உள்நாட்டிலேயே, ௨௦ ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, விமானம் தாங்கி போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., விக்ராந்தை' சமீபத்தில் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
1971ல், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் முக்கிய பங்காற்றி, ௧௯௯7ல் தன் சேவையை முடித்துக் கொண்ட, நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலின் பெயர் தான், தற்போது புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள போர்க் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் வாயிலாக, இந்திய கடற்படை வரலாற்றில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது என்றே சொல்லலாம். ராணுவத் துறையில் உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் துவக்கப்பட்ட திட்டமான, 'மேக் இன் இந்தியா'வில், இது ஒரு மைல் கல்லாகும். அடுத்ததாக நம் நாட்டிலேயே மிகப்பெரிய திட்டங்களை உருவாக்க, ஐ.என்.எஸ்., விக்ராந்த் துவக்கம், ஒரு உத்வேகமாக அமையும்.
'இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த், ஒரு மிதக்கும் விமானத் தளம் மற்றும் மிதக்கும் நகரம். ௫,௦௦௦ ஆயிரம் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை, இந்தக் கப்பலில் உற்பத்தி செய்ய முடியும். இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்ஒயர், கொச்சியிலிருந்து காசி வரையிலான நீளமுடையது. 'மேலும், விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், இதுபோன்ற பெரிய கப்பல்களை உருவாக்கும் திறன் படைத்த குறிப்பிட்ட சில நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத்தக்க விஷயமாகும்.
நாட்டின், 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மகுடம் சூட்டும் வகையில், இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், நம் கடற்படைக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கொடி மாற்றப்பட்டு, புதிய கொடியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அரங்கில் மிகப்பெரிய சக்தியாக உருவாகி வரும் நம் நாட்டிற்கு எதிராக, புதிய புதிய சவால்கள் உருவான வண்ணம் உள்ளன.
குறிப்பாக, நாட்டின் எல்லைப் பகுதியில் மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் பகுதியிலும், அண்டை நாடான சீனாவின் அத்துமீறல்களும், அடாவடிகளும் அதிகரித்து உள்ளன. அந்நாட்டின், 'யுவான் வாங்க் ௫' என்ற உளவுக் கப்பல், நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக, இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்த உளவுக் கப்பல் வாயிலாக, சீன கடற்படையினர் மேற்கொள்ளும் சதி வேலைகளை முறியடிக்க, இந்திய கடற்படையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கிடைத்து உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதி அமைதியானதாகவும், சர்ச்சைகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. அதற்கும், புதிய போர்க்கப்பல் உதவிகரமாக இருக்கும்.
சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருக்கும், 'எல் அண்டு டி' கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான, 'சார்ல்ஸ் ட்ரூ' சமீபத்தில் வந்தது. பழுது பார்ப்பு பணி என்ற பெயரில், அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று, இந்தியாவுக்கு வந்தது இதுவே முதல் முறை. இதன் வாயிலாக, கப்பல்கள் ரிப்பேர் மற்றும் பராமரிப்பு பணிக்கு உகந்த இடமாக, சர்வதேச நாடுகள் மத்தியில், இந்தியாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இப்போது, பிரமாண்ட கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களை உற்பத்தி செய்யும் நாடாகவும், இந்தியா மாறியுள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், ஐ.என்.எஸ்., விக்ராந்தின் துவக்கம் அமைந்துள்ளது.
'ஒவ்வொரு துளிநீரும் சேர்ந்து தான் பெருங்கடலாகிறது. அதுபோல, ஒவ்வொரு இந்தியரும், உள்ளூர் பொருட்களுக்காக குரல் கொடுத்தால், இந்தியா எல்லா வகையிலும் தற்சார்பு நாடாக விரைவில் மாறும். வலிமையான இந்தியாவே, அமைதியான, பாதுகாப்பான உலகத்திற்கு வழிவகுக்கும்' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளது, நுாற்றுக்கு நுாறு உண்மை. அந்த வலிமையான இந்தியா உருவாக ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!