Load Image
Advertisement

பற்றுகொள்ளாமல் இருப்பது சாத்தியமா?

'எதன்மீதும் பற்று வைக்காமல் இருப்பதெல்லாம் சும்மா... அது நமக்கு சாத்தியமே இல்லை!' எனச் சொல்பவர்கள்தான் நமது வீடு முதல் நாடெங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்திருக்கும் பற்றுகளால் ஏன் முழுமையான ஆனந்தம் கிட்டுவதில்லை? தவறு எங்கே நிகழ்கிறது... சத்குருவின் இந்த பதில் விடை தருகிறது!

Question: உடைமைத் தன்மை இல்லாமலும், பற்று கொள்ளாமலும் இருப்பது எப்படி சாத்தியப்படும்?

சத்குரு:
யாரையோ அல்லது எதையோ ஏன் நீங்கள் உடைமைகொள்ள விரும்புகிறீர்கள்? ஏனென்றால், உங்களைப் பொறுத்தவரையில், உங்களுடைய ஒரு பகுதியாக, யாரையோ அல்லது எதையோ நீங்கள் இணைத்துக்கொள்வதற்கான ஒரு வழியாக அது இருக்கிறது. யோகா என்றால் அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் நிலையை அடைவது. உங்களது உடைமைத் தன்மையும் கூட யோகாதான். ஆனால் அது மிகவும் முட்டாள்தனமான, வலி நிரம்பிய ஒரு யோகா. மேலும், அது எப்போதும் முடிவில்லாததாகவும், ஏமாற்றம் தருவதாகவும் இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் நீங்கள் நினைக்கும் எல்லாவற்றையும் நீங்கள் ஒருக்காலும் உடைமை கொள்ளப் போவதில்லை. உங்களால் உடைமைப்படுத்த முடியாதவை எப்போதும் அதிகமாகவே இருக்கும். ஆக அதன் இலக்கு ஒருபோதும் நிறைவேறாது. ஆகவே உடைமை கொள்வதற்கான அவசியமில்லாமலே, எல்லாவற்றையும் உங்களில் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஒன்றை அனுபவிப்பதற்கு, யாராவது ஒரு காகிதத்தில் அது உங்களுடையது, உங்களுடையது மட்டும்தான் என்றெல்லாம் எழுதித் தர வேண்டுமா? ஆனால் வாழ்க்கையில் நீங்கள் கேட்பதென்னவோ அதுதான். எதையாவது அனுபவிக்க வேண்டுமென்றால், அது உங்களுடையதாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையைக் கொஞ்சி மகிழவும் கூட, அது உங்களுடைய குழந்தையாக இருக்க வேண்டும். யாராவது உங்களுடைய மரபணுவை சோதித்து, அது உங்கள் உடலிலிருந்துதான் வந்துள்ளது, வேறு யாருடைய உடம்பிலிருந்தும் வந்ததல்ல என்று கூறவேண்டும். எனவே ஏதோ ஒன்று எப்படி இருக்கிறதோ அதை அதே நிலையில் உங்களால் அனுபவிக்க முடியவில்லை. ஏதோ ஒரு விஷயம் உங்களுக்கு மட்டும் சொந்தமாக இருக்கிறது என்பதுதான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கின்ற ஒரே சிறிய சந்தோஷம். உங்களுக்குச் சொந்தமாக இருக்கும் ஏதோ ஒன்று மற்ற அனைவருக்கும் கூட சொந்தமாக உள்ளது என்றாலும், உங்களால் அதை அனுபவிக்க முடியாது. இது ஒரு வக்கிரம் மற்றும் நோய். அது உங்களுக்கு சொந்தமாக, உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தால்தான் உங்களால் அனுபவிக்க முடிகிறது. அல்லது உங்களிடம் இருப்பது வேறு எவரிடமும் இல்லை என்றாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நிச்சயமாக இது நோய்தான்.

துரதிருஷ்டவசமாக 95 சதவீத மக்கள் உளவியல்ரீதியாக நோயுற்றிருக்கின்றனர். அவர்கள் உடுத்தியிருப்பது போன்ற ஆடைகளை வேறு ஒருவரும் அணிந்திருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்களால் அந்த ஆடையை அனுபவிக்க முடிகிறது. அனைவருமே அதை அணிந்திருக்கின்றனர் என்றால், அவர்களால் அதை அனுபவிக்க முடியாது. அவர்கள் ஒரு வீடு கட்டினால், வேறு எவரும் அந்த விதமான வீடு வைத்திருக்கக்கூடாது. அப்போதுதான் அவர்களால் அதை அனுபவிக்க முடியும். எந்த ஒரு விஷயத்திலும் எல்லாவற்றிலும் இதுதான் நிகழ்கிறது. இது மகிழ்ச்சியல்ல, இது நோய்தான்.

இப்போது நான் “உடைமைத்தனம் வேண்டாம்” என்று உங்களிடம் கூறினால், எந்தவிதத்திலும் நீங்கள் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது மிக ஆழமாக வேரூன்றிவிட்ட ஒரு பிரச்சனை. யாரோ ஒருவருடைய அறிவுரையினால் இது விலகப் போவதில்லை.

வேண்டுமானால் உங்கள் உடைமை விருப்பம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறக்கூடும். ஆனால் உடைமையாக்கிக்கொள்ளும் ஏக்கம் அல்லது தேவை மறைவதில்லை. எப்படியாவது நிறைவுபெற வேண்டும் என்பதுதான் உங்கள் எல்லா முயற்சிக்கும் காரணம். ஏனெனில், உங்களது முழுமையற்ற தன்மையை உங்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் முயற்சியுங்கள், அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது.
அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது என்பதை நீங்கள் உணர்ந்தால், புத்திசாலித்தனமாக மாற்றிக்கொள்ள வேண்டும். வேறொன்றை முயற்சிக்க வேண்டும். அது பலன் தந்தால், அந்தப் பாதையில் செல்லுங்கள். அது பலனளிக்கவில்லை என்றால், அதை விடுத்து, வேறு ஏதோ ஒன்றை முயற்சியுங்கள். ஆனால், காலப்போக்கில், இவைகள் எதுவுமே செயல்படவில்லை என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவைகள் எல்லாமே செயல்படக்கூடும் என்ற உணர்வை தற்காலிகமாக உருவாக்கும். ஆனால் பின்னர் அவை உங்களை ஏமாற்றிவிடும். எதையும் மேம்போக்காக முயற்சிக்க வேண்டாம்.

முழுமையாக முயற்சியுங்கள். நீங்கள் முழுமையாக முயற்சித்தால், 24 மணி நேரத்திற்குள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் ஆர்வமில்லாமல் அவ்வப்போது முயற்சிப்பதும், கைவிடுவதுமாக இருந்தால், அதை அறிந்துகொள்வதற்கு ஒரு ஆயுட்காலம் தேவைப்படும். உங்களது பிரச்சனை என்னவாக இருந்தாலும், அதற்குள் முழுமூச்சாக ஈடுபடுங்கள். 24 மணி நேரங்களுக்குள் இது சரியானது அல்ல என்றும், அது ஒருபோதும் செயல்படாது என்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள். அது நூறு சதவிகிதம் உங்களுக்குத் தெளிவாகிவிடும்.

நீங்கள் அதில் தெளிவுபெற்றுவிட்டால், நிச்சயமாக பாதை மாறுவீர்கள். உங்களது புத்திசாலித்தனம் மலர்ச்சி பெறும். நம்பிக்கை கொள்ளக் கூடிய ஒரே விஷயம் புத்திசாலித்தனம் மட்டுமே. ஏனெனில் உயிர் என்பது புத்திசாலித்தனம்தான். ஒரு மரம் பூக்கிறது, அது ஒருவிதமான புத்திசாலித்தனம். நீங்கள் கால் பதிக்கும் பூமியே புத்திசாலிதான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும் புத்திசாலிதான். உயிர் என்பதே ஒரு வகையில் ஒரு வெடித்தெழும் புத்திசாலித்தனம்தான். நீங்கள் எதைப் படைத்தல் என்று அழைக்கிறீர்களோ அதுவும், படைத்தவன் என்று நீங்கள் குறிப்பிடுவதும் உச்சபட்ச புத்திசாலித்தனம்தான். நீங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய ஒரே விஷயம் அதுதான். ஆனால் நீங்கள் முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே அந்த புத்திசாலித்தனம் இயங்கும்.

படைப்பின் ஒரு உயிர்த்துளியாக, நீங்கள் முழுமையான உயிர்ப்புடன் இருக்கும்போது மட்டுமே உச்சபட்ச நிலை நிகழும். நீங்கள் அதை அடையும்போதுதான் எல்லாம் இன்பமயம் என்பதைக் காண்பீர்கள். அதன்பிறகு எப்போதும் நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு கால்பந்து விளையாட்டு போல ஆட முடியும். அந்த நிலையில், விரும்பும்போது விளையாடவோ, விரும்பும்போது நிறுத்தவோ முடியும். அப்போது எதுவும் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.



வாசகர் கருத்து (1)

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சாமி நிறைய மனிதர்களை சந்திக்கவில்லை போலிருக்கிறது. ..ஆளை பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க. ஏதோ நாளை கடத்திகிட்டு இருக்கேன்பா. இப்படி சொல்பவர்களெல்லாம் பற்றற்றவர்களா தானே இருக்க முடியும். தற்கொலை செய்கிறவர்களும் வாழ்க்கை வெறுத்து பற்றற்று தான் செல்கிறார்கள்.. உனக்கு தான் ஐஸ் கிரீம் புடிக்கும்லா அதுக்காவது உயிர் வாழலாமேன்னு சொல்லி பார்த்தேன். ஐஸ் கிரேம்ல இப்பல்லாம் சக்கரை குறைவா போடுறாங்க ..அதனால் அதுவும் வெறுத்து போச்சுன்னாங்க. .அறிவுரை சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கடைபிடிப்பதற்கு தான் ஆள்கள் குறைவு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement