கட்சிகளின் இலவச அறிவிப்பு: முடிவு கட்டுவது அவசியம்
நாடு குடியரசு ஆன நேரத்தில், கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை பார்த்தே மக்கள் ஓட்டளித்தனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் தங்களின் பிரச்னைகள் பற்றி பேசுவதோடு, நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவர் என்று நம்பினர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என, எந்த தேர்தல் ஆனாலும், வாக்காளர்களை கவர இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவதை, அரசியல் கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இலவசங்கள் அறிவிப்பதை தவிர்த்து, தேர்தலை சந்திக்கும் தைரியம், எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை என்றே சொல்லலாம். உதாரணமாக, வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்குவதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு, தமிழகத்தில்2006ல் தி.மு.க., ஆட்சியை பிடித்ததையும், மாதந்தோறும், 200 யூனிட் மின்சாரம் என அறிவித்து, வடமாநிலம் ஒன்றில், பிராந்திய கட்சி ஆட்சியை பிடித்ததையும் கூறலாம்.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தேர்தல்களின் போது, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதாக, அரசியல் கட்சிகள் அறிவிப்பது, நாட்டின் தீவிர பொருளாதார பிரச்னை' என, உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கும்படி, மத்திய அரசுக்கும், நிடி ஆயோக், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி கமிஷன் போன்றவற்றுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேநேரத்தில், அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை வழங்குவது, நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஒப்புக் கொண்டுள்ள மத்திய அரசு, இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தின் கருத்தையும் ஏற்றுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின்படி பார்த்தால், எந்த அரசியல் கட்சியும், வாக்காளர்களுக்கு சலுகைகள், இலவசங்கள் அறிவிப்பதை தேர்தல் ஆணையம் உட்பட எந்த அமைப்பும் தடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்தால் இன்னென்ன இலவசங்களை தருவோம் என, எதிர்க்கட்சிகள் அறிவிக்கின்றன என்றால், ஆளும் கட்சியினர் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலாவதற்கு முன்னரே, பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவரும் வேலையில் ஈடுபடுகின்றனர். இவை எல்லாம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றதே.மேலும், ஒரு மாநிலத்தில் இலவசங்களை அறிவித்ததன் வாயிலாக, ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடித்தது தெரியவந்தால், மற்ற மாநில அரசியல் கட்சிகளும் அதையே பின்பற்றுகின்றன.
எனவே, இந்த விஷயத்தில் முதல் கட்டமாக தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, வேறு வகையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும். மேலும், ஆளும் கட்சியினர் தங்களின் பதவிக் காலத்தின் கடைசி ஆறு மாதங்களில், புதிய நலத்திட்டங்கள் அறிவிப்பதையும் தடை செய்ய வேண்டும். மக்களுக்கு இலவசங்களை அறிவிக்கும் போது, அதற்கான நிதி எப்படி பெறப்பட உள்ளது என்பதை தெரிவிக்கும்படி, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நிபந்தனை விதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் விஷயத்தில், பாரபட்சமின்றி, ஒரே விதமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.
அதற்கேற்ற வகையில் வழிகாட்டி குறிப்புகளையும் உருவாக்க வேண்டும். மத்திய அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, இந்த விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்தை பெற முற்பட வேண்டும். தேவைப்பட்டால், நிபுணர்கள் இடம் பெறும் கமிட்டி ஒன்றை அமைத்து, அதன் ஆலோசனைகளை, பரிந்துரைகளை பெறலாம். மொத்தத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், ஒரு செயல்பாட்டு முறையை விரைவில் உருவாக்குவது அவசியம். அதுவே நாட்டின் எதிர்காலத்திற்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!