Load Image
dinamalar telegram
Advertisement

சோரனின் தப்புக் கணக்கு!

சோரனின் தப்புக் கணக்கு!



'ஆளுங்கட்சியாக இருக்கும் போதே, அடுத்த தேர்தலை நடத்தி, இன்னும் ஐந்தாண்டுக்கு பட்டா போட்டு விட வேண்டியது தான்...' என்ற முடிவுக்கு வந்து விட்டார், ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன்.இங்கு காங்கிரஸ் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்தி வருகிறார் சோரன். இன்னும் இரண்டு ஆண்டு ஆட்சிக் காலம் உள்ளது. அதற்குள் அவருக்கு நெருக்கடிகள் அதிகரித்து விட்டன. ஜார்கண்டில் சுரங்க ஏலத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. தலைக்கு மேல் கத்தி தொங்குவதால், எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் உள்ளார் அவர்.
இதையடுத்து, 'சட்டசபையை கலைத்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தித்தால், மக்களின் அனுதாபத்துடன் ஆட்சியை பிடித்து விடலாம். மக்கள் செல்வாக்கு இருப்பதால், மத்திய விசாரணை அமைப்புகள் நம் மீது கைவைக்க தயங்கும்...' என்ற முடிவுக்கு வந்துள்ளார், சோரன்.

அவரது கட்சி நிர்வாகிகள், 'ஹேமந்த் சோரன் இல்லாவிட்டால், ஜார்க்கண்டை காப்பாற்ற வேறு யார் உள்ளனர்...' என்பது போன்ற வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அரசியல் பார்வையாளர்களோ, 'சோரன் தப்புக் கணக்கு போடுகிறார். இன்னும் இரண்டு ஆண்டு ஆட்சி காலம் உள்ள போது, முன்கூட்டியே தேர்தலை சந்தித்தால் அவருக்குத் தான் கஷ்டம்...' என்கின்றனர்.

அடுத்த முதல்வர் யார்?



'கட்சித் தலைவர்களின் செயல்களை கூட பொறுத்துக் கொள்ளலாம்; அவர்களது கைத்தடிகளின் நடவடிக்கைகள் தான் எரிச்சலை தருகின்றன...' என்று ஆவேசப்படுகின்றனர், மேற்கு வங்க மாநில மக்கள்.இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 'எப்படியாவது தேசிய அளவில், மிகப் பெரிய தலைவராகி விட வேண்டும்...' என்ற லட்சியத்துடன் கடுமையாக போராடி வருகிறார், மம்தா.
பா.ஜ., காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் வாயிலாக, தனக்கு நாடு தழுவிய அளவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும் என்றும் நம்புகிறார். தனக்கு பின் கட்சியின் தலைமை பதவிக்கு,தன் மருமகன் அபிஷேக்பானர்ஜியை நியமிப்பதற்கான முயற்சியிலும் மம்தா ஈடுபட்டுள்ளார். லோக்சபா எம்.பி.,யாக உள்ள அபிஷேக், திரிணமுல் கட்சியின் பொதுச் செயலராக உள்ளார். மம்தாவின் நோக்கத்தை புரிந்து வைத்துள்ள கட்சியின் நிர்வாகிகள், சமீபகாலமாக அபிஷேக்கின் புகழை பாடி வருகின்றனர். பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி... கட்சி நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும் சரி... மம்தாவை விட, அபிஷேக்கை தான் அதிகம் துாக்கிப் பிடிக்கின்றனர்.
'மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வரே, வங்கத்து சிங்கமே, மம்தாவின் அரசியல் வாரிசே...' என, அடுக்கடுக்காக அபிஷேக்கை புகழ்ந்து தள்ளுகின்றனர். மம்தாவும், இதை அனுமதிக்கிறார். மேற்கு வங்க மக்களோ, 'அடுத்த முதல்வர் யார் என்பதை, வாக்காளர்கள் தானே முடிவு செய்ய வேண்டும். இந்த கைத்தடிகளா முடிவு செய்வர்...' என, எரிச்சலுடன் கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement