Load Image
Advertisement

நல்லது-கெட்டது... எதைப் பொறுத்தது?

தங்களுக்கு பிடித்தமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து செயல் செய்பவர்கள் ஆன்மீக பாதையில் செல்ல ஏன் வாய்ப்பில்லை என்பதை தெளிவுபடுத்தும் சத்குரு, 'நான் நல்லவன்; அவன் கெட்டவன்' என்ற மனநிலையுடன் இருப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதையும் இங்கே புரியவைக்கிறார்!

சத்குரு:மனிதர்கள் எப்போதும் தாங்கள் நல்லவர்கள் என்றும், மற்றவர்களெல்லாம் தீயவர்கள் என்றும் நம்புகிறார்கள். அப்படித்தான் இந்த உலகில் அவர்களால் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது. இமயமலையின் பாதையில் நாம் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அதை இருவழிச் சாலையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நிலச்சரிவின் காரணமாகவும், சாலைகளைத் தாண்டி வாகனங்கள் விழுவதாலும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வளைவுகளில் பயணம் செய்வது ஆபத்தானது. ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் அதோகதி தான். இங்கே நீங்கள் பயணம் செய்கிறபோது ஓட்டுநருக்கு மிகப் பெரிய பொறுப்பைத் தருகிறீர்கள். அவர் ஒரு சிறு தவறு செய்தாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடும். ஒவ்வோர் ஆண்டும் பலரும் அத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள். சாலையோரங்களில் உலோகக் குவியல் ஏதாவது உங்கள் கண்ணில் பட்டால், அது நொறுங்கிப்போன வாகனமாகத் தான் இருக்கும்.

எனவே அதனை இப்போது இருவழிச்சாலை ஆக்குகிறார்கள். இது நல்லதா? தீயதா? உங்களைப் போன்றவர்கள் இன்னும் வசதியாகப் பயணம் செய்யலாம், ஆபத்து குறைவு. எனவே இது நல்லது என்று நினைப்பீர்கள். இன்று பலரும் சாலைகள் அமைப்பதையும், மலைகளின் வடிவத்தைக் கெடுப்பதையும், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகளுக்கு இடையூறு தருவதையும் எதிர்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை இது தீமையான செயல். அதிகாரத்தில் இருப்பவர்களோ, பெரும்பான்மையானவர்களோ, ஏதோவொன்றை நல்லது என்று நினைப்பதாலேயே அது நல்லதாகிவிடாது. உதாரணத்திற்கு, ஒரு பயங்கரவாதி செய்பவை நன்மையானவையா? தீமையானவையா? அது தீமையானது என்று நீங்கள் சொல்லலாம்.

அதேநேரம் எது நல்லது, எது தீயது என்பதெல்லாம் நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள் என்பதைச் சார்ந்தது. இந்தியா நல்லதா? பாகிஸ்தான் நல்லதா? என்று கேட்டால் நீங்கள் எல்லைக் கோட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே பதில் அமையும். இந்தப் பகுதியில் இருக்கிறீர்கள், எனவே இந்தியா நல்லது என்று கருதுகிறீர்கள். பாகிஸ்தானியர்கள் தீயவர்கள் என்று கருதுகிறீர்கள். அடுத்த பகுதியில் இருந்தால், அந்தப் பக்கத்திற்கு ஆதரவாக வாதிட்டுக் கொண்டிருப்பீர்கள். நல்லது, தீயது என்பதெல்லாம் உங்கள் அடையாளங்களைப் பொறுத்தவை. அவற்றைக் கடந்து உங்களால் சிந்திக்க முடியவில்லை.

எண்ணங்கள், அடையாளங்களின் எல்லைக்கு உட்பட்டவை. அடையாளங்கள் எப்போதும் குறுகியவை. எனவே உங்கள் எண்ணங்களும் குறுகியவை. இந்தக் குறுகிய எல்லையில் இருந்து கொண்டு எது நல்லது, எது தீயது என்று முடிவு செய்கிற அபத்தத்தில் ஏன் இறங்குகிறீர்கள். ஒன்றைத் தீயது என்று சொன்ன மாத்திரத்தில் அது உங்களுக்குப் பிடிக்காமல் போகும். இவர் ஒரு தீய மனிதர், ஆனாலும் பரவாயில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா என்ன? மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால் அவர் உங்களை நெருங்க, நெருங்க அது வெறுப்பாக வளர்ந்துவிடும். எனவே ஒன்று நல்லது, மற்றது தீயது என்கிற அடையாளத்திற்குள் சிக்கிக் கொள்கிறபோது உலகத்தைப் பிளவுபடுத்துகிறீர்கள்.

என்னிடம் யாராவது வந்து நான் ஆன்மீகப் பாதையில் நடையிட வேண்டுமென்று கேட்கிறார்கள். 'சரி, ஒரு வாரம் இங்கே இருங்கள். என்ன செய்யலாமென்று பார்க்கிறேன்' என்றால், 'இல்லை. வருகிற சனிக்கிழமை என் உறவினரின் பிறந்தநாள், நான் போக வேண்டும். மூன்று நாட்களுக்குத்தான் இங்கு இருக்க முடியும்' என்று சொல்கிறார். நான் 'சரி' என்று சொல்லிவிட்டு, 'அப்படியானால், இந்த ஆன்மீகப் பாதையில் எவ்வளவுகாலம் நடையிட விரும்புகிறீர்கள்?' என்று கேட்டால் 'கடைசிவரை' என்கிறார். 'மூன்று நாட்களிலேயே கடைசிவரை நடையிடப் போகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, 'சில விஷயங்களைச் செய்யுங்கள். பிறகு பார்க்கலாம்' என்று சொன்னால், 'இல்லை, இவையெல்லாம் எனக்குப் பிடிப்பதில்லை' என்று சொல்கிறார். உடனே நான் அவரிடம், 'உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமென்று ஒரு பட்டியல் கொடுங்கள், அவற்றை மட்டுமே செய்யலாம் என்றால், அவர் உட்கார்ந்து யோசித்து, யோசித்து ஒரு ஐந்தாறு விஷயங்களை எழுதிக் கொண்டு வருகிறார். இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில், ஐந்தாறு விஷயங்கள்தான் உங்களுக்குப் பிடித்திருக்கின்றன. இவற்றை வைத்துக்கொண்டு நீங்கள் ஆன்மீகப் பாதையில் எப்படி நடையிட முடியும்? எங்கே வாய்ப்பு?
நீங்கள் உங்களுக்குள் நல்லது, தீயது என்று பகுக்கத் துவங்குகிறபோது, உலகத்தைப் பிளவுபடுத்தத் துவங்குகிறீர்கள். பிளவுப்படுத்தத் துவங்குகிறபோது, உங்களுக்குள் ஏற்பதற்கு ஏது வாய்ப்பு? யோகாவுக்கு ஏது வழி? பிரபஞ்சத்தோடு ஒன்றாவதற்கு ஏது வழி? உண்மையைக் கண்டுபிடிக்க ஏது சாத்தியக் கூறு? உங்களுடைய பிரிவினைகள் எல்லாம், உங்கள் முட்டாள்தனத்தால் வருபவை. அவற்றுக்கும், நிதர்சனத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உங்கள் அகங்காரத்தின் தேவைக்கேற்பத்தான் நல்லதையும், தீயதையும் நீங்கள் நிர்ணயிக்கிறீர்கள். இதன்படி போனால் வாழ்வின் இருவேறு இயல்புகளுக்குள் சிக்கிப் போவீர்கள். பிரபஞ்சத்தின் இருப்பையே நீங்கள் பிளவு படுத்துகிறீர்கள். அந்த நிலையில் உங்களுக்குள் ஆன்மீகம் எழுவதற்கு வாய்ப்பில்லை.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement