'உன் தேவைக்கு மேல் நீ உண்ணும் உணவு, ஒரு ஏழையிடம் திருடியதற்கு ஒப்பாகும்' என்று வசனம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வாயடைத்துப் போய் விட்டனர்.
அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள் என்ன சப்பைக் கட்டு கட்டலாம் என்று உரத்த மவுனத்தில் இருக்கின்றனர்.அரசு ஊழியர்கள், என்ன விலைக்கு விற்கப்பட்டோம் என்று, குழம்பி போய் இருக்கின்றனர்.
'கப்சிப்'
விஷயம் இது தான். மன்னிக்கவும், விடயம் இது தான். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, ஒவ்வொரு ஆறு மாத காலத்திற்கும் அறிவிக்கப்பட வேண்டும்.திராவிட மாடல் அரசு, இந்த ஆண்டு ஜன., 1 முதல் ஜூன் 30 வரைக்கான அகவிலைப்படியை, ஏப்ரல் மாதம் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், யார் என்ன கேள்வி கேட்டாலும், 'நீ 'டபுள் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறாயா?' என்று பதில் கேள்வி கேட்கும் நிதி அமைச்சரின் மதியூக யோசனைப்படி அது மறக்கடிக்கப்பட்டது.
சுதந்திர தின உரையின்போது முதல்வர், 'அகவிலைப்படி ஜூலை 1 முதல் வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.காத்திருந்தாலும் ஏதோ கிடைத்ததே என்று நம்பி, ஆட்டோவில் ஏறிய அரசு ஊழியர்களுக்கு, அரசாணை வந்தபோது தான் தாங்கள் முட்டுச் சந்தில் வைத்து, முறைப்படி கவனிக்கப்பட்ட விடயம் தெரியவந்தது.
முதல் ஆறு மாத காலத்திற்கான அகவிலைப்படி அதோ கதி தானா அல்லது 'அந்தர் பல்டி'யா என்ற பிரமையில் இருந்து இன்னும் விடுபடவில்லை. ஊழியர் சங்கம், ஜாக்டோ - ஜியோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் 'கப்சிப்' என வாயை மூடிக் கொண்டுள்ளன.
இந்நிலையில் மற்றுமொரு 'இடி' அரசு ஊழியர்களுக்கு விழுந்துள்ளது. அது தான் 'இ.எல்., என்கேஷ்மென்ட்'என்ற ஊதியத்துடன் கூடிய விடுப்பை, 'சரண்டர்' செய்து ஊதியம் பெறும் சலுகை.கொரோனா காலத்தில் வருமானம் இல்லை என்று, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது.
இப்போது தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் தன்மான அரசு, வேலை செய்தவனுக்கு ஊதியம் கொடுக்காமல் இருப்பது, வருமானம் இல்லை என்பதாலா அல்லது வக்கில்லை என்பதாலா என்பதை, ஒரு நிபுணர் குழு அமைத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
இந்த லட்சணத்தில் 600 கோடி ரூபாயில் பூங்கா, 134 அடி உயர பேனா தேவை தானா? இதற்கும் மேலாக, ஒரு மாநகராட்சி கூத்தும் நடைபெற உள்ளது. அது தான் சென்னை மாநகருக்காக வரப் போகும் புதிய மண்டலங்கள். தற்போது சென்னையில் 15 மண்டலங்கள் உள்ளன. அதை 23 ஆக அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
பேரம்
இது நல்ல விடயம் தானே? நிர்வாகம் நேர்த்தியாக நடைபெறுமல்லவா? இங்கு தான் சூட்சமம் உள்ளது. ஒரு மண்டலம் என்றால், அதற்கான மேல் நிலை அதிகாரிகள், மண்டலத் தலைவர், துணைத் தலைவர், மண்டலக் கோட்ட, செயல், உதவிப் பொறியாளர்கள் எல்லாம் வேறு துறைகளில் இருந்து மற்றலாகி வருவர். எப்படி வருவர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
முக்கியமாக கீழ்நிலை ஊழியர்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 200 பேராவது முதலில் தற்காலிகமாக அமர்த்தப்படுவர். மூன்று ஆண்டுகளில் பேரம் பேசி பணி உறுதி செய்யப் படும். இதற்கு, டி.என்.பி.எஸ்.சி., தேவையில்லை. நேரடியாக பணி நியமனம் செய்யப்படும். புதிய கட்டடங்கள், புதிய வாகனங்கள் எல்லம் வாங்கலாம்; திறப்பு விழா நடத்தலாம்; ஆனால், நிதி?
பிரபாகரன்,
எழுத்தாளர்
அருமையா எழுதியிருக்கீங்க , இதைவிட தெளிவா கேட்க முடியாது ஆனா உரைக்காது