தியாக பூமியாம் திருப்பூரில் எந்நாளும் நன்நாள்தான் ஆனால் கடந்த 14ம் தேதி நகர வரலாற்றில் ஒரு பொன்னாள்.
ஆம்..பிரதமர் மோடியின் அழைப்பினை ஏற்று நமது நாட்டின் சுதந்திர தின 75ம் ஆண்டு பவள விழாவினை கொண்டாட கடந்த 14 ந்தேதி ஊரே திரண்டிருந்தது ஊரைத்திரட்டியது தேசிய நாளிதழாம் நம் தினமலர் நாளிதழ்தான்.
தேசத்தையும் தெய்வீகத்தையும் தனது இரு கண்களாக பாவிக்கும் கோவை தினமலர் பதிப்பின் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம். இதற்காக கடந்த ஒரு மாதமாக உழைத்ததன்எதிரொலி உழைப்பாளர் நகர் அன்று உன்னத விழா கண்டது.
பிரதமர் மோடி கூட வீடு தோறும் கடைகள் தோறும் கொடி ஏற்றி கொண்டாடுங்கள் என்றுதான் கேட்டுக்கொண்டார். வீடு , கடைகள் தாண்டி ஊரே திருவிழா போல சுதந்திர தின விழாவினை கொண்டாடியது திருப்பூரில் மட்டும்தான்.
விடிந்ததும் விடியாத அதிகாலைப் பொழுதில் விழாவினை துவக்க தினமலர் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றால் அங்கே விடிவதற்கு முன்பாக திரளான மக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டிருந்தனர்.
குடிதண்ணீர், உணவு என்று எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது எல்லாம் நெஞ்சில் தாங்கவும் கையில் ஏந்தவும் ஒரு தேசியக்கொடியைத்தான் அதற்கு பஞ்சமே இல்லாமல் தினமலர் ஊழியர்கள் வாரி வழங்கினர்.
சிறுவன் ஒருவன் தேசியக் கொடியை கையில் வாங்கியதும் காலில் அணிந்திருந்த செருப்புகளை கழற்றி வீசிவிட்டு மூன்று கிலோமீட்டர் துாரத்திற்கு வீறு நடைபோட்டான். அவன் மனதிலும் முகத்திலும் தேசமெனும் தெய்வீகத்தை ஏற்றிப்பிடித்துவிட்ட பேரொளி.
ஊனமுற்றவர்கள் பலர் நாங்கள் மெல்லோட்டத்தில் ஒடமுடியாது. ஆனால் எங்கள் மூன்று சக்கர நாற்காலியில் வரவிரும்புகிறோம். அனுமதிப்பீர்களா என்று ஆதங்கத்துடன் கேட்டனர். அனுமதிப்பதாவது நீங்கள்தான் இந்த மெல்லோட்ட பேரணிக்கு தலைமையே தாங்குகிறீர்கள் என்று சொல்லி தினமலர் வெளியீட்டாளர் எல். ஆதிமூலம் அவர்களை முன்னிலை பெறச்செய்தார்.
பேச்சைவிட செயலை அதிகம் விரும்பும் அவரே களத்தில் இறங்கி முதல் ஆளாக தனது மெல்லோட்டத்தை துவக்கினார்.
அவரைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் கொடியுடன் வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என அதிரும் கோஷத்துடன் பின் தொடர்ந்தனர்.
இந்த இளைய தலைமுறையிடம் தேசபக்தி இல்லை என்று இனி யாரும் சொல்லமாட்டர்கள். அவர்களிடம் சரியான விகிதத்தில் சரியான முறையில் தினமலர் தேசபக்தியை ஏற்படுத்திவிட்டது என்று பார்வையாளர்களாக வந்திருந்த பெரியவர்கள் பலர் பெருமிதப்பட்டனர்.
முகத்தில், முதுகில், நெஞ்சில், நெற்றியில் மூவர்ண கொடியின் சின்னத்தை ஏந்தியபடி பலரும் பல விதத்தில் பங்கேற்றனர்.
சிறிதும் இடைவெளியின்றி தொடர்ந்து அந்த மெல்லோட்ட பேரணியில் 450 அடி நீள கொடியினை தாங்கிப்பிடித்தபடி வந்ததுதான் பிரதான விஷயம். அந்தக் கொடியினை தாங்கிப்பிடித்தபடி வந்த ஆயிரக்கணக்கான பேர்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு தாய்குலமும் உண்டு.
பிறந்த சில மாதங்களே ஆன தனது கைக்குழந்தையை ஒரு கையில் ஏந்தியபடியும், தேசியக்கொடியை மறுகையில் தாங்கியபடியும் மூன்று கிலோமீட்டர் துாரத்திற்கு நடந்தே வந்தார்.
ஏம்மா கைக்குழந்தையுடன் கஷ்டப்படுகிறாய் கொஞ்சம் கொடியை விட்டுவிட்டு நடக்கலாமே என்று ஒருவர் அக்கறையுடன் கேட்டதற்கு , நான் கஷ்டப்பட்டு நடக்கவில்லை இஷ்டப்பட்டு நடக்கிறேன். போலீசிடம் அடி உதை வாங்கியபோதும் கொடியை விடாமல் காத்த கொடி காத்த குமரன் பூமியிது. நான் எப்படி கொடியின் பிடியை விட்டுவிட்டு நடப்பேன் என்று முன்னிலும் அதிக கம்பீரத்துடன் கொடியை பிடித்தபடி நடந்தார்.
இதுதான் இந்த மெல்லோட்டத்தின் வெற்றி. அந்தத் தாய் தனது தாய்பாலுடன் குழந்தைக்கு நிச்சயம் தேசப்பற்றையும் சேர்த்தே புகட்டுவார் என்பது நிச்சயம்.
இப்படி எத்தனை எத்தனையோ தாய்மார்களையும், இளைஞர்களையும் தேசத்தின் மீது பாசம் கொள்ளச் செய்த தினமலருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி பாராட்டி கூட்டம் கலைந்தது.
இதே போல இதே திருப்பூரில் சுதந்திர தின 50வது ஆண்டு பொன் விழாவினையும், அறுபதாவது ஆண்டு வைரவிழாவினையும் நடத்திய தினமலர், இப்போது பாரதமே பாராட்டும் வகையில் 75 வது ஆண்டு பவளவிழாவினையும் நடத்தியுள்ளது. மூன்றிலுமே நான் கலந்து கொண்டது பெரிய பாக்கியம் என்று பேசியபடி பல பெரியோர்கள் கலைந்தனர்.
அடுத்து வரும் சுதந்திர நாற்றாண்டு விழாவிலும் நாம் சந்திப்போம் என்று சொல்லி அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தார் விழாவிற்கான காரணகர்தர் தினமலர் எல்.ஆதிமூலம்.
நாட்டுபற்றை வெளிப்படுத்தும் நல்ல விழாவில் கலந்து கொண்ட மகிழ்சியும் நெகிழ்ச்சியும் அனைவரது கண்களிலுமே காணப்பட்டது.
-எல்.முருகராஜ்
கோடி சலூட் அந்த பகுதி மண்ணின் மைந்தர்களுக்கு ..ஜெய் கிந்து