என ஆரோக்கியமான, மனிதர், சுற்றுச்சூழல்,அண்மை பொருளாதாரம்எல்லாவற்றிற்கும் நன்மை பயக்குமொரு பொருளியலா?

70 சதவீதம் பேர்



நம் நாட்டில் விளையும் பருத்தியில் 95 சதவீதம் ஒரே கம்பெனியின் விதை. அது 5 சதவீத நிலப்பரப்பில் மட்டுமே விளைவிக்கப்பட்டாலும், நாட்டில் விற்பனையாகும் மொத்த பூச்சிக்கொல்லியில் 55 சதவீதத்தை உபயோகித்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தியாக அது உள்ளது.இதில் மற்றொரு விஷயமும் பார்க்க வேண்டும். நம் நட்டின் விவசாய தற்கொலைகளில் 70 சதவீதம் பேர் பருத்தி விவசாயிகளே. ஒரு பெரும் ஆலை நிறுவப்பட்டு, பல உள்ளூர் வாழ்வாதாரங்களை அழித்து, ஆடைகளாக கொண்டு வருவது அல்லது இயற்கை முறையில் நாட்டு பருத்தியை விளைவித்து, கையால் அல்லது சிறு உபகரணங்களால் அல்லது பெண்களால் நுால் நுாற்று, கைத்தறியில் நெசவு செய்து, இயற்கை சாயம் பூசி, கைகளால், மனிதர்களால் தைக்கப்பட்டு வரும் ஆடைகள்.ஆம். காந்தி பெரிதும் ஊக்குவித்த காதி கதர் ஆடைகள். அதாவது ஒரு பொத்தானை தட்டி, ஒரு பெரும் ஆலையிலிருந்து நுாற்றுக்கணக்கான சட்டைகள் வருவது உயர்வா அல்லது ஒரு சட்டைக்கு பின்னால் 10 நபர்களின் உழைப்பும், வாழ்வாதாரமும் இருப்பது மேன்மையா?

முக்கியத்துவம்



அதனால் தான் காந்தியும், குமரப்பாவும், இப்படி எளிமையாக, எளிதாக, அண்மையில் நம் மக்களின் கைகளால் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த முதலீடு, ஊரக வளர்ச்சி.அண்மை பொருளாதாரம், பரவலாக்கப்பட்டு, பலரின் கையில் பிரித்து கொடுக்கக்கூடிய, பெரிதாக இயற்கை வளங்களை சூறையாடாத, அழிவு ஏற்படுத்தாத, சுற்றுச்சூழலை பாதிக்காத, பெரும் மாசு உண்டாக்காத சிறு தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

இப்படி வன்முறையற்ற பரந்துபட்ட இயற்கையையும், மனித வளத்தையும் போற்றும் பொருளாதாரமே அஹிம்சா பொருளாதாரம்.இன்றைய பெரும் அரக்க குணம் கொண்ட முதலீட்டு பொருளாதாரத்திற்கு மாற்று, நம் நாட்டிலிருந்து தான், காந்திய வழியில், வன்முறை யற்ற அஹிம்சா பொருளாதாரம்தான் தீர்வாக இருக்க முடியும்.இன்றைய பிரதான முதலீட்டு பொருளியலுக்கு இந்த பூவுலகை அழிப்பதைப் பற்றியோ, மாசு ஏற்படுத்துவதைப் பற்றியோ, அறமின்றி தொடர்வது பற்றியோ, மக்களையும், சூழலையும் சுரண்டுவதைப் பற்றியோ, ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ கவலையே இல்லை.

மேலாண்மை பாடங்களிலும் கூட, லாபத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் ஊட்டப்படுகிறது. அப்படியென்றால், அழிவும்,இதயமற்ற, சுரண்டலை நிலைநிறுத்தும் பொருளியலை தான் நாம் பொருளாதாரமாக கருதி முன்னிறுத்த வேண்டுமா?ஆக, பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் பணப்பெருக்கத்துடனும், பெரும்பாலான சராசரி குடிமக்கள் மேலும் மேலும் சுரண்டப்பட்டு, உழைப்பை மட்டுமே கொடுக்கும், ஏதும் இல்லாத ஏழைகளாகவே இருக்குமாறு திகழும் பொருளியல் பற்றியும், அதனால் ஏற்படும் இந்த பெரிய விரிசலையும், கேள்விகள் கேட்டு சரி செய்ய வேண்டாமா?இந்த கட்டற்ற பொருளாதாரத்தை, வன்முறையை பற்றி பேசி சரிசெய்ய வேண்டாமா?

மாபெரும் கண்காட்சி



நேற்று முதல் வரும் 26ம் தேதி வரை, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில், அஹிம்சை பொருளாதார கூட்டமைப்பு சார்பில் நடக்க இருக்கும் பெரும் நிகழ்ச்சியில் இயற்கை விவசாயிகள், மகளிர் குழுக்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், பழங்குடியின உற்பத்தியாளர்கள்.சமூகம் சார்ந்த மற்றும்சுற்றுச்சூழல் நட்பு நிறுவன மாதிரிகள், வாழ்வாதாரத் திட்டங்களில் பணி புரியும் சிறிய அளவிலான தயாரிப்பாளர்குழுக்கள், சமூக அமைப்புகள் என எல்லாரும் திரண்டு, 'அஹிம்சா சந்தை' எனும் மாபெரும் கண்காட்சியை நிறுவுகின்றனர்.

அதில் பல புகழ் பெற்ற பேச்சாளர்கள், பொருளியல் மற்றும் காந்திய விழுமிய வல்லுனர்கள், அரசு தரப்பினர் என பலரும் பங்கேற்கின்றனர். அரசியலும், சமூக அக்கறையும், அறமும், பொருளாதாரமும் சேர்த்தே பார்த்தனர் காந்தியும், குமரப்பாவும். இதில் கலந்துரையாடல்கள், பயிற்சி பட்டறைகள், கலை நிகழ்ச்சிகள் என எல்லாருக்கும், முக்கியமாக இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இதில் பங்கேற்று அறவழியில், நீதியும், நேர்மையும் நிறைந்த, பல வாழ்வாதாரங்களை ஆதரிக்கும் அஹிம்சா சந்தையை எல்லாரும் ஆதரிப்போம். நாம் இனி நுகரும் ஒவ்வொரு பொருளையும் சீர் துாக்கி நுகர்ந்தாலே, நம் அண்மை பொருளாதாரம் வலுப்பெறும்!

-- அனந்து,

ஆலோசகர், அஹிம்சை பொருளாதார கூட்டமைப்பு

தொடர்புக்கு: இ - மெயில்: organicananthoo@gmail.com@@



வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    சரியா சொன்னீங்க அணந்து சார் உங்க நண்பர் சஞ்சீவி எப்படி இருக்கிறார் ? அவரின் பல கண்டுபிடிப்புகள் இப்போது உபயோகித்து கொண்டுள்ளேன்

  • K jayan - singapore,சிங்கப்பூர்

    அருமை , அருமை .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement