தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: நாட்டின், 75வது சுதந்திர தின விழாவை, தேசியத் திருவிழாவாக கொண்டாட உள்ளோம். அதையொட்டி, தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில், பாத யாத்திரை துவங்கி உள்ளது.ஆக., 10ல் பொள்ளாச்சி, 11ல் தர்மபுரி, 12ல் விழுப்புரம், 13ல் சோளிங்கர் ஆகிய இடங்களில் நடக்கும் பாத யாத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். காந்தி நடத்திய தண்டி யாத்திரை போலவே, காங்கிரஸ் கட்சி நடத்தும் பாத யாத்திரை, மக்களின் மனதை நிச்சயம் கவரப் போகிறது.
டவுட் தனபாலு: ஏதோ புது படத்தை, 'ரிலீஸ்' பண்ற தயாரிப்பாளர் மாதிரி பேசுறீங்களே... காந்தியின் தண்டி யாத்திரையுடன் நீங்க நடத்துற யாத்திரையை ஒப்பிடுறது எல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா... தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்காக, நீங்க என்னதான் நடையா நடந்தாலும், 'எதுவும் நடக்காது' என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதி: 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் சார்பில், நிறைய படங்களை வெளியிடுகிறோம். ஹிந்தி படத்தையாவது விட்டு வைப்போம் என நினைத்தேன். அமீர்கானே நேரடியாக பேசினார். படம் பார்க்காமலேயே அவரது, 'லால் சிங் சத்தா'வை வெளியிட சம்மதித்தேன்.
டவுட் தனபாலு: தமிழக சினிமாவுல உங்க கொடி தான் உயர பறக்குது... சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம், 'ரெட் ஜெயன்ட்'ல சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறாங்கன்னு புகார்கள் எழுது... இப்ப, ஹிந்தி பட உலகத்துலயும் கால் பதிச்சிருக்கீங்க... ஆனா, நம்ம ஊர் மாதிரி, அங்க உங்க, 'பப்பு' வேகுமா என்பது, 'டவுட்'டு தான்!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: 'ஹிந்தி எந்த வடிவத்திலும் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படாது' என உதயநிதியின் தாத்தாவும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியிருந்தார். தற்போதைய எம்.எல்.ஏ.,வான அவரது பேரன் உதயநிதி, நடிகர் அமீர்கானின் ஹிந்தி திரைப்படமான, 'லால் சிங் சத்தா'வை வாங்கி, தமிழகத்தில் வினியோகம் செய்வதாக கூறியுள்ளார். இதில் தெரியும் விஷயம் என்னவெனில், அவர்களுக்கு அரசியலை விட வியாபாரமே முதன்மையானது.
டவுட் தனபாலு: தமிழக முதல்வரின் மகன், அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி, தன் படத்தை சிறப்பா வியாபாரம் செய்வார் என்பதால் தான், அமீர்கானே அவரை தேடி வந்திருக்கார்... அதனால அவங்க, அரசியலையும், வியாபாரத்தையும் பிரித்தே பார்ப்பது இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!
ரெட் ஜெயன்ட்' இப்ப, ஹிந்தி பட உலகத்துலயும் கால் பதிச்சிருக்கு... ஆனா, நம்ம ஊர் மாதிரி, அங்ககிட்டே, 'பப்பு' வேகாது. இங்கே உப்பை தின்னுட்டு அங்கே தண்ணீர் குடிப்பாங்களோ ??