Load Image
Advertisement

'பாரத் ஜோடோ' யாத்திரைராகுலுக்கு கை கொடுக்குமா?

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், 30 ஆண்டுகளாக, ஒரு கட்சியின் ஆட்சியே அதாவது, காங்கிரஸ் ஆட்சியே நடந்து வந்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா அமல்படுத்திய அவசரநிலை பிரகடனம் காரணமாகவே, 1977ல், காங்கிரஸ் தோல்வி அடைந்து, ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால், அந்தக் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால், நீண்ட நாட்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியவில்லை. 1980 நடந்த தேர்தலில், காங்., மீண்டும் ஆட்சியை பிடித்து, இந்திரா மறுபடியும் பிரதமரானார். அவரது மறைவுக்கு பின், 1984லிலும், காங்., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது; ராஜிவ் பிரதமரானார். அதன்பின், 30 ஆண்டுகளாக காங்., உள்ளிட்ட எந்த ஒரு கட்சியும், தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை.

கடந்த 2014ல், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான், தனிப்பெரும்பான்மை பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். அப்போது முதல், காங்கிரஸ் சரிவையே சந்தித்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2014 - 2019 பொதுத் தேர்தல்களில், லோக்சபாவில் மொத்தமுள்ள இடங்களில், 10 சதவீதத்தை கூட பெற முடியாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற இயலவில்லை.

அத்துடன், 2019 லோக்சபா தேர்தலில், காங்., தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல், மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்க மறுத்து வருகிறார். அதனால், சோனியாவே இடைக்கால தலைவராக நீடிக்கிறார்.இருப்பினும், கட்சியில் முக்கிய முடிவுகள் எடுப்பதில், ராகுலின் பங்கு அதிகம் உள்ளது. அவர், தலைவர் பதவியில் இல்லா விட்டாலும், அதற்கான முக்கியத்துவத்தை கட்சியினர் கொடுப்பது குறையவில்லை.

இந்தத் தருணத்தில், 2024 லோக்சபா தேர்தலுக்குள் கட்சிக்கு புத்துயிரூட்ட, பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் ஆதரவை திரட்ட, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான, 150 நாள், 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற ஒற்றுமை யாத்திரையை, இம்மாதம் 7ம் தேதி ராகுல் துவக்கி உள்ளார். 3,500க்கும் மேற்பட்ட கி.மீ., துாரத்திற்கு, இந்த யாத்திரை நடக்க உள்ளது.

மக்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க, அவர்கள் ஆதரவை பெற, அரசியல் கட்சியினர் யாத்திரை நடத்துவது, மஹாத்மா காந்தி காலம் முதல் நடந்து வருகிறது. சுதந்திர போராட்ட காலத்தில், அவர் தண்டி யாத்திரை நடத்தினார். ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை துவக்கிய என்.டி.ராமராவ், காங்கிரசை சேர்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி போன்றோரும் யாத்திரை நடத்தி, தங்களின் செல்வாக்கை அதிகரித்ததுடன், ஆட்சி அதிகாரத்திலும் அமர்ந்தனர்.
பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி, ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடத்திய ரத யாத்திரை, அந்தக் கட்சி வளர்வதற்கு பெருமளவு உதவி புரிந்தது. அந்த வரிசையில், தன் யாத்திரை வாயிலாக காங்கிரஸ் புத்துயிர் பெறும்; மக்களின் செல்வாக்கை பெறும் என ராகுல் நம்புகிறார். பீஹார், உ.பி., போன்ற மாநிலங்களில், காங்., செல்வாக்கு பெருமளவு குறைந்திருந்தாலும், மற்ற மாநிலங்களில், குறிப்பிடத்தக்க அளவில் செல்வாக்கு உள்ளது. மேலும், காங்., கட்சியில் தொண்டர்கள் ரீதியாக தற்போது, எந்தப் பிரச்னையும் இல்லை.

அதேநேரத்தில், ராகுல் பதவி விலகியதில் இருந்து மூன்று ஆண்டுகளாக நிரந்தரமான தலைமை இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அதற்கு, அடுத்த மாதம் நடைபெற உள்ள தலைவர் தேர்தலில் நல்ல முடிவு காணப்பட்டு, செயல்திறன்மிக்க ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என, நம்பலாம்.

தற்போதைய நிலையில், 2024 லோக்சபா தேர்தலில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் எதுவும், காங்., மேலிடத்திடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், 12மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் நடக்கும், 'பாரத் ஜோடோ ' யாத்திரை வாயிலாக, ராகுல் தன் செல்வாக்கையும், கட்சியின் செல்வாக்கையும், குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்க முடியும் என்று நம்பலாம். அது, தேர்தல் வெற்றிக்கு உதவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.வாசகர் கருத்து (1)

  • Raa - Chennai,இந்தியா

    தண்டி யாத்திரை VS தண்ட யாத்திரை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement