''அரசு, 'கேபிள் டிவி' குடுத்திருக்கிறது, அது, 'செட் - டாப் பாக்ஸா' இல்ல, 'செட் - அப் பாக்ஸ்'சான்னு தெரியலைங்க...'' என்றபடியே மசால் வடையை கடித்தார், அந்தோணிசாமி.
''அதுல என்ன பிரச்னை பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 2014ல இருந்து செட் - டாப் பாக்ஸ் குடுத்துட்டு வருது... அதை, 'ஆன்' செஞ்சதும், 'இன்போ' எனும் தகவல் சேனல் தான் முதல்ல திரையில வருமுங்க...''அதுல, தமிழக அரசு அல்லது கேபிள் 'டிவி' சம்பந்தமான தகவல்கள் வரும்... இப்ப என்னடான்னா, அரசு தகவல்களுக்கு பதிலா, தனியார் செய்தி சேனல்கள் தான் வருது... அரசின் தகவல் சேனலை ரெண்டாவது இடத்துக்கு மாத்திட்டாங்க...''அரசு கேபிள் 'டிவி'யில, இப்படி தனியார் சேனல்களுக்கு விளம்பரம் குடுப்பது, பல்வேறு விமர்சனங்களையும், சந்தேகங்களையும் உருவாக்கி இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கட்சிப் பதவிக்கு ஆள் பிடிக்க, ஆலா பறக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அண்ணாச்சி.
''யாருன்னு சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தினகரன் நடத்திட்டு இருக்கிற அ.ம.மு.க.,வின் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலரா, முன்னாள் மேயர் விசாலாட்சி இருக்காங்க... இவங்க, கட்சிக்கு உள்ளூர் நிர்வாகிகளை நியமிக்க முடியாம தவிக்காவ வே...''திருப்பூர் மாநகராட்சியில மொத்தம், 50 வார்டுகள் இருக்கு... ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கிளை செயலர் உட்பட, 12 நிர்வாகிகளை நியமிக்கணும் வே... ''ஆனா, இந்த, 50 வார்டுகள்லயும் மொத்தமாவே, அ.ம.மு.க.,வுக்கு, 40 - 50 உறுப்பினர்கள் தான் இருக்காவ... எங்க வார்டு கூட்டம் நடந்தாலும், இவங்க தான் மாறி மாறி கலந்துக்கிடுதாவ வே...
''இந்த லட்சணத்துல, கிளை நிர்வாகிகளை எப்படி நியமிக்கிறது... 'கட்சி பதவிக்கே, விளம்பரம் செஞ்சு தான் ஆள் பிடிக்கணுமோ'ன்னு கவலையில இருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.''சந்தேகப்படும்படியான நடமாட்டம் தென்படறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தென்காசி மாவட்டம், குற்றாலத்துல இருக்கற அடவிநயினார் அணைக்கு மேல, 100 குடும்பங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கு... இந்த நில உரிமையாளர்கள் பட்டாவை காட்டினா தான், அணையை தாண்டி நிலத்துக்கு போக, பொதுப்பணித் துறை காவலர்கள் அனுமதிப்பா ஓய்...''இப்ப பட்டா இருந்தாலும், 'கட்டிங்' வெட்டலைன்னா, மேல அனுமதிக்கறது இல்லை... 'நாங்க புகார் செய்வோம்'னு சொன்னா, 'இந்த கட்டிங், தலைமை பொறியாளர் வரை போறது... யார்ட்ட வேணாலும் சொல்லிக்கோங்க'ன்னு அலட்சியமா பேசறா ஓய்...
''பக்கத்துல இருக்கற கேரளா மற்றும் சில வெளிமாநில ஆட்கள் மட்டும், நெனச்ச நேரத்துல எந்த கெடுபிடியும் இல்லாம அணைக்கு மேல அடிக்கடி போயிட்டு வரா... ''அவாளை உள்ளூர் மக்கள் சிலர் கண்காணிச்சிருக்கா ஓய்...
இதுல, சிலர் தடை செய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவாளா இருக்கலாமோன்னு, அவாளுக்கு சந்தேகம் வந்துடுத்து... அதனால, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ.,வுக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''மாநில போலீசார், இந்த விஷயத்துல முழிப்பா இருக்க வேண்டாமா வே...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் பின்தொடர்ந்தனர்.
முதல்வர் நிகழ்ச்சியில் முளைக்கும் குறுக்கீடுகள்!
சுதந்திர தின வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட பெரியவர்கள் மத்தியில், ''பவளவிழா நாயகரை, 'தாராளமா' கவனிச்சிருக்காங்க பா...'' என்றபடியே அமர்ந்தார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''தி.மு.க., மாநில நிர்வாகியும், வழக்கறிஞருமான, 'சீனியர்' தன், 75வது பிறந்த நாளை இன்னைக்கு கொண்டாடுறாரு... இந்த விழாவுக்கான அழைப்பிதழை தன் ஆதரவாளர்கள் மூலமா, கட்சி நிர்வாகிகளுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் கொடுத்து அனுப்பினாரு பா... ''பவள விழாவை ஜாம், ஜாம்னு அமர்க்களமா கொண்டாடுங்கன்னு, 'அட்வான்ஸ்' வாழ்த்து சொன்ன கட்சி நிர்வாகிகள், 'தாராளமா கவனிச்சு' அனுப்பி வச்சிருக்காங்க...''விழாவுக்கு முன்னாடியே, வாழ்த்து மழையுடன், லட்சுமி கடாட்சமும் குவிஞ்சதால, கண் திருஷ்டி விழுந்துடுச்சாம்... 'விழா முடிஞ்சதும், திருஷ்டி பூசணிக்காய் சுத்தி போடணும்'னு, உடன்பிறப்புகள் கிசுகிசுக்குறாங்க பா....'' என்றார், அன்வர்பாய்.''தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா...'' என்ற, 'பாரதி'யின் பாடலை முணுமுணுத்தபடியே வந்த அந்தோணிசாமியே அடுத்த மேட்டரை தொடர்ந்தார்...''தமிழக அரசு மருத்துவமனை மருந்தகங்கள்ல, 889 பணியிடங்கள் காலியா இருக்கு... அதுக்கு மருந்தாளுனர்களை நியமிக்கப் போறாங்க... ''இந்தப் பணிக்கு, புதுசா ஆட்களை தேர்வு செய்றதுக்கு முன்னாடி, மருந்தக பணியில ஏற்கனவே முன் அனுபவம் உள்ளவங்களுக்கு வாய்ப்பு வழங்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குதுங்க...''கூட்டுறவு துறையின் கீழ், 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இயங்குது... அதுல, 20 வருஷத்துக்கும் மேலா பணிபுரியும் மருந்தாளுனர்களுக்கு முன்னுரிமை அளிக்கணும்னு அவங்க தரப்புல கேட்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி. ''முதல்வரை சுத்தி இருக்கிறவங்க பேரை சொல்லி மிரட்டுதாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''முதல்வர் கலந்துக்கிற அரசு விழாவுல, 'மைக் செட்' சரியா போட்டாவளா, அது ஒழுங்கா வேலை செய்யுதான்னு பொதுப்பணித் துறையின், 'ரேடியோ எலக்ட்ரானிக்ஸ்' பிரிவு அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு முன்னால ஆய்வு செஞ்சு சான்று தருவாவ வே...''போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற திட்டத்தை, சென்னை கலைவாணர் அரங்கத்துல முதல்வர் சமீபத்துல துவக்கி வச்சாருல்லா... அரங்கத்துல, மைக் செட் சரியா வேலை பார்க்குதான்னு சோதிக்க பொதுப்பணித் துறையினர் போனாவ வே...''ஆளுங்கட்சி, 'டிவி' ஊழியர் ஒருத்தர், 'நீங்க யாரும் வர வேண்டாம்... நாங்களே பார்த்துக்கிடுதோம்'னு சொல்லியிருக்காரு... 'பொதுப்பணித் துறை சான்று இல்லாட்டி சிக்கலாகி போகும்'னு சொல்லி இருக்காவ வே...''அவரோ விடாப்பிடியா, 'நான் முதல்வரின் உதவியாளர் தினேஷின் ஆள்... எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிடுதேன்... நீங்க இடத்தை காலி பண்ணுங்க'ன்னு கெத்து காட்டியிருக்காரு... அதிகாரிகளும் சத்தமில்லாம திருப்பிட்டாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''டில்லி செங்கோட்டையில பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியை, 'டிவி'யில பார்க்கணும்... கிளம்பறேன் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!