Load Image
dinamalar telegram
Advertisement

தியாகிகளுக்கு போலி வீட்டுமனை பட்டா!

தியாகிகளுக்கு போலி வீட்டுமனை பட்டா!


பில்டர் காபியை பருகியபடியே, ''போன அ.தி.மு.க., ஆட்சியில கோவை மாநகராட்சியில, 'டெண்டர்' முறைகேடு நடந்ததா விசாரணை நடந்துண்டு இருக்கோல்லியோ...'' என, குப்பண்ணா ஆரம்பிக்க, அவரை இடைமறித்து, ''அதான், 'மாஜி' அமைச்சர் வேலுமணி மேல வழக்கு போட்டு இருக்காங்களே பா...'' என்றார் அன்வர்பாய்.

''அவசரப்படாதேள்... இப்ப தி.மு.க., ஆட்சியில, அதே கோவை மாநகராட்சியில, 'அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்'னு சொல்லி, 'சிங்கிள் டெண்டர்' முறையை, 'ஓகே' செஞ்சிருக்கா ஓய்...

''கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதுக்கு, 'பல தடவை டெண்டர் போட்டும் ஒருத்தரும் வரல... வரவாளையும் விட்டுடக் கூடாதோல்லியோ'ன்னு ஆபீசர்ஸ் பதில் சொல்லி இருக்கா ஓய்...

''அதே மாதிரி, 'போர்வெல்' பராமரிக்கற வேலைக்கும் புதுசா, 'டெண்டர்' விடாம பழைய ஆட்களுக்கே கால நீட்டிப்பு வழங்கிண்டு இருக்கா... 1 கோடி ரூபாய் வரைக்கும் மாமன்றத்துல தீர்மானம் நிறைவேத்தி அனுமதி குடுக்க அதிகாரம் இருக்கு ஓய்...

''அதனால, 98 லட்சம், 99 லட்சம் ரூபாய்னு பிரிச்சு, முன் அனுமதி வாங்கி, மன்றத்துல பின்னேற்பு தீர்மானம் நிறைவேத்திடுறா... இதையெல்லாம் பார்த்து, ஆளுங்கட்சி கவுன்சிலர்களே புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''உயர் அதிகாரிகள் குழு திரும்ப முளைக்குதுங்க...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார் அந்தோணிசாமி.

''எந்த துறையில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் கட்டட அனுமதி கோரி வரும் கோப்புகள்ல, சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்தா அனுமதி வழங்க கூடாதுங்க... இது தான் விதி...

''சில கோப்புகள்ல, 90 சதவீத திட்ட வரைபடம் விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்... 10 சதவீதம் விதிகளை மீறி இருக்கும்... இப்படிப்பட்ட கோப்புகளை நிராகரிக்காம, உயர் அதிகாரிகள் குழுவின் ஆய்வுக்கு அனுப்புவாங்க...

''இப்படி உயர் அதிகாரிகள் குழு பரிந்துரையில ஒப்புதல் பெற்ற கட்டுமான திட்டங்கள், சில வருஷங்களுக்கு முன்னாடி சர்ச்சையில சிக்கிடுச்சுங்க... அதுக்கு பின், உயர் அதிகாரிகள் குழு நடைமுறையை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் பயன்படுத்தாம
இருந்தாங்க...

''இப்ப, மீண்டும் உயர் அதிகாரிகள் குழு பரிந்துரைக்கு ஏற்பாடு பண்றாங்க... 'இந்த உயர் அதிகாரிகள் குழு, சட்ட அங்கீகாரம் பெறாதது... நிர்வாக வசதிக்காக அமைக்கப்பட்டது... இவங்க அளிக்கும் பரிந்துரை, சட்டப்படி செல்லுபடியாகுமா'ன்னு சிலர் கேள்வி எழுப்பிஇருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''பாவம், சுதந்திர போராட்ட தியாகிகளையே ஏமாத்திட்டாவவே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் ஆறு பேருக்கு, 2008ல வீட்டுமனை பட்டா குடுத்தாவ... அந்த இடத்தை, தியாகிகள் கண்ணால கூட பார்க்கலை வே...

''இடத்தை காட்டாம வருவாய் துறையினர் அலைக்கழிக்காவ... தகவல் அறியும் உரிமை சட்டத்துல மனு போட்டப்ப, 'அந்த இடத்தையே கண்டுபிடிக்க முடியல'ன்னு பதில் வந்துட்டு வே...

''வயோதிகம் காரணமா சில தியாகிகள் இறந்தும் போயிட்டாவ... இல்லாத இடத்துக்கு குடுக்கப்பட்ட பட்டாவை வச்சுக்கிட்டு, தியாகிகளும் அவங்க வாரிசுகளும் அரசு அலுவலகங்களுக்கு நடையா நடக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''இந்த, 75வது சுதந்திர தினத்துலயாவது இவாளுக்கு நல்லது நடக்கறதான்னு பார்ப்போம் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • raja - Cotonou,பெனின்

    "2008ல வீட்டுமனை பட்டா குடுத்தாவ"... கட்டுமரம் ஆண்ட காலம் எப்படி விஞ்ஞான தனமா மாட்டிக்காம ஊழல் பண்ணலாமுன்னு உலகுக்கே வழிகாட்டியவர் அல்லவா .....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement