Load Image
dinamalar telegram
Advertisement

'தேர்தல் வரும் போது பாருங்க!'

'தேர்தல் வரும் போது பாருங்க!'



தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து, மதுரையில், அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசுகையில், 'மத்திய அரசு கூறியதால் தான், மின் கட்டண உயர்வு என, நம்ம, 'அணிலு' அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். அதே மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி சொன்ன போது செய்யவில்லை.
'பத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் சுபிட்சமாக இருந்தனர். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என, முதல்வர் நாடகமாடுகிறார். பொங்கலுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் அள்ளிக் கொடுத்தோம். தி.மு.க., ஐந்து பைசா கூட தரவில்லை' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தலுக்கு முந்தைய பொங்கலுக்கு துட்டு கொடுத்த உங்களையே மக்கள் மறந்துட்டாங்க... அப்ப அவங்க மட்டும் எப்படி இப்பவே கொடுப்பாங்க... தேர்தல் வரும் போது பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.

'உங்கள மாதிரி இருக்கணும்!'



திருப்பூர் கஸ்துாரி அம்மாள் மண்டபத்தில், எழுத்தாளர் லதா ஹரியின், 'வானளக்கும் வண்ணச் சிறகுகள்' கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது. இதில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசுகையில், 'தமிழகத்திலேயே, 'ஸ்டாப் வாட்ச்' வைத்துக் கொண்டு பேசும், ஒரே மேடை பேச்சாளர் நான் மட்டும் தான். நிகழ்ச்சி நடத்துவோர்
தாராளமாக நேரம் வழங்கி விடுவர்; ஆனால், கேட்பவர்கள் அவ்வாறில்லை.'கூட்டத்தில் முன்வரிசையில் அமர்ந்திருப்போர் மிகவும் நல்லவர்கள்; எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்பர். நடுவரிசையில் நேரம் செல்லச் செல்ல நெளிவர்; தலையை சொறிவர். பின்வரிசையில் அமர்ந்திருப்போர் தான் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களின் உள்ளம் அறிந்து தான், எப்போதும் பேசுவேன்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'சரியா சொன்னீங்க... மைக் கிடைச்சா போதும்னு பல பேரு கொலையா கொல்றாங்க... எல்லாரும் உங்கள மாதிரி இருந்தா நல்லா இருக்குமே...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் அதை ஆமோதித்தனர்.

'ஏர்கூலர், ஏசி போட சொல்லுங்க!'



தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், கணக்கு குழு உறுப்பினர்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன், சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் வேலுார், மத்திய ஆண்கள் சிறையில் ஆய்வு நடத்தினர்.
சிறை வளாகத்தில் செல்வபெருந்தகை கூறுகையில், 'வேலுார் மத்திய சிறையில், கைதிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்; கைதிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்.
'கொசுக்கடியால் அவதிப்படுவதாக கைதிகள் கூறினர். அவர்களுக்கு கொசுவலை வழங்க பரிந்துரை செய்துள்ளோம். கைதிகளுக்கு பல்வேறு தொழில்கள் செய்ய பயிற்சிகள் அளிக்க வேண்டும். இது குறித்து, சட்டசபையில்
வலியுறுத்துவோம்' என்றார்.அப்போது, ஜாமினில் வெளியே வந்த ஒருவர், 'அண்ணே... உள்ள புழுக்கம் அதிகமா இருக்கு... 'ஏர்கூலர், ஏசி' எல்லாம் போட சொல்லுங்க... 'பிரிஜ்' இருந்தா ஐஸ் வாட்டரும் அடிக்கடி குடிச்சிக்குவோம்...' என முணுமுணுக்க, காவலுக்கு நின்ற காவலர் அவரை முறைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement