Load Image
dinamalar telegram
Advertisement

22 ஆண்டுகள்... 2000 மேடைகள்.. கரிசல்காரி கவிதா ஜவஹர் பேட்டி

தமிழ் பட்டிமன்ற மேடைகளில் கர்ஜிக்கும் குரல்களுக்கு எப்போதும் தனி ரசிக பட்டாளமே உள்ளது. மாறி வரும் கலாசார சூழலில் இன்றளவும் தமிழ் இலக்கியத்தை விவாதங்களின் வாயிலாக தாங்கி பிடிப்பதில் பட்டிமன்றங்கள் இன்றியமையாதவை. 'கரிசல்காரி' என எல்லோராலும் அறியப்பட்ட கவிதா ஜவஹர், 2000 மேடைகளுக்கு மேல் பேசி 22 ஆண்டுகளாக பட்டிமன்ற பேச்சாளர் பயணத்தில் இருக்கிறார். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். எம்.காம்., பி.லிட்., பி.பி.டி., கூடவே தஞ்சை தமிழ் பல்கலையில் எம்.ஏ., தமிழ் படித்த இவர் தன் சொல் நடையால் தமிழ் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தினமலர் வாசகர்களுக்கு அளித்த பேட்டி....பேச்சு ஆர்வத்தை எப்போது கண்டறிந்தீர்கள்?
பள்ளி நாட்களில் பேச்சு, நடனம், மாறுவேட போட்டிகள் நடக்கும் போது ஒரு தயார்நிலை இருக்கும். ஆனால் பேச்சு போட்டி மாணவர்கள் சீருடையுடன் சாதாரணமாக வந்து வார்த்தைகளை கொண்டு மனதை ஈர்த்து வெற்றி பெறுவர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நுாலகம் செல்லும் வழக்கம் இருந்ததால் வாசித்த கதைகளை பெற்றோர், நண்பர்களிடமும் சொல்ல துவங்கினேன். படித்தவற்றை எல்லோரிடமும் பகிர வேண்டும் என்ற ஆர்வம் அதீதமாகவே பேச துவங்கினேன்.

தமிழ் ஆர்வம் பற்றிபடிக்கும் பழக்கத்தால் தமிழ் ஆர்வம் அதிகரித்து விட்டது. தமிழ் இலக்கியம் சொல்லி தரும் அறம், அன்பு, காதல், நட்பு, உறவுகள் மனதை பாதித்ததால் தமிழ் மீது நிறைய ஆர்வம் ஏற்பட்டது. மொழிகளின் தாயான தமிழை பேசுவதை தனிப் பெருமையாக நினைக்கிறேன். மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதற்காக தமிழை அதிகமாக வாசித்தேன். தமிழ் படிப்பவர்களாக இருந்தால் ஒரு போதும் யாரையும் வெறுக்க மாட்டோம். அனுசரணை, பணம் நிலையில்லை, மனம் நிலையானது போன்ற விஷயங்களை தமிழ் கற்று தருகிறது.

முதல் பட்டிமன்ற மேடை அனுபவம்கல்லுாரி 2ம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் பேசியது தான் முதல் பட்டிமன்றம். சமூக மேடை என்றால் 2000ல் ராஜபாளையத்தில் மக்கள் முன் பேசினேன். அது கைதட்டல்களையும், தன்னம்பிக்கையையும் பெற்று தந்தது.

பேச்சாளராக கடந்து வந்த சிரமங்கள்கிராமங்களில் இரவு 10:00 மணிக்கு தான் பட்டிமன்றம் துவங்கும். அப்போது பஸ் வசதிகளே இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்திப்போம். பஸ் ஸ்டாண்டுகளிலே காத்திருப்போம். வேலை பார்க்கும் இடத்தில் விடுப்பு வாங்குவது உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்தேன். மேடை ரீதியாக பெரிய பெரிய அறிஞர்களுக்கு சமமாக நிறைய படிக்க வேண்டி இருந்தது. காலப்போக்கில அதுவே அனுபவமாகவும் மாறியது.

விவாதம் செய்வது பட்டிமன்ற சாரம்சம். அவ்வாறு பட்டிமன்றத்தின் போது தங்களின் சுவாரஸியமான விவாதம்...சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் தகவல் தொழில்நுட்பம் நன்மையா, தீமையா என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. எதிரணியில் பேசியவர் பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் அவரது கவனச்சிதறலை தடுக்க அலைபேசியை வாங்கி வைத்து விட்டார், அதனால் தான் அவர் வெள்ளிப்பதக்கம் வாங்கினார் என்றார். நான் பதிலுக்கு, "பயிற்சியாளர் அலைபேசியை வாங்காமல் அவரிடமே கொடுத்திருந்தால் மற்ற வீராங்கனைகளின் ஆட்ட வழிமுறைகள், நிறை, குறைகளை ஆராய்ந்து தங்க பதக்கமே வாங்கி இருப்பார்." என்றேன். மாணவர்கள் மத்தியில் கைதட்டல் கிடைத்தது. சாலமன் பாப்பையாவும் 'அப்படி போடு' என்று அவர் ஸ்டைலில் பாராட்டினார்.சுகி.சிவம் தலைமையில் பட்டிமன்றத்தில் அப்பா பெருமை குறித்து பேசியது என்னை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது.

மறக்க முடியாத பாராட்டுக்கள், அங்கீகாரங்கள்இலக்கிய உலகில் அவ்வை நடராஜன் என் பேச்சை பாராட்டி எழுதிய கடிதம் மகிழ்ச்சி அளித்தது. தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு ஒருமுறை பாராட்டினார். அப்பா தொடர்பாக நான் பேசிய வீடியோவை நடிகர் அஜித்குமார் அவரது நண்பருக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். நடிகர் விஜய், என் குடும்பத்தாரை அழைத்து விருந்தளித்தார்.சக பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், ராஜா அவர்களது மேடைகளில் என்னை மேற்கோள் காட்டிய தருணங்கள் மறக்க முடியாதவை. சாலமன் பாப்பையாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது இளைய தலைமுறையில் நான் நன்றாக பேசி வருவதாக கூறியதை கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அதை மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்தேன்.

அப்பா பற்றி நீங்கள் பேசிய பட்டிமன்றம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. தங்கள் அப்பா பற்றி?அப்பா லோடுமேனாக இருந்தவர். எல்லா அப்பாக்களை போலவே தன்னுடைய உணர்வுகளை வெளிகாட்ட தெரியாத அப்பா தான் என்னுடைய அப்பாவும். அப்பாவை இழந்த பிறகு தான் அவர் யாரென்பதை உணர்ந்தேன். துரதிஷ்டவசமாக அப்பா பற்றிய பேச்சை என் அப்பா கேட்கவே இல்லை. இப்போது எனக்கு பெரும் ஊன்று கோலாக இருப்பது கணவர் ஜவஹர் தான். என் முதல் ரசிகர், விமர்சகர் அவர் தான்.

பேச்சாளராக விரும்பும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவதுஒரே நாளில் உயர்ந்து விட முடியாது. அந்த உயரத்தை அடைய எவ்வளவு பக்குவம் வேண்டும் என்பதை உணர வேண்டும். திறமை மூலம் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். நிறைய நல்ல பேச்சுக்களை கேட்டு நமக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (5)

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement