Load Image
Advertisement

டென்ஷன் இல்லாமல் வேலை செய்வது எப்படி?

காலை எட்டரை மணி வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. அப்புறம்தான் ஆரம்பிக்கிறது எல்லா டென்ஷனும்! குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, மனைவியை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு அலுவலகத்திற்கு வந்தால், அங்கேயும் ஆயிரம் பிரச்சனைகள். நான் திட்டமிட்டபடி செயல்படப் பார்த்தாலும், மற்றவர்கள் அதைக் குழப்புகிறார்களே, டென்ஷன் இல்லாமல் எப்படிச் செயலாற்ற முடியும்?


Question:காலை எட்டரை மணி வரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. அப்புறம்தான் ஆரம்பிக்கிறது எல்லா டென்ஷனும்! குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி, மனைவியை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு அலுவலகத்திற்கு வந்தால், அங்கேயும் ஆயிரம் பிரச்சனைகள். நான் திட்டமிட்டபடி செயல்படப் பார்த்தாலும், மற்றவர்கள் அதைக் குழப்புகிறார்களே, டென்ஷன் இல்லாமல் எப்படிச் செயலாற்ற முடியும்?

சத்குரு:
காட்டு வழியில் தன் சீடனுடன் நடந்து கொண்டு இருந்தார் ஜென் குரு. சீடனிடம் அங்கிருந்த ஒரு செடியைக் காட்டினார்.

"இந்தச் செடியைப் பற்றிச் சொல்!"

"இதன் பெயர் பல்லடோனா. இதன் இலைகள் விஷம் மிக்கவை. உயிரைப் பறிக்கக்கூடியவை!"

"இலைகள் வேடிக்கைப் பார்த்தால் ஆபத்தில்லை. சுவைத்தால்தான் உயிர் போகும். பிரச்சனைகளும் அப்படித்தான். தேவையான கவனம் கொடுத்தால் போதும். ஆபத்தின்றி தீர்ந்துபோகும். தேவையற்ற முக்கியத்துவம் கொடுத்து, இழுத்து மண்டையில் போட்டுக் கொண்டால், குடைந்து உயிரை எடுத்துவிடும்" என்றார் குரு.
உங்கள் பிரச்சனை, குடும்பம் அல்ல; நிறுவனம் அல்ல. பிரச்சனையே நீங்கள்தான். வெளியே இருப்பதைச் சமாளிப்பதாக நினைத்து, உங்களை நீங்கள் மிகவும் திருகிக் கொண்டு விடுகிறீர்கள்.

கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளங்கைகளை மேல் முகமாகத் திருப்பி வையுங்கள். உங்கள் மூச்சைக் கவனியுங்கள். அதே கைகளை மட்டும், கீழ்முகமாகத் திருப்பி வைத்து மூச்சைக் கவனியுங்கள். இப்போது, மூச்சு வேறுவிதமாக இயங்கும். உடலுறுப்புகளை எந்தவிதத்தில் வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் உயிர்ச் சக்தியின் ஓட்டம் மாறுகிறது. இது பற்றிய கவனம் இல்லாமல், கோபத்தில் கைகளை இப்படியும் அப்படியுமாக வீசிக் கூச்சலிடும்போது, உயிர்ச் சக்தி எத்தனைக் குழப்பத்துக்கு உள்ளாகும் என்று யோசியுங்கள்.
இப்படி, கவனமின்றி எவ்வளவு தூரம் உங்கள் சக்தியை நீங்கள் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் சரியானபடி இயங்கவில்லை என்றால், உங்களுக்கு எதுவும் சரியாக நடக்காது.

Question:அப்படியில்லை குருஜி! பத்து வருடங்களுக்கு முன், என்னால் சுலபமாகச் சமாளிக்க முடிந்தது. இப்போதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது!
சத்குரு:

பத்து வருடங்களில் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் பல மடங்கு பெருக்கி வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். பிரச்சனைகள் கூடிப்போவதுதான் வளர்ச்சியின் அடையாளம் என்று தப்பாக அர்த்தம் செய்து கொண்டு விட்டீர்கள்.

குடும்ப டென்ஷன், நிறுவன டென்ஷன், போக்குவரத்து டென்ஷன் என ஒவ்வொன்றும் டென்ஷன் ஆகிப்போனால், இந்த பூமியில் நீங்கள் வாழத் தகுதியில்லாதவர் ஆகிவிடுவீர்கள்.
உங்கள் உடலையும், மனதையும் கூட கையாளத் தெரியவில்லையே, குடும்பத்தையும், நிறுவனத்தையும் எப்படிக் கையாள்வீர்கள்? உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்பை விட்டு, எதையும் ஆழ்ந்த கவனத்துடன் அணுகிப் பாருங்கள்.

சங்கரன்பிள்ளை இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காபி இயந்திரத்துடன் போராடிக் கொண்டு இருப்பதை, அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி கவனித்தாள்.

"இந்த இயந்திரத்தை எப்படிப் பொருத்துவது என்று பற்றி ஃப்ரெஞ்ச் மொழியில் குறிப்பு அச்சிடப்பட்டு இருக்கிறது. அதன்படி செய்து பார்த்து விட்டேன். பொருத்த முடியவில்லை. இயந்திரத்தில் ஏதோ கோளாறு என்று நினைக்கிறேன்" என்றார் சங்கரன் பிள்ளை.

பணிப்பெண் பக்கத்தில் வந்தான், ஒரே முயற்சியில், அதே இயந்திரத்தை மிகச் சுலபமாகப் பொருத்திவிட்டாள்.

"எப்படி?" என்றார், சங்கரன் பிள்ளை ஆச்சர்யத்துடன்.

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது ஐயா. அதனால், குழப்பிக் கொள்ளவில்லை" என்றாள் அவள்.
புரிகிறதா?

உங்களை நீங்கள் பெரிதாக நினைத்துக் கொள்ளாமல், நீங்கள் நினைப்பதுதான் சரி என்ற அகங்காரத்துடன் எதையும் அணுகாமல் இருந்தால், எந்தப் பிரச்சனை உங்களைக் கட்டிப்போட முடியும்?
நுணுக்கம் புரியாதவரைதான் எதுவும் இயலாததாகத் தோன்றும்.

பிரச்சனைகளின் விளைநிலம் உங்கள் குடும்பமோ, நிறுவனமோ அல்ல. உங்கள் மனம்தான். அற்புதக் கருவியாக இயங்க வேண்டியது அவலமான கருவியாகிவிட்டது. வேண்டியதை வழங்க வேண்டிய சாதனம், வேதனைகளை வழங்கும் சாதனமாகிவிட்டது.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஈஷா இயக்கத்தில், உலகெங்கும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்தவர்கள். வெவ்வேறு நம்பிக்கைகளை வளர்த்து, வாழ்ந்தவர்கள். அவர்களின் பெரும்பாலானவர்கள் தாங்கள் பொறுப்பேற்று இருக்கும் வேலைகளுக்கு எனத் தனிப் பயிற்சி எதுவும் எடுத்துக் கொள்ளாதவர்கள். இதைப் புரிந்து கொள்ளாமல், எடுத்தற்கெல்லாம் நான் டென்ஷனாகிக் கொண்டு இருந்தால், நான் எதிர்பார்க்கும் எந்த வேலை நடக்கும்? கோபத்தால் அத்தனை லட்சம் பேரை நான் எப்படிக் கையாள முடியும்?

நான் அவர்களுக்கு மகனாக, தகப்பனாக, குருவாக, சேவகனாக மனநல மருத்துவனாக எவ்வளவோ தளங்களில் இயஙக வேண்டி இருக்கிறது. அப்படிச் செய்யத் தயாராக இருந்தால்தான், நீங்களும்... குடும்பத்துக்கும், நிறுவனத்துக்கும் தலைமைப் பொறுப்பேற்க முடியும்.



Question:டென்ஷனிலிருந்து மீள சுலபமான வழி என்ன?
சத்குரு:
உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், அங்கே நீங்கள் ஒரு பிரச்சனையாகிவிடாத அளவுக்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் போதும்... எதுவுமே டென்ஷனாக இருக்காது.
ரிச்சர்டு கவுலி என்ற பிரபல மருத்துவரிடம் ஒருவன் வந்தான்.

"டாக்டர், எனக்கு 32 வயதாகிறது. கட்டை விரல் சூப்பும் பழக்கத்தை இன்னமும் விட முடியாமல் தவிக்கிறேன்" என்று வெகு கூச்சத்துடன் சொன்னான்.
"இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், எத்தனை வருடங்களுக்குதான் அதே கட்டை விரலைச் சூப்புவாய்? இன்றிலிருந்து கவனமாய் வேறு விரலைப் பயன்படுத்து" என்று அறிவுறுத்தி அனுப்பினார் ரிச்சர்டு கவுலி.

ஒரே வாரத்தில் அவன் மறுபடி வந்தான்.

"முப்பது வருடமாகத் தவிர்க்க முடியாததாக இருந்த பழக்கத்திலிருந்து ஆறே நாளில் முற்றிலும் விடுபட்டுவிட்டேன். எப்படி டாக்டர்?" என்றான் ஆச்சர்யத்துடன்.
"ஒரு விஷயத்தைப் பழக்கதோஷத்தில் செய்யாமல், ஒவ்வொரு முறையும் அதுபற்றிப் புதிதாக முடிவெடுக்க வேண்டி வந்தால், அதைக் கவனத்துடன் அணுகுவோம். தேவையற்ற பழக்கம் தானாக உதிர்ந்துவிடும்" என்றார் ரிச்சர்டு கவுலி.

கோபமும், டென்ஷனும் உங்கள் வாடிக்கையாகி இருந்தால், இனி, ஒவ்வொரு முறையும் அது பற்றிய கவனத்துடன் அணுகிப் பாருங்கள். விஷம் உதிரும். அமுதம் நிலைக்கும்!



வாசகர் கருத்து (1)

  • Democracy - Madurai,இந்தியா

    அடுத்தவன் காசை ஆட்டையைப் போட்டு திங்கும் கூட்டத்துக்கு டென்ஷன் இருக்காது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement