கடந்த ஜூலை 17-ம் தேதி நடந்த, மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், செப்டம்பர் 7-ம் தேதி வெளியானது. தமிழகத்தைப் பொறுத்த வரை தேர்வு எழுதிய 1,32,167 பேரில், 51.3 சதவீதம் அதாவது 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு, 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021-ம் ஆண்டில் 54.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஆண்டுக்கு மூன்று சதவீதம், நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது.
இதனால், நீட் தேர்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 28வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.தேசிய அளவில் முதல் 50 இடங்களைப் பிடித்தவர்களில் இருவர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில், 35 சதவீதம் அதாவது 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் தான், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.நீட் தேர்வில், மெல்ல மெல்ல தலைநிமிர்ந்த தமிழகம், கடந்த இரண்டு ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு, தி.மு.க., அரசின் திட்டமிட்ட சதியே காரணம்.
மத்தியில் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, தி.மு.க., வைச் சேர்ந்த காந்திசெல்வன் தான், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.அரசியல் ஆதாயத்திற்காக, பிள்ளையை கிள்ளிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல, தொட்டிலையும் ஆட்டுவது தி.மு.க.,வின் பாரம்பரியம். நீட் தேர்விலும் தி.மு.க., அதையேதான் செய்து வருகிறது.
மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது, நீட் தேர்வை கொண்டு வந்து விட்டு, இப்போது எதிர்க்கிறது.
ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல, நீட் தேர்வை தி.மு.க., ரத்து செய்யவில்லை. இதனால், மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தி.மு.க., அம்பலப்பட்டு நிற்கிறது. மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்க, அ.தி.மு.க., ஆட்சியில் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை முடக்கியது. சில இடங்களில் பெயரளவுக்கு மட்டுமே நடத்தி, மாணவர்களின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது.
பல மாவட்டங்களில் குறிப்பாக நான் சட்டசபை உறுப்பினராக உள்ள கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், பல தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த முயற்சியில், நீட் பயிற்சி மையங்கள் நடத்தியதையும், தி.மு.க., அரசு மிரட்டி தடுத்தது. இதை, கடந்த ஏப்ரல் மாதமே நான்
சுட்டிக் காட்டியிருந்தேன். தி.மு.க., அரசின் இந்த சதியால், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்ந்து விடும் என அப்போதே எச்சரித்திருந்தேன்.நான் அச்சப்பட்டது போல நடந்து விட்டது.
நாடு முழுதும் 20 லட்சம் மாணவர்கள், மருத்துவம் படிக்க போட்டி போடுகின்றனர். ஆனால், ஒரு லட்சம் மருத்துவ இடங்களே உள்ளன. எனவே, 20 பேரில், தகுதி வாய்ந்த ஒருவரை தேர்வு செய்ய, ஒரு தேர்வு முறை தேவைப்படுகிறது. அதற்காகவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.நீட் தேர்வால் இட ஒதுக்கீட்டு முறையில் எந்த மாற்றமும் இல்லை. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதும், ஒரு சில ஆண்டுகள் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆங்கிலம், ஹிந்தி மட்டுமே தேர்வு மொழியாக இருந்தது, 12 ஆண்டுகளாக தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்படாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.
இதை உணர்ந்த மத்திய பா.ஜ., அரசு, நீட் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று வாய்ப்பு வழங்கியது.
எனவே, நீட் தேர்வில் மொழியும் ஒரு தடையாக இல்லை.கடந்த அ.தி.மு.க., அரசு, மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. இதனால், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்தது.
'ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லுாரி' என்ற பிரதமர் மோடியின் திட்டத்தின்படி, தமிழகத்திற்கு ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த கல்லுாரிகள் அமைப்பதற்கான மொத்த நிதியில், 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த 11 கல்லுாரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.இது தவிர ஆறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த 17 புதிய மருத்துவ கல்லுாரி களால், அகில இந்திய அளவில் 12 சதவீத மருத்துவ இடங்களை தமிழகம் பெறுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால், கூடுதல் மருத்துவ இடங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்.எந்த அடிப்படையில் பார்த்தாலும் நீட் தேர்வு என்பது தமிழக மாணவர்களுக்கு பலனளிக்கும் ஒன்றே.உண்மைகளை உணர்ந்து, தங்களது அரசியல் நலன்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை, தி.மு.க., அரசு இனியாவது நிறுத்தி கொள்ள வேண்டும்.
வானதி சீனிவாசன் ,கோவை சட்டசபை ,உறுப்பினர், பா.ஜ.,
எக்கோவ் இன்னிக்கு ஒனக்கு வேற அன்ஜடா அவனுங்க கொடுக்கலியா....