Load Image
dinamalar telegram
Advertisement

'பில் பாஸ்' பண்ண கறார் கமிஷன் கேட்கும் அதிகாரி!

'பில் பாஸ்' பண்ண கறார் கமிஷன் கேட்கும் அதிகாரி!''மத்திய அரசு திட்டத்துக்கு, சத்தமில்லாம பணம் வசூல் பண்ணுதாங்கல்லா...'' என, முதல் ஆளாக விவாதத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''என்ன திட்டம்னு விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்துல, கிராம மக்களுக்கு சுத்த மான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துட்டு இருக்கு... இந்த திட்டப்படி, தர்மபுரி மாவட்டத்தின், 251 பஞ்சாயத்துகள்ல இருக்கிற பல கிராமங்கள்லயும் குடிநீர் இணைப்பு குடுத்துட்டு இருக்காவ வே...

''இதுக்கு டிபாசிட் தொகை வசூலிங்கன்னு மத்திய அரசு அறிவிக்கலை... ஆனா, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையினர், ஒவ்வொரு ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புக்கும் தலா, 1,000 ரூபாய் டிபாசிட் வாங்கும்படி பஞ்சாயத்துகளுக்கு உத்தரவு போட்டிருக்காவ வே...

''பஞ்சாயத்து அதிகாரிகளோ, அவங்க பங்குக்கு ஆயிரம் சேர்த்து, 2,000 ரூபாயா டிபாசிட் வசூல் பண்ணுதாவ... இதை மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கல வே...'' என்றார், அண்ணாச்சி.

''பாவம் ஒரு பக்கம், பழி ஒருபக்கம்னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''எந்த துறையில பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துல, காவலாளி பணிகளை தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் தான் பார்க்கிறாங்க... இவங்களுக்கு குடுக்கிற தொகைக்கு, ஜி.எஸ்.டி., பிடிச்சு மத்திய அரசுக்கு கட்டணும்... ஆனா, அதிகாரிகள் அலட்சியத்தால, மத்திய அரசுக்கு பெரும் தொகையை ஜி.எஸ்.டி.,யா கட்டாம இருந்துட்டாங்க...

''ஜி.எஸ்.டி., ஆணையம் கேள்வி கேட்டதும், அதிகாரிகள் அலறி அடிச்சு விசாரிச்சப்ப, செக்யூரிட்டி நிறுவனத்தின் சார்புல தந்திருந்த டிபாசிட் தொகையை, அவங்களே திரும்ப எடுத்த விவகாரம் தெரிய வந்துச்சுங்க...

''அப்புறமா, காவலாளிகளிடம் ஒரு மாத சம்பளத்தை பிடிச்சு, ஜி.எஸ்.டி., தொகையை கட்டிட்டாங்க... இந்த விவகாரத்துல பெரிய அதிகாரிகள் தப்பிக்க, கீழ்மட்டத்துல ஓய்வு பெறும் நிலையில இருக்கிற அதிகாரிகளை மாட்டி விட்டுட்டாங்க... இப்ப, விசாரணை, மெமோன்னு வர்றதால அவங்க மன உளைச்சல்ல தவிக்கிறாங்க...

''இந்த விவகாரத்துல அமைச்சரும், ஆளுங்கட்சி தொழிற்சங்கமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கணும்னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கமிஷனை வெட்டினா தான் 'பில் பாஸ்' ஆகும்னு கறார் காட்டறார் ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார் குப்பண்ணா.

''மேல சொல்லுங்க பா...'' என்றார்அன்வர்பாய்.

''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியத்துல இருக்கற ஒரு அதிகாரி, ஆளுங்கட்சி பிரமுகர்களோட கூட்டணி போட்டு, ஆடாத ஆட்டம் போடறார் ஓய்...

''இதுவரை, இவரை அஞ்சு முறை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டும், எங்கயும் போகாம அதே இடத்துல பணியில நீடிக்கறார்... இன்னொரு வேடிக்கை என்னன்னா, தனக்கு எதிரா யாராவது பேசினா, அவாளை தடாலடியா இடமாற்றம் பண்ண வச்சுடறார்னா, இவரது செல்வாக்கை புரிஞ்சுக்கலாம் ஓய்...

''ஊராட்சிகள்ல நடக்கற பணிகளுக்குரிய பில்களை, 'ஓகே' பண்ண, 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தா தான் ஆச்சுன்னு கறார் காட்டறார்... ஒன்றிய பொறியாளர்கள் ரெண்டு பேரும், இவருக்கு ஒத்தாசையா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
டீ கடை ரேடியோவில், 'ராம்குமார், சக்தி, பூபதி உள்ளிட்டோர் விரும்பி கேட்ட பாடல்' என்ற அறிவிப்புடன், 'காசு, பணம், துட்டு, மணி... மணி...' என்ற பாடல் ஒலிக்க, நண்பர்கள் ரசிக்க
ஆரம்பித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (3)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  டெண்டர் வாங்க அழுது, ஒதுக்கியதும் அரசியல்வாதிக்கு 'ஒதுக்கீடு' செய்து, வேலையை முடித்து காசை கண்ணால் பார்க்கவும் கொடுத்தபின் ஒப்பந்தக்காரர் தலையில் துண்டு போட்டுக்கொண்டு ஓட வேண்டியதுதான்

  • SUKUMARA - Hyderabad,இந்தியா

   நீங்கள் இருக்கின்ற கர்நாடகாவில் முப்பது சதவீதம் கமிஷன் என்ற போது கருத்து ஒன்றையும் காணவில்லையே பி ஜே பி என்பதாலா

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   \\நீங்கள் இருக்கின்ற கர்நாடகாவில் முப்பது சதவீதம் கமிஷன் என்ற போது கருத்து ஒன்றையும் காணவில்லையே பி ஜே பி என்பதாலா...\\ .... அவங்க முன்னரே கர்நாடகாவைப் பத்தி சொல்லியிருக்காங்க ....நீங்க அதை படிக்கலைனு நெனைக்கிறேன் .........

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement