இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், 'மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கு, ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்குவதுடன், அவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்காக, கோடிக்கணக்கில் பணத்தை செலவிடு கின்றன. இந்த நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், 'காய்ச்சலுக்கு அளிக்கப்படும், 'டோலோ 650' மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம், 1,000 கோடி ரூபாயை, டாக்டர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளது' என்றார்.இதைக் கேட்டு, நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், இது, தீவிரமான பிரச்னை எனக் கூறி, ௧௦ நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில், 'டோலோ ௬௫௦' மாத்திரையை தயாரிக்கும், பெங்களூரை சேர்ந்த, 'மைக்ரோ லேப்ஸ்' நிறுவனம், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது; ஆதாரமற்ற புகார் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே, தங்கள் நிறுவனம், ௩௫௦ கோடி ரூபாய்க்கு தான் வர்த்தகம் செய்துள்ளது. மேலும், மாத்திரை விற்பனையை அதிகரிக்க, ௧,௦௦௦ கோடி ரூபாய் செலவிடுவது என்பது சாத்தியமில்லாதது என்றும் விளக்கம் அளித்துள்ளது.இந்த வழக்கு வாயிலாக, மருந்து தயாரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு நிறுவனமும், தங்களது உற்பத்தி மருந்து, மாத்திரைகளை அதிக அளவில் டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக, ஊக்கத்தொகைகள் மற்றும் பரிசுகளை லஞ்சமாக வழங்குகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
அத்துடன், மருந்து நிறுவனங்கள் பின்பற்றும் விதிகளுக்கு எதிரான நடைமுறைகள், மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் செயல்பாடுகளையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளன. அந்த அமைப்பு களும், இந்த தில்லாலங்கடி வேலைகளுக்கு உடந்தையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ௨௦௨௦ இரண்டாவது காலாண்டு முதல், ௨௦௨௧ இரண்டாவது காலாண்டு வரையிலான காலகட்டத்தில், பாராசிட்டமால் மாத்திரை விற்பனை, ௧௩௮.௪௨ சதவீதம் அதிகரித்துள்ளதாக, சில ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், குரோசின், கால்பால் போன்ற பெயருடைய பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனை, ௫௩ மற்றும் ௧௫௯ சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், டோலோ ௬௫௦ விற்பனை மட்டும், ௨௮௯ சதவீதம் உயர்ந்துள்ளது. அதனால், டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையோ என்று எண்ணவும் தோன்றுகிறது. எனவே, மருந்து விற்பனை நிறுவனங்கள் நெறிமுறைகள் சார்ந்த, நேர்மையான விற்பனை நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
அதற்கு மாறாக டாக்டர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி, தங்களின் மருந்து, மாத்திரைகளை அதிகளவில் பரிந்துரைக்கும்படி துாண்டும் பழக்கம் அதிகரித்தால், நோயாளிகளின் உடல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சுகாதாரத் துறைக்கும் மிகப்பெரிய அளவில் கெட்ட பெயர் உருவாகும். எனவே, மத்திய அரசு விரைவில் இதற்கான சட்டம் இயற்றி, வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
அதை மீறும் டாக்டர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் நெறிமுறைகளை மீறி செயல்படும் மருந்து நிறுவனங்களையும், கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதை தொடர்ந்து, மருந்து கம்பெனிகளிடம் இருந்து கையூட்டு அல்லது ஊக்கத்தொகை பெற்ற டாக்டர்களின் பட்டியலை, வருமான வரித்துறை கேட்டுள்ளதும், நல்ல திருப்பமாகும். இந்தியாவில் மருந்து பொருட்கள் தயாரிப்பு துறையானது, அடுத்த, ௧௦ ஆண்டுகளில் மும்மடங்கு வளர்ச்சி அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த துறையினர் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். தவறு செய்யும் நிறுவனங்கள், தங்களின் அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!