சதையைத் துண்டுதுண் டாக்கினும் உன்னெண்ணம் சாயுமோ? - என் ஜீவன்தான் ஓயுமோ?
என்று தன் வாழ்நாள் முழுவதும் ஆங்கிலேயே அதிகாரிகளை எதிர்த்து நின்று சுதந்திரத்திற்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழர்வ.உ.சி., சிறையில் இழுத்த செக்கை வருடத்தில் ஒரீரு நாள் அதுவும் அனுமதி பெற்றுத்தான் பார்க்க வேண்டும் என்றால் அதைவிட என்ன கொடுமை இருக்கப் போகிறது
ரத்தத்தை வியர்வையாக சிந்தி வ.உ.சி., இழுத்த அந்த செக் வெறும் செக்கல்ல பூட்டி வைப்பதற்கு..
அது சுதந்திரத்தின் சின்னம். விடுதலைக்காக கொட்டிய போர்முரசு. பிரிட்டிஷாருக்கு எதிரான பிரளயம். தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் அடையாளம். வ.உ.சி.,யின் ரத்தமும், சதையும், மூச்சும் படிந்திருக்கும் பொக்கிஷம்.
வ.உ.சி.,யின் பேச்சைக் கேட்டால் செத்த பிணமும் எழும். சுதந்திரம் கேட்டு முழங்கும் என்று வ.உ.சி.,யின் வழக்கை விசாரித்த நீதிபதி பிரிட்டிஷ் நீதிபதி பின்ஹே கடும்கோபத்துடன் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.
இவ்வளவு பெரிய தண்டனைக்கு காரணம் தொழிற்சங்க போராட்டத்தை கையில் எடுத்தார் என்பதற்காக அல்ல.
சொத்துக்களை எல்லாம் விற்று ஆங்கிலேயனுக்கு எதிராக கப்பல் ஒட்டினார். ஆரம்பத்தில் அதில் பயணிகளைத்தான் வ.உ.சி., ஏற்றுவார் என்று நினைத்தார்கள். பின்னர்தான்தெரிந்தது அதில் ஏற்றியது ஆங்கிலேயர்களின் மானத்தை என்று.
அந்த அளவிற்கு கப்பல் பயணிகளுக்கும் அவர்கள் மூலம் மக்களுக்கும் சுதந்திர தாகத்தை விதைத்தார்.
உமக்கு எதற்கு இந்த வீண் வேலை அசலும் வட்டியுமாக நீர் கப்பலில் போட்டிருக்கும் பணத்தைவிட பல மடங்கு தருகிறோம் என்று ஆசை காட்டியபோது அதை ஆவேசமாகமறுத்தவர்.
நீர் செய்யும் செயல்கள் யாவும் தேசத்துரோகமான செயல்கள் தெரியுமா? இதற்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று இனியாவது அரசுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்என்று கலெக்டர் லின்ஞ் மூலம் விடுத்த எச்சரிக்கையை அந்த இடத்திலேயே துாக்கிஎறிந்தவர். உமது பார்வையில் நான் செய்வது தேசத்துரோக செயல் என்றால் இனியும்தொடர்ந்து செய்வேன். உங்கள் பிரிட்டிஷ் அரசால் முடிந்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சவால்விட்டவர்.
பனிரெண்டு மணி நேரம் வேலை. முறையான விடுமுறையோ சம்பளமோ கிடையாது என்ற நிலையில், கொத்தடிமையாக இருந்த கோரல் மில் தொழிலாளர்களுக்காகபோராடி, வாதாடி எட்டுமணி நேர வேலை உள்பட எல்லாவற்றையும் முறைப்படுத்தி ஆங்கிலேயே அதிகாரிகளின் முகத்தில் கரி பூசியவர்.
இப்படி தனி ஒரு மனிதனாக இருந்து மொத்த அரசையும் ஆட்டிவைத்து அவமானப்படுத்தும் வ.உ.சி.,க்கு தண்டனை கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா?அதுதான் தங்களது மொத்த அவமானத்திற்கு வடிகால் தேடும் விதத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்தனர்
மனிதனுக்கு இருப்பதோ ஒரு ஆயுள் அது என்ன இரட்டை ஆயுள் தண்டனை என்றால், ஒரு ஆயுள் தண்டனை என்பது ஏறக்குறைய இருபது ஆண்டுகள், அதற்குள்ளாகவேசிறைவாசம் சம்பந்தப்பட்ட கைதிக்கு மரணத்தை வழங்கிவிடும். எங்கே இருபது ஆண்டுகள் சிறைவாசத்தையும் முடித்து சிதம்பரானார் ஒரு வேளை வெளியே வந்துவிடுவாரோ?என பயந்து, அவர்சிறையைவிட்டு வெளியே வரவேகூடாது என்கின்ற ‛நல்லெண்ணத்துடன்' அவருக்கு தரப்பட்டதுதான் இரட்டை ஆயுள் தண்டனை அதாவது நாற்பது ஆண்டு கால தண்டனை.
அன்றைய காலகட்டத்தில் வடமாநிலங்களில் புகழ் பெற்ற லாலாலஜபதிராய், பாலகங்காதர திலகர் போன்ற தீரமிக்க தலைவர்களுக்கு இணையான தென்மாநில தலைவர் என்று போற்றப்பட்ட சிதம்பரனாரை அரசியல் கைதியாக கூட பார்க்காமல் அவரை சிறையில் கல் உடைக்க வைத்தும், செக்கிழுக்க வைத்தும் கொடுமைப்படுத்தினர்.
இரண்டு மாடுகள் பூட்டி இழுக்க வேண்டிய 250 கிலோ எடையுள்ள செக்கை தனிமனிதனான வ.உ.சி.,யைவிட்டு இழுக்கவைத்தனர். இழுக்க முடியாமல் இழுத்த அந்த செக்கில்இருந்த வடிந்தது எல்லாம் வ.உ.சி., ஐயா அவர்களின் ரத்தம்தான்.
கோவை சிறையில் உள்ள அந்த செக் சுதந்திரத்திற்கு பிறகு பொதுமக்கள், குழந்தைகள், குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் யாவரும் அன்றாடம் பார்வையிட்டு சுதந்திர எழுச்சி பெற்றுவந்தனர்.
ஆனால் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு காரணங்களை சொல்லி செக்கை வருடத்திற்கு இரு முறை வ.உ.சி.,யின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில்மட்டும் மக்கள் பார்வைக்கு திறந்துவிடுகின்றனர். அதிலும் இப்போது கட்டுப்பாடுகள் கொண்டுவந்து அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் மட்டுமே செக்கை பார்க்கமுடியும்.வ.உ.சி.,யின் பிறந்த நாளான இன்றைக்கம் அதே நிலைதான்
வ.உ.சி.,சியின் நுாற்று ஐம்பதாவது ஆண்டு விழாவினை கொண்டாடும் தமிழக அரசு வ.உ.சி.,இழுத்த இந்த செக்கினை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும். அதற்குபெரிதாக இடம் தேடவேண்டியது இல்லை. அருகில் உள்ள கோவை வ.உ.சி., பூங்காவில் வைத்தாலே போதுமானது...
அதுதான் ஐயா வ.உ.சி.,க்கு செய்யும் செலுத்தும் ஆகச்சிறந்த பிறந்த நாள் மரியாதையாக இருக்கும்...
படங்கள் : அருள்குமார்,கோவை
-எல்.முருகராஜ்
தயவு செய்து, இதை ராமசாமி ஆதரவாளருக்கு காட்டவும். ராமசாமி தான், இந்திய விடுதலையை பற்றி தரக்குறைவாக பேசினார். சுதந்திரத்தின் மகிமையை இப்போதாவது இவர்கள் புரிந்துகொண்ட, ராமசாமியை பற்றி தெளிவு பெறட்டும்.