Load Image
Advertisement

ஒழுக்கநெறிகள் ஏன் வேலை செய்யாது?

இளைய தலைமுறையினரை சிறப்பான சமுதாயமாக மாற்றுவதற்கு பலரும் அறிவுகளையும் ஒழுக்கநெறிகளையும் போதிக்க முனைகிறார்கள். இதெல்லாம் வேலை செய்யாது என்பதை சுட்டிக்காட்டும் சத்குரு, அவர்களிடம் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அம்சம் என்ன என்பதையும் புரியவைக்கிறார்!

Question:இன்றைய காலகட்டத்தில், நம் இளைய தலைமுறையை மேற்கத்திய கலாச்சாரங்கள் பெருமளவில் கவர்கின்றன. இதனால் அவர்களின் எண்ணங்கள் மாறுவதோடு, குடும்பம், பெரியவர்கள், ஏன் பொதுவாகவே மனிதர்களிடத்தும், பிற உயிர்களிடத்தும் ஒரு அலட்சியம் தோன்றுகிறது. அதோடு மரியாதை, நன்னெறிகள், ஒழுக்கம், மனிதநேயம், கட்டுப்பாடு என எல்லாமே இவர்களிடம் குறைந்தும் போகிறது. இந்த படுகுழியில் இருந்து இவர்களை மீட்க ஏதேனும் வழிகள் உண்டா?

சத்குரு:

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் கலாச்சாரத்தில் ஒழுக்கம், நன்னெறிகள் என்று எதுவும் கிடையாது. இங்கு எப்போதுமே ஒழுக்கத்தையும், நன்னெறிகளையும் நாம் வலியுறுத்தியதில்லை. மேற்கத்திய சமூகங்களில்தான் மிகத் தீவிரமாக அவற்றை வலியுறுத்துவார்கள். அப்படி வலியுறுத்திவிட்டு, பிறகு அவர்களே அதை உடைத்தெறியவும் செய்வார்கள். அது வேறு விஷயம். ஆனால் அவர்கள் சமூகம் என்று பார்த்தால், அங்கே ஒழுக்கங்கள் நடைமுறையில் வலியுறுத்தப்படுகின்றன.

இந்த நாட்டிலோ, இன்று மட்டுமல்ல, என்றுமே ஒழுக்கங்கள் ஒரு பெரிய விஷயமாய் இருந்ததில்லை. ஒழுக்கங்களையும், நெறிமுறைகளையும் விழிப்புணர்வு பெறுவதற்கான ஒரு தடையாகவே நாம் பாவித்தோம். நம் வாழ்வையும், நம் சமூகத்தையும், நன்னெறிகள், நல்லொழுக்கங்கள் கொண்டு நடத்திக் கொள்வதில் நமக்கு விருப்பம் இருந்ததில்லை.
காரணம், 'ஒழுக்கம்' என்பதைப் பின்பற்றும்போது, மீண்டும் மீண்டும் நீங்கள் ஒரே விதத்தில்தான் செயல்பட முடியும். திரும்பத் திரும்ப ஒன்றையே செய்து கொண்டிருந்தால், ஒருவித சுழற்சியில் சிக்கிக் கொண்டீர்கள் என்று பொருள். சுழற்சியில் சிக்கிக் கொள்பவர்கள் எங்குமே சென்றடைய முடியாது. அதனால் இக்கலாச்சாரத்தில், ஒழுக்கங்களுக்கு பதிலாக, மனித விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியை துணிவுடன் மேற்கொண்டோம்.

பெரும்பாலான மக்கள், ஒழுக்க நெறிகளில் கவனம் கொள்ளாமல், விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இது ஒரு அபாயமான பாதை. ஆனால் மனித இனத்தை சரியாக வழிநடத்த இது ஒன்றுதான் சரியான வழி. ஒழுக்கங்களையும் நன்னெறிகளையும் மக்கள் மீது திணித்தால், தவறுகள் செய்வார்கள், பின்னர், குற்றவுணர்ச்சியில் உழல்வார்கள். பிறகு இதிலிருந்து தப்பிக்க, கோவில்களில் காணிக்கை செலுத்தி, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் அதே தவற்றைச் செய்வார்கள். இன்று அதுதானே நடந்து கொண்டிருக்கிறது? இன்று 'மதம்' என்பது பெரும்பாலும் இப்படித்தான் ஆகிவிட்டது.

அமெரிக்காவில், 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' என்று ஒரு விமான நிறுவனம் இருக்கிறது. ஒருமுறை அமெரிக்காவின் அலபாமா மாவட்டத்தின் மீது இந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது, விமானி, 'நம் விமானத்தின் இஞ்சினில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. முடிந்தவரை பழுதில்லாமல் நிலத்தில் இறங்கிட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் இப்போது மிகக் குறைவாக இருக்கிறது. அதனால் எல்லோரும் அவரவர் இருக்கையில் இறுக்கமாக 'ஸீட் பெல்ட்' அணிந்துகொண்டு உங்களுக்குத் தெரிந்த வகையில் கடவுளைப் பிரார்த்தியுங்கள்' என்றார். உடனே ஒருவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து, தன் தொப்பியை திருவோடாக பயன்படுத்தி எல்லோரிடமும் காணிக்கை கேட்க முனைந்தார்.


பலருக்கு இன்று மதம் என்றாலே, காணிக்கை கொடுத்து மன்னிப்பு பெறுவது என்றாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், மிகக் கடுமையாக வலியுறுத்தப்படும் ஒழுக்கங்களும், நெறிகளும்தான். இவை வலியுறுத்தப்படும்போது, மனிதர்கள் இதை எப்படியாவது மீறி விடுவர். மீறிவிட்டு, அதன்பின் குற்றவுணர்ச்சியில் உழல்வர். குற்றவுணர்ச்சியுடன் வாழமுடியாது என்பதால், அச்சுமையை இறக்குவதற்கு வழி தேவை. அந்த வழி, ஆலய உண்டியலில் ஏதேனும் காசை காணிக்கையாகச் செலுத்தி மன்னிப்பைப் பெறுவது என்றாகிவிட்டது. சில ஆலயங்களில் இதை வெளிப்படையாக எழுதியும் வைத்திருப்பர், 'இந்தப் பாவம் செய்தால் இத்தனை டாலர்களை காணிக்கையாக செலுத்த வேண்டும்' என்று.

ஒழுக்கங்களை வகுத்து, 'இதை செய்யாதே, அதை செய்யாதே' என்று வலியுறுத்தினால், மக்கள் அதைத்தான் முதலில் செய்வர். இதுதான் மனிதமனத்தின் குணம். உங்கள் மனத்திடம், 'இதை செய்யாதே' என்று சொல்லிப் பாருங்கள், அது அதைத்தான் முதலில் செய்யும்.

அதனால்தான் நம் நாட்டில் 'இதை செய்யாதே, அதை செய்யாதே' என்ற கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று யாரும் உங்களுக்கு அறிவுரை வழங்குவதில்லை. நீங்கள் எந்த நிலையில் இருக்கவேண்டும் என்பதை மட்டுமே சொன்னோம். இங்கு மனிதனின் செயல்களை விட அவன் இருக்கும் நிலைதான் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. அதை போதிப்பதுதான் இன்னும் கடினமான வேலை. 'செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை' என்ற பட்டியலை உருவாக்குவது மிக எளிது. ஆனால் விழிப்புணர்வை உண்டாக்குவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு நிறைய வேலை தேவைப்படுகிறது. அதோடு அது பரவலாக பலருக்கும் அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காற்றோடு கலந்தது போல், அது எப்போதும் உங்களை ஊடுருவிக் கொண்டிருக்கும்.


பெற்றோர்கள், அக்கம் பக்கத்தினர், சுற்றம் என எல்லோரும் விழிப்புணர்வுடன் இருந்தால், குழந்தைகளும் அதேபோல் விழிப்புணர்வோடு வளர்வார்கள். பிறகு இவ்வழி சுலபமாகிவிடும். ஆனால் இன்று மக்களின் விழிப்புணர்வை உயர்த்துவதற்குத் தேவையான வேலைகள் செய்யப்படாத சூழ்நிலை நிலவுகிறது. அதேநேரத்தில், கண்டிப்பான ஒழுக்கநெறிகளும் நம்மிடம் இல்லை. அதனால் நமக்கு அந்நியமான மேற்கத்திய ஒழுக்கநெறிகளை நாம் கடைப்பிடிக்க முயல்கிறோம். இது நமக்கு வேலை செய்யாது. இது அவர்களுக்கே கூட வேலை செய்யவில்லை. நமக்கு எப்படி வேலை செய்யும்?

ஒழுக்கங்களும் நன்னெறிகளும் எப்போதும் நமக்கல்ல, மற்றவர்களுக்கு அறிவுரை செய்வதற்குத்தான் நன்றாக இருக்கும். ஆனால் இதுவே ஒருவர் விழிப்புணர்வோடு இருந்தால், 'இதை செய், அதைச் செய்யாதே' என்ற ஒழுக்கக் கோட்பாடுகள் தேவைப்படாது. சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் நீங்களே செயல்படுவீர்கள். இதுதான் இவ்விரண்டு முறைகளுக்குமான அடிப்படை வித்தியாசம். உலகின் மற்ற பகுதிகளில் எல்லாம், எது சரி, எது தவறு என்று உங்களுக்குக் கற்பிக்க முயல்வார்கள். ஆனால் நம் கலாச்சாரமோ, எது சரி, எது தவறு என்று வழங்கியது இல்லை. இன்றைய சூழலுக்கு எது ஏற்றது என்று மட்டுமே உங்களுக்குக் காண்பித்தோம். இது நாளைக்கே கூட மாறிவிடலாம்.

இந்நாட்டில் கடவுள் என்று நாம் வணங்கும் ராமர், கிருஷ்ணர், சிவன், ஏன் இன்னும் பிறரையும் நீங்கள் உங்கள் ஒழுக்க நெறிகளுக்குள் வைத்துப்பார்த்தால், அவர்களை நீங்கள் 'ஒழுக்கமானவர்கள்' என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. அப்படி இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணியதும் கிடையாது. ஆனால் அவர்கள் விழிப்புணர்வின் உச்சத்தில் இருந்தவர்கள்.

உங்களுக்கே சொந்தமான ஒன்று நடக்கவேண்டும் என்றால் - இந்த நாட்டுக்கு சொந்தமானது அல்ல - உங்கள் உயிருக்கே சொந்தமானது நடக்கவேண்டும் என்றால் 'இதைச் செய்யக்கூடாது, அதைச் செய்யக்கூடாது' என்பது போன்ற ஒழுக்கவிதிகளை வைத்துக்கொள்ளக் கூடாது. எப்படியும் இதுபோன்ற நெறிமுறைகளை, வாய்ப்பு கிடைக்கும் முதல் தருணத்திலேயே உடைத்துப்போட தயாராக இருப்பீர்கள். அதனால் நமது உயிருக்கு நெருக்கமான, மனித விழிப்புணர்வு நிகழத் தேவையான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். இது ஒன்று தான் நமக்கு இருக்கும் ஒரே இன்ஸ்யூரன்ஸ். நிலையான இன்ஸ்யூரன்ஸ்.வாசகர் கருத்து (4)

  • DVRR - Kolkata,இந்தியா

    1) விழிப்புணர்வு - குழந்தாய் விழிப்புணர்வு என்றால் என்ன???ஒழுக்கமானது தவறானது என்று பிரித்துணர்வும் அறிவு தான் விழிப்புணர்வு ஒழுக்கம் அவசியமில்லை???ஆனால் விழிப்புணரவு அவசியம்???இந்த மாதிரி குழப்ப ஆரம்பித்து விட்டால் வேறு வினையே வேண்டாம் சத்குரு???? 2) மதம் என்றாலே, காணிக்கை கொடுத்து மன்னிப்பு பெறுவது - இது சரியான வாக்கியம் இது இப்போது மிகுந்த அளவில் நடைமுறையில் உள்ளது/////

  • Anand - madurai,இந்தியா

    ரொம்ப ஒழுக்கமானவர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement