கண்தான் விழிப்புணர்வு குறித்து சென்னையில் இன்று (02/09/2022) காலையில் ஒரு விழா
விழா மேடையில் ஒவ்வொருவராக அழைக்கப்படுகின்றனர்
வந்தவர்களிடம் பாராட்டு சான்றிதழும்,பரிசும் வழங்கப்படுகிறது
பொதுவாக பரிசும்,பாராட்டு சான்றிதழும் பெறுபவர்கள் முகம் சந்தோஷமாக இருக்கும், சிரித்தபடி பரிசினை பெற்றுக்கொள்வர்,ஆனால் இந்தமேடையில் ஏறியவர்கள் அனைவரின் முகமும் இறுக்கமாக இருந்தாலும் அந்த இறுக்கத்திற்கு நடுவிலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது.
உண்மையிலேயே அவர்கள் பெருமைக்கு உரியவர்கள்தான்
எதிர்பாராமல் இறந்துவிட்ட தனது குடும்பத்தில் ஒருவரின் மரணம் தந்த அதிர்ச்சி மற்றும் சோகத்திற்கு நடுவிலும் மனதை திடப்படுத்திக் கொண்டு இறந்த தங்கள்குடும்பத்தினரின் கண்களை அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் தானமாக கொடுத்தவர்கள் இவர்கள்.
பாராட்டுப் பத்திரத்துடன்மேடையைவிட்டு இறங்கி தனது இருப்பிடத்திற்கு திரும்பிய ஒரு தாய் அதற்கு மேல் தன்னை அடக்கமுடியாமல் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தார்,பக்கத்தில் இருந்த கணவர் அவரது தோளைதட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.
பேச்சுக் கொடுத்தேன்
என் பெயர் சாந்தா கணவர் பெயர் குமார் எங்களுக்கு சொந்த ஊர் ஊட்டி எங்களுக்க ஒரு மகள் சரண்யா ஒரு மகன் ராகேஷ்மகள் சரண்யா எங்களுக்கு மிகவும் செல்லம் ஒரு நாள், ஒரு பொழுது பார்க்காவிட்டால் கூட எங்களால் தாங்கவோ, துாங்கவோ முடியாது
எங்கள் செல்வத்திற்கு எல்லா செல்வத்தையும் வழங்கி திருமணம் முடித்துவைத்தோம்,எல்லாம் நல்லபடியாவே நடந்தது ,அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததுஎங்கள் எல்லார் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியில் பூத்துக்குலங்கியது.
நன்றாக போய்க்கொண்டிருந்த மகள் சரண்யாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம், ஒரு நாள் உடம்புக்கு முடியவில்லை என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்
ஆரம்பத்தில் பயப்படும்படியாக ஒன்றும் இல்லை என்று சொன்னவர்கள் பிறகு படிப்படியாக எங்களை பயத்தில் ஆழ்த்தினர் ஒரு கட்டத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்எல்லாம் முடிந்துவிட்டது என்று கைவிரித்துவிட்டனர்.
அந்த நேரத்தில் எங்களால் அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்யத்தோன்றவில்லை ஆனால் எங்கள் மகன் ராகேஷ்தான் சகோதரியின் கண்களை தானமாக செய்வது என்றுமுடிவு செய்தான் எடுத்த முடிவை அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட நெருங்கிய உறவுகளிடம் பேசி பேசி அனுமதிவாங்கிவிட்டான்
அதன்பிறகு மகளின் கண்கள் தானம் செய்யப்பட்டது
மகளை அடக்கம் செய்துவிட்டு அடக்கம் செய்யமுடியாத, கூடாத அவளது நினைவுகளுடன் வாழ்ந்து வந்தோம் அந்தநேரத்தில்தான் சென்னை ராஜன் கண் மருத்துவமனையில் இருந்து ஒரு தகவல் வந்தது, உங்களது மகளின் இரு கண்களும் பார்வையில்லாத இரண்டு பேர்களுக்குவெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர்கள் பார்வை பெற்றுள்ளார்கள்.
மலர்களின் வண்ணம்,சூரியனின் உதயம்,இயற்கையின் அழகு ,மழலைகளின் சிரிப்பு,அலைகளில் சிலிர்ப்பு,ஆறுகளின் உவப்பு என்று உலகில் உள்ள அனைத்துஅழகுகளையும் கண்குளிரி பார்த்து ரசிக்கின்றனர்.
இதற்கு காரணமான தங்களின் மகள் சரண்யாவை தெய்வமாக நினைத்து நன்றி கூறி வருகின்றனர்
கண்தான இலக்கணப்படி யாருக்கு யாருடைய கண்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதைக்கூறக்கூடாது என்பதால், தங்கள் மகளால் ,கண்களிலும்,வாழ்க்கையிலும்ஒளி கிடைக்கப் பெற்றவர்கள் யார் என்பதைக் கூற இயலாது,ஆனால் ஒன்று நிச்சயமாக சொல்ல முடியும் உங்கள் மகள் இருவர் மூலமாக உலகத்தைபார்த்துக் கொண்டிருக்கின்றார் அவ்வளவு ஏன் உங்களையே கூட பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றனர்.
இந்தியாவில் பல லட்சம் பேர் இறந்தாலும் கண்தானம் செய்ய முன் வரததால் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் வாழ்க்கையில் பல வருடங்களாக இருள்தான் நீடிக்கிறது ,கண்தானம் செய்த உங்களால் உங்கள் மகளால் அதில் இருவர் வாழ்க்கை ஒளிபெற்றிருக்கிறது, அதற்கான கவுரத்தையும் பெருமையும் தரவேண்டியது எங்கள் கடமை உங்களைரோல்மாடலாகக் கொண்டு பலரும் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுவர் என்று விழாவிற்கு அழைத்து பாராட்டு சான்றிதழ் கொடுத்தனர்.
இறந்து போன எங்கள் மகள் சரண்யா இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவோ பெருமை சேர்த்தாள் இப்போது இறந்தும் பெருமை சேர்த்துள்ளாள், விழா மேடையில்நிற்கும்போது பலரும் கைதட்டி பாராட்டினர் திரும்பிப் பார்க்கிறேன் பலரது கண்களும் எங்களைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தது அதில் எந்த கண் எங்கள் மகளின் கண்ணோ?என நினைத்தேன், அதுதான் என்னை அறியாமல் உடைந்து அழுதுவிட்டேன்...
-எல்.முருகராஜ்.
இந்த குடும்பத்தாருக்கு நன்றியும் பாராட்டையும் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியாதவனாக இருக்கிறேன் ..... 2013ல் எனது தாயாரின் மரணத்துக்கு பிறகு அவரது உடலை பெங்களுருவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக அளித்து விட்டோம் (தாயாரின் கடைசி ஆசைப்படி) .... கண் தானத்திலும் சில வரைமுறைகள் உள்ளன .... புற்று நோய் (மற்றும் சில நோய்கள்) உள்ளவர்களின் கண்களை தானமாக ஏற்றுக்கொள்வதில்லை..... தவிரவும், சரியான நேரத்தில் செயல்பட்டால், உடலின் வேறு பல பாகங்களும் மற்றவர்களுக்கு பயன்படும் (தோல், சிறுநீரகம் போன்றவை) .... மூளை சாவுக்கு உட்பட்டவர்கள் இதயம் கூட பயன்படும் .... அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மருத்துவ கல்லூரிகளும் இந்த விழிப்புணர்வை பரவலாக்கவேண்டும் ........