Load Image
Advertisement

வாழ்க்கையை அனர்த்தமாக்கும் காட்சிகள்!

ஊக்கப் பேச்சாளர் ஒருவர் கூட்டத்தினரிடையே, தகவல் பரிமாற்றம் பற்றி ஒரு சோதனையை நிகழ்த்திக் காட்டுவதாகக் கூறி, 'நான் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டு, என்னுடன் பின்பற்றி செய்யுங்கள்' என்றார்.

'கைகளை முன்னால் நீட்டி தட்டுங்கள், மேலே உயர்த்தி தட்டுங்கள், கீழே தாழ்த்தி தட்டுங்கள், இறுதியாக உங்கள் தாடையில் வலது கையை வையுங்கள்' என்றவர், தன் வலது கையை நெற்றியில் வைத்தார். கூட்டத்தினரில், 99 சதவீதம் பேர், தங்கள் நெற்றியில் தான் கைவைத்திருந்தனர்.அவரது சொல்லும், செயலும் மாறுபட்டிருந்த போது, பார்வையாளர்களை அவரது செயல் தான் ஈர்த்திருந்தது. அவரது செயலைத் தான் பின் பற்றியிருந்தனர்.

'நாம் காதால் கேட்கும் செய்திகளை விட, நேரடியாக உற்று நோக்கும் காட்சிகள், நம் நினைவில் தங்கும்; மனதை பாதிக்கும் என்பதை, இந்த சோதனை நிரூபிக்கிறது' என்று கூறி முடித்தார்.

*இன்று 'டிவி' மெகா தொடர்கள் மட்டுமின்றி, திரைப்படங்களும் முற்றி லும் நடைமுறைக்கு சாத்தியமில்லாததை, மிகச் சாதாரண நிகழ்வாகக் காட்டினாலும், மக்கள் அதை உண்மை சம்பவத்தை பார்ப்பதை போன்ற, மன ஈடுபாட்டுடன் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
அந்தக் கதையுடன் பயணிக்கின்றனர்.அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலுடன், மறுநாள் வரை தவிப்புடன் காத்திருக்கின்றனர்.பார்ப்வர்களுக்கே எரிச்சலும், கோபமும் ஊட்டுமளவுக்கு அப்பாவியாக ஒரு கதாநாயகி; சாதாரண அறிவுள்ளவர் கூட ஏளிதில் புரிந்து கொள்ளக்கூடிய, சதி திட்டம் தீட்டும் வில்லன்; அதை நம்பும் அப்பாவி குணச்சித்திர பாத்திரங்கள்.ஒரு பெண்ணால் இப்படியெல்லாம் யோசிக்கவும் செயல்படுத்தவும் முடியுமா என்று சிந்திக்கிற அளவுக்கு கொடூரமான கொலை, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை சர்வ சதாரணமாக செய்து காட்டும் வில்லி.இதெல்லாம் 'டிவி'யில் காட்டப்படும் கதைகள்.
நிஜத்திற்கு வருவோம்.சமீபத்தில், தன் மகளைவிட அதிக மதிப்பெண் வாங்கிய மாணவனை விஷம் கொடுத்து கொலை செய்த ஒரு பெண் பற்றிய செய்தியை, நம்பவே இயலவில்லை. அந்த பெண்ணுக்கு இத்தகைய ஒரு கொடூரமான எண்ணம் தோன்றுவதற்கு, நிச்சயமாக ஏதோ ஒரு ஊடக காட்சி தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்.விளம்பரப் படங்களிலாவது, 'சித்தரிக்கப்பட்டவை' என்று மிகச்சிறிய எழுத்தில், சாகசக் காட்சிகளுக்குப் போடப் படுகின்றன; இங்கு அதுவும் கிடையாது.
இவை பார்ப்பவருக்கு உற்சாகத்தையும், பரவசத்தையும் ஊட்டும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள். தன் கண்முன்னால் தவறு செய்பவன் கடுமையாக தண்டிக்கப்படுவதால் ஏற்படும் குதூகலம்; உண்மை வாழ்க்கையில் அப்படி நடப்பதில்லையே என்ற ஏக்கத்திற்கு கிடைக்கும் ஆறுதல்!'சமுதாயத்தில் நடப்பவற்றைத்தான் சித்தரிக்கிறோம்' என்று காட்சி ஊடகத்தினரும், 'காட்சி ஊடகம் தான் மக்களைக் கெடுக்கிறது' என்று சமூக ஆர்வலர்களும் வாதாடிக் கொண்டிருக்கின்றனர்.
திரைப்படங்கள் மற்றும் 'டிவி' மெகா தொடர்கள் மக்களை மனதளவில் பாதித்து, உடல் நலத்தையும் கெடுக்கிறது என்கின்றனர் மன நல மற்றும் உடல் நல மருத்துவர்கள்.
*'சீரியலைப் பார்த்தாலே, ஒரே எரிச்சலாக இருக்கிறது' என்று வாய் சொல்கிறது; ஆனால், அந்த நேரம் வரும் வரை, தவிப்பாய் தவிக்கிறது பெண்கள் மனம். தங்களின் அன்றாட அவசிய வேலைகளின் நேரத்தையே மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில், சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர் பெண்கள்.
சட்டத்தை ஏமாற்றி சாதுர்யமாகச் செய்யும் குற்றங்களை, சாகசங்கள் போல் காட்டுவதால், பார்க்கும் இள ரத்தங்களும், தாங்கள் இதை விடச் சிறப்பாக செய்யலாமே என்று எண்ணி, தேவையில்லாத சாகசங்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தைச் சிதைத்துக் கொள்கின்றனர். நீதிமன்றம் மற்றும் காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்டும்போது, அதற்கான வல்லுநர்களின் வழிகாட்டுதல்களோடு, சிறிது கூட மிகைப்படுத்தாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பொது இடத்தில், மனைவி, குழந்தைகளோடு நிற்பவரை, காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் ஏறச் சொல்வதும், 'ஏன் சார்... நான் என்ன செய்தேன்?' என்று கேட்டால், 'அதெல்லாம் ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோ' என்பதும், ஸ்டேஷனுக்கு வந்து உண்மையைச் சொன்னால், 'அதெல்லாம் கோர்ட்டில் போய் பேசிக்கோ' எனச் சொல்வதும், நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காக, நாடகம் நடத்திக் காட்டுவதும், அபத்தமாக இருப்பதுடன், மக்களுக்கு தவறான செய்திகளைச் சொல்லும் வகையில் அமைந்து விடுகின்றன.
சமீபத்தில், காணொளி மூலமாக நீதித்துறை நடத்திய கருத்தரங்கம் ஒன்றில், நீதியரசர் உரையாற்றிய போது, குளிர் பானம் அருந்திய காவல் அதிகாரி, 'வாங்கி'க் கட்டிக் கொண்டார். முறைப்படி அலுவல் உடையில் வரவில்லை என்பதற்காகக் கண்டிக்கப்பட்டார், ஒரு மாவட்ட ஆட்சியர்.கடந்த காலத் திரைப்படங்களில், வில்லன் மட்டுமே குடிப்பழக்கம் உடையவராக சித்தரிக்கப்படுவார்.
ஆனால் இன்றைய கதாநாயக பாத்திரங்கள், நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்துவது போல், மது அருந்துவதாகக் காட்சிகள் அமைக்கப்படுகின்றன.பருவ வயதில் தோன்றும் இனக்கவர்ச்சிக்கு படைப்பாளிகள் 'காதல்' என்று பெயர் சூட்டி, தங்களின் கற்பனை பாத்திரங்களை கண்டபடி எல்லாம் உலவ விட்டதன் விளைவு, பள்ளி மாணவர்களையும் அது பதம் பார்க்கத் துவங்கி விட்டது.
*இன்று திருமண வாழ்க்கைகள் திசை திரும்பி, நீதிமன்ற வளாகத்தில் நிலை கொண்டிருப்பதற்குக் காரணம், காதல் பற்றிய தவறான புரிதலும், தன் வாழ்க்கையை காதலிக்கத் தெரியாத அறியாமையும் தான்!காதலிக்கும் போது, தன் காதலியிடம் அல்லது காதலரிடம் உள்ள நல்ல குணத்தை மட்டுமே உற்றுநோக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பிறகு அவரிடம் உள்ள குறைகள் மீது, முழு கவனத்தையும் செலுத்துகின்றனர்.
விளைவு, தாங்கள் தவறான வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டு விட்டதாக, தவறான எண்ணம் உதயமாகிறது. எவ்வித குறையும் இல்லாத மனிதப் படைப்பே கிடையாது என்ற உண்மை, ஏனோ அவர்களுக்குப் புலப்படுவதே இல்லை. இந்த உண்மையை மக்களுக்கு உணர்த்துவது தான் கற்பனையை விற்பனை செய்யும் படைப்பாளிகளின் பணி யாக இருக்கவேண்டும் .
கணவன், மனைவியைக் கொலை செய்வதும்; மனைவி கூலிப்படை மூலமாக கணவனைக் கொலை செய்வதும்; போலீசாரிடம் உண்மையை மறைத்து நாடகமாடி தப்பிக்க முயற்சி செய்வதும் அன்றாட நிகழ்வாகி விட்டது.இந்த புதிய கலாசாரம், நிச்சயமாக காட்சி ஊடகங்களின் தாக்கம் தான் என்பதில் சந்தேகமில்லை. சமூக ஊடகங்களும், இத்தகைய நடவடிக்கைகளில் சளைத்தவை அல்ல.
வாய்ப்பும், தகவல்களும், அளவுக்கு அதிக மாக குவியும் போது, அதன்மீது நாம் செலுத்தும் மிதமிஞ்சிய கவனத்தால், தவறான முடிவெடுத்து, வெற்றி கிடைக்காமல், நம் மீதே நமக்குக் கோபமும், அதிருப்தியும் ஏற்பட்டு விடுகிறது.னநல்ல நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும், தன்னுடன் சில தவறான தீய விளைவுகளையும் கொண்டு வருவது இயல்பு.அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கும் சமூக அக்கறை கொண்ட ஆர்வலர்களுக்கும் இருக்கிறது.
மிகைப்படுத்தாமல் காட்சிகளை சுவைப்படுத்த முடியாது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை அளவுக்கு அதீத ரசனைக்காக மிகைப்படுத்தப்படும் காட்சிகள் மக்களிடம் தவறான தகவல்களை கொண்டு சேர்க்கும் என்பதும்!காட்சிகளை, ஊன்றி கவனிக்கும் போது, நமக்கு உடன்பாடில்லாத, வெறுப்பூட்டும் நிகழ்வுகளைக் காண நேரிடுகிறது.
அவை, நினைவில் தங்கி, மனதை பாதிக்கிறது. மனதில் நிகழும் பாதிப்பு, உடலில் பிரதிபலிக்கிறது.இவை அனைத்தும், நம்மையும் அறியாமல் நம் உடல் நலனையும், மனதையும் பாதிக்கும்போது, வாழ்வே அனர்த்தமாகி விடுகிறது.
மா.கருணாநிதி,

காவல்துறைகண்காணிப்பளர்
(ஓய்வு),இ.மெயில்:spkaruna@gmail.comவாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement